

காலையில் கண்விழித்ததும் நாம் செய்யும் முதல் ஒரு மணி நேரச் செயல்கள்தான், அன்றைய நாள் முழுவதும் நமது உடலும் மனதும் சுறுசுறுப்பாக இருக்கப் போகிறதா அல்லது சோர்வடையப் போகிறதா என்பதைத் தீர்மானிக்கின்றன. நாம் அறியாமல் செய்யும் சில தவறான காலைப் பழக்கங்கள், இளமையையும் உற்சாகத்தையும் மெல்ல மெல்லப் பறித்துவிடுகின்றன.
கண்விழித்ததும் போனைத் தேடுவது:
இன்றைக்குக் காலையில் கண்விழித்த உடனேயே பலரின் கைகளும் கண்களும் தேடுவதும் கைபேசியைத் தான். அதில் வரும் தேவையில்லாத மெசேஜ்களையும் செய்திகளையும் பார்த்த அடுத்த கணமே, நமது மூளை நம்மையறியாமலேயே பதற்றமடையத் தொடங்குகிறது. இந்தத் திடீர் மன அழுத்தமானது, முகத்தில் உள்ள தோலின் நெகிழ்வுத்தன்மையைக் குறைத்து, சீக்கிரமே முகம் சுருங்கி வயதான தோற்றம் வர வழிவகுத்துவிடும்.
டிபன் சாப்பிடாமல் இருப்பது அல்லது இனிப்பு சாப்பிடுவது:
"உடல் எடை கூடிவிட்டது" என்று நினைத்துச் சிலர் காலை உணவைத் தவிர்ப்பார்கள். ஆனால், காலை உணவைத் தவிர்த்தால் உடலின் செரிமான சக்தி கெட்டு, உடம்பில் உள்ள நல்ல தசைகளின் அளவும் குறைந்துவிடும்.
அதேபோல, காலையிலேயே வெள்ளைச் சர்க்கரை அதிகம் நிறைந்த பேக்கரி பண்டங்களையோ அல்லது இனிப்புகளையோ சாப்பிடும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரே அடியாக உயரும். இது சருமத்தில் உள்ள நல்ல புரதங்களைச் சேதப்படுத்தி, தோலை விரைவிலேயே முதுமையடையச் செய்துவிடும்.
தண்ணீருக்கு முன் காபி, டீ குடிப்பது:
இரவு 7 முதல் 8 மணி நேர உறக்கத்திற்குப் பிறகு, நம் உடல் இயல்பாகவே லேசான நீர்ச்சத்து குறைபாட்டுடன் தான் இருக்கும். அந்த நேரத்தில், வெறும் வயிற்றில் சூடாகக் காபியோ டீயோ குடிக்கும்போது உடலின் நீர் வறட்சி மேலும் அதிகரிக்கும். இதனால் முகம் தன் பொலிவையும் ஈர்ப்பையும் இழந்து, சோர்வாகக் காணப்படும்.
வெயிலையும் நடைப்பயிற்சியையும் தவிர்ப்பது:
காலையில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தால், உடம்பின் இயற்கையான உயிரியல் கடிகாரம் குழம்பிப்போகும். காலை இளவெயில் உடலில் படும்போதுதான், தூக்கம் மற்றும் விழிப்புக்கான சுழற்சி சீராக நடக்கும்.
மேலும், காலையில் சிறிய நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்யாதபோது, கை, கால் மூட்டுகளுக்குச் செல்லவேண்டிய ஆக்சிஜன் அளவு குறைந்து, உடல் விறைப்பாகவும் சோர்வாகவும் மாறும்.
அவசர அவசரமாக வேலை செய்வது:
‘ஐயையோ... நேரமாகிவிட்டதே! பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே, கணவரை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமே, நானும் கிளம்ப வேண்டுமே!” என்கிற மனப்பதற்றத்தோடும் அவசரத்தோடும் ஒரு நாளைத் தொடங்கும்போது, அது நாள் முழுமைக்குமான மன அழுத்தத்தை விதைத்துவிடும். இப்படி தினமும் அவசரப்படும்போது, உடலின் செல்லுலார் ஆயுள் குறைந்து, இதயத்தையும் சருமத்தையும் சீக்கிரமே வயதாகச் செய்துவிடும்.
உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்க 5 விதிகள்!
1. தண்ணீர் அருந்துதல்: காலையில் பல் துலக்கியதும், காபி அல்லது டீ குடிப்பதற்கு முன் கட்டாயம் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
2. செல்போனுக்கு ஓய்வு: காலையில் கண்விழித்ததும் குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்காவது செல்போனைத் தொடாதீர்கள்.
3. மிதமான இளவெயில்: தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்களாவது மிதமான சூரிய ஒளியில் நிற்கவோ அல்லது நடக்கவோ செய்யுங்கள்.
4. சத்தான காலை உணவு: சர்க்கரை பண்டங்களைத் தவிர்த்து, பயறு வகைகள், முட்டை, காய்கறிகள் அடங்கிய ஆரோக்கியமான காலை உணவைச் சாப்பிடுங்கள்.
5. எளிய உடற்பயிற்சி: உடம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்க, காலையில் கை, கால்களை நீட்டி நிமிர்த்தி எளிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
அன்றாட வாழ்க்கையில் செய்யும் இந்தச் சிறிய மாற்றங்கள்தான், நமக்கு நீண்ட ஆயுளையும் நீடித்த ஆரோக்கியத்தையும் தரும்! நாள் முழுக்க பதட்டதமின்றி செயல்பட வைக்கும்.
இந்த எளிய காலை பழக்கங்கள் பின்பற்றுவதன் மூலம், உங்கள் உடலின் இளமையையும் மனதின் சுறுசுறுப்பையும் நீண்ட நாட்களுக்குப் பாதுகாத்து, நாள் முழுவதும் பதற்றமின்றி வாழ முடியும்.