
தியானம் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தும் யோக முறை. ஆதலால்தான் இதனை ‘ராஜயோகம்’ என்கிறோம். யோகம் எனப்படும் உடலை வலுவாக்கும் பயிற்சிகளுக்கு எல்லாம் அரசனைப் போன்றது.
அமைதியான சூழலில் காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் கண்களை மூடி மனதை இரு நெற்றிப் பொட்டுக்கு நடுவே குவித்து செய்யப்படும் மனக்குவிப்பு பயிற்சியே தியானம்.
இது உடலுக்கும், மனதுக்குமான ஒத்திசைவை மேம்படுத்துவது, கவனக் குவிப்பை அதிகரிப்பது, எந்த செயலிலும் மனம் ஒன்றி இயங்கப் பழகுவது, ஒரே இடத்தில் நாம் வெகுநேரம் அமர்ந்திருப்பதாலும் ஒரு செயலைத் தொடர்ந்து செய்வதற்கான மனத்திட்பத்தை அதிகரிப்பது ஆகியவை தியானத்தின் பலன்கள்.
மனதை நெற்றிப் பொட்டில் நிறுத்தி எண்ண அலைகளை கவனித்தாலே போதுமானது நாம் செய்யும் தியானம் நமக்குக் கைகூடும். ஆழ்ந்த தியானம் உடலில் பல நல்ல மாற்றங்களை உருவாக்குகிறது. எந்த விஷயம் சார்ந்தும் பதற்றமில்லாமல் யோசிக்கும் திறனை இது அதிகரிக்கிறது. மனதை சாந்தப்படுத்தி தெளிவைத் தருகிறது.
தியானத்தால் மூளை சுறுசுறுப்படைகிறது. மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு மேம்படுகிறது. இதனால் மூளை உற்சாகமாகி வலுப்பெறுகிறது. மன அழுத்தத்தால் உருவாகும் சைட்டோகின் என்ற சுரப்பியை கட்டுப்படுத்துவதில் தியானத்திற்கு முக்கியப் பங்குண்டு.
தினமும் குளித்து விட்டு 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல், மனம் இரண்டின் இயக்கமும் ஒருங்கிணைந்து செயல்படும். மூளை ஆரோக்கியம் பெறும். வாழ்வில் சுயக் கட்டுப்பாடு அதிகரிப்பதால் மன அமைதி மற்றும் மகிழ்ச்சி மேலோங்கும்.
மூளையில் சுரக்கும் டோபமைன் என்ற ஹார்மோன் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும். ஒருவர் உடலில் இந்த ஹார்மோன் போதுமான அளவு சுரந்தால்தான் மனதில் நிம்மதி கிடைக்கும். ஆழ்நிலை தியானம் டோபமைன் சுரப்பை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலை நேரம் தியானம் செய்ய ஏற்றதாகும். நாள் முழுக்க புத்துணர்வை தருவதோடு உடலுக்கான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சக்தி தியானத்துக்கு உண்டு.