

அலுவலக அரசியல் என்பது திறமைக்கும் விதிகளுக்கும் அப்பாற்பட்டு, தனிப்பட்ட உறவுகள், செல்வாக்கு, பதவி உயர்வு போன்ற சுயலாப நோக்கங்களால் உருவாகும் மறைமுக ஆட்டமாக விளக்கப்படுகிறது. இதை சமாளிக்க வதந்திகளைத் தவிர்த்து, தொழில்முறை உறவுகளை வளர்த்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, பணியை ஆவணப்படுத்தி, நேர்மையும் திறமையும் காக்க வேண்டும் என்பதே கட்டுரையின் மையக் கருத்தாகும்.
அலுவலக அரசியல் என்பது ஒரு நிறுவனத்திற்குள் இருக்கும் ஊழியர்கள் தங்களின் சுயலாபம், பதவி உயர்வு, அதிகாரம் அல்லது செல்வாக்கை அடைவதற்காக மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வமற்ற, மறைமுகமான நடவடிக்கைகள் ஆகும். இது திறமை, விதிகள் மற்றும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட உறவுகள் மற்றும் செல்வாக்கை மையமாகக் கொண்டது.
அலுவலக அரசியலை புத்திசாலித்தனமாகக் கையாள சில முக்கிய வழிகள்:
அலுவலக அரசியலை நேர்மறையான முறையில் கையாள நம் வேலையில் கவனம் செலுத்துவதுடன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி ராஜதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம். வதந்திகளைத் தவிர்த்து நம் திறமைகளை வெளிப்படுத்துவதே இதற்கு சிறந்த வழியாகும்.
1. வதந்திகளை தவிர்த்துவிடுங்கள்:
அலுவலகத்தில் இருக்கும் எந்தவொரு ரகசிய குழுக்களிலும் (gossip group) இணைய வேண்டாம். அத்துடன் சகஊழியர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறுவதையோ அல்லது வதந்திகளைப் பரப்புவதையோ முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. நமக்கு சம்பந்தமில்லாத விவாதங்கள் அல்லது மோதல்களில் தலையிடாமல் நம் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது சிறப்பு.
இல்லையெனில் இதுபோன்ற செயல்கள் நம்மைச் சிக்கலில் மாட்டிவிடும். எனவே இம்மாதிரியான விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டாம். இப்படி அலுவலகத்தில் நடக்கும் வதந்திகள் மற்றும் புறணிப் பேச்சுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவில்லையெனில் பிறருக்கு நம் மீதுள்ள நம்பிக்கை குறைந்து விடும்.
2. தொழில்முறை உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்:
மேலாளர் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை அனைவரிடமும் நட்புடனும் மரியாதையுடனும் பழகுவது, சக ஊழியர்களுக்குத் தேவையான பொழுது நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து நல்லெண்ணத்தை உருவாக்கலாம். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நெகிழ்வுத்தன்மையுடன் வேலை செய்ய உறவு நல்ல முறையில் இருக்கும். அலுவலகத்தில் அனைவரிடமும் நட்பாகவும், அதேசமயம் நம் எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் பழக வேண்டும்.
நல்ல உறவுகள் ஆபத்தான அரசியல் நகர்வுகளைத் தவிர்க்க உதவும். பணியாளர்கள் மற்றும் மேல் அதிகாரிகளுடன் நேர்மறையான மற்றும் தொழில்முறை உறவை உருவாக்குவது தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதுடன் நமக்கு ஆதரவான சூழலையும் உருவாக்கும்.
3. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்:
அலுவலகத்தில் யாராவது நம்மைத் தூண்டினாலோ அல்லது கோபப்படுத்தினாலோ உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சூழ்நிலை கடினமாக இருந்தாலும், கோபப்படாமல் அமைதியாகவும் நிதானமாகவும் தொழில்முறை ரீதியாகவும் கையாள வேண்டும். ஆதாரங்களுடன் உண்மைகளை மட்டும் பேசுவது நல்லது.
அலுவலகத்தில் உள்ள அனைவரையும் நண்பர்களாகக் கருதி நம் குடும்பப் பிரச்னைகள் அல்லது நிதி விஷயங்களைப் பகிர்வதை தவிர்க்கவும்.
4. அலுவலக அரசியல் பிடியில் சிக்காமல் பணியை முறையாக ஆவணப்படுத்துங்கள்:
நாம் செய்யும் முக்கியமான பணிகள், திட்டங்கள் மற்றும் முடிவுகளை எழுத்துப்பூர்வமாக மின்னஞ்சல் போன்றவைகளில் சேமித்து வைப்பது நல்லது. வாய்மொழியாகப் பேசப்படும் விஷயங்களை விட எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் நம்மை தேவையற்ற பழிச்சொற்களில் இருந்து காப்பாற்றும். நாம் வேலையைத் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் முடித்து நம் திறமையை மேலாளர்களுக்கு வெளிப்படுத்தலாம்.
நம் உழைப்பும் திறமையும் மற்றவர்களின் அரசியலை விட நம்மை உயர்த்தி பிடிக்கும் சிறந்த ஆயுதங்கள் ஆகும். சிறந்த முடிவுகளைத் தருவதும், நம் இலக்குகளை அடைவதும் அலுவலக அரசியலைத்தாண்டி நம்மை நிலை நிறுத்த உதவும்.
5. தொழில்முறை மதிப்புகளை கடைபிடிக்கவும்:
மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும், நம் நேர்மையையும் திறமையையும் விட்டுக் கொடுக்காமல் இருக்கப் பழக வேண்டும். நாம் செய்யும் நல்ல வேலைகளைப் பற்றி சரியான நேரத்தில் உரியவர்களிடம் எடுத்துச் சொல்லத் தயங்க வேண்டாம். அமைதியாக உழைப்பது மட்டுமே போதாது. நம் பணிகளையும் சாதனைகளையும் மேலதிகாரிகள் அறியும் வகையில் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதும் அவசியம். நம் திறமைகளை வெளிப்படுத்துவதும் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
6. நிர்வாகத்தின் உதவி:
அலுவலக அரசியல் வரம்பு மீறிப்போய் மன உளைச்சலைத் தந்தாலோ அல்லது அவை நம் வேலையை பாதித்தாலோ ஆதாரங்களுடன் மனித வளத்துறை அல்லது நம் மேலாளரிடம் முறையிடலாம். அலுவலக அரசியல் என்பது நிறுவனத்தின் ஒரு பகுதிதான். அதை தவிர்ப்பதற்கு பதிலாக, நம் நேர்மையை பாதிக்காத வகையில் திறமையாகக் கையாள்வது நம் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும்.
அலுவலகச் சதிகளுக்குப் பலியாகாமல் உங்கள் தனித்துவமான திறமையை மட்டும் நம்பி எதிரிகளை வென்று, தொழில் வாழ்க்கையில் அசைக்க முடியாத உயர்வை அடையலாம்.