

புதிய வீட்டில் குடியேறுவது வாழ்க்கையின் ஒரு முக்கியமான மகிழ்ச்சியான தருணமாகும். அந்த தொடக்கம் நல்ல ஆற்றலுடனும் அமைதியுடனும் அமைவதற்கு சில விஷயங்களை கவனிக்க வேண்டிய அவசியம்.
புது வீட்டில் குடியேறும் முன்பு வீட்டின் பாதுகாப்பு, சுத்தம் மற்றும் அத்தியாவசிய வசதிகளை உறுதி செய்வது பிற்காலத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க உதவும். புது வீட்டில் குடி புகுவதற்கு முன்பு, பொருட்களை வீட்டிற்குள் கொண்டு செல்வதற்கு முன்பு பராமரிப்புக்காக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உள்ளன.
சட்ட ஆவணங்கள் மற்றும் சாவிகள்:
கிரயப் பத்திரம் (Sale Deed), வரி ரசீதுகள் மற்றும் அனைத்து சாவிகளையும் சரிபார்த்து ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். அத்துடன் வங்கி ஆவணங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகைகளை லாரிகளில் அனுப்பாமல் நாமே பாதுகாப்பாக எடுத்துச் செல்வது நல்லது.
மின்சாரம் மற்றும் வயரிங் பரிசோதனை:
வீட்டில் உள்ள அனைத்து சுவிட்சுகள், சாக்கெட்டுகள், ஏசி பாய்ண்டுகள் மற்றும் கீசர் இணைப்புகளை சோதிக்கவும். மெயின் ஸ்விட்ச் போர்டு (MCB Box) சரியாக வேலை செய்கிறதா என்பதை எலக்ட்ரீஷியன் மூலம் சரி பார்ப்பது நல்லது.
ஸ்விட்ச் போர்டுகள், பிளக் பாயிண்டகள், மெயின் ஃபியூஸ் மற்றும் மீட்டர் ரீடிங்குகளை சரிபார்த்து பாதுகாப்பாக செயல்படுகின்றனவா என உறுதி செய்து கொள்வதுடன் மின்சார மீட்டர் ரீடிங்கைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் மற்றும் குழாய் இணைப்புகள்:
வீட்டிலுள்ள அனைத்து குழாய்கள், ஷவர்கள், கழிவறை இணைப்புகள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகளில் கசிவு அல்லது அடைப்பு உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளவதுடன், அனைத்துக்குழாய்கள் மற்றும் ஃப்ளஷ்களைத் திறந்து நீர் அழுத்தம் சரியாக உள்ளதா என்றும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
குளியலறை மற்றும் பால்கனிகளில் தண்ணீர் தேங்காமல் வடிகால் எளிதாக வெளியேறுகிறதா என்பதையும் சரி பார்க்கவும். அவசர காலத்தில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை நிறுத்தும் மெயின் சுவிட்ச் எங்குள்ளது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
சுவர்கள் மற்றும் தரை ஆய்வு:
சுவர்களில் ஈரப்பதம், விரிசல்கள் அல்லது பெயிண்ட் உரிதல் போன்றவை உள்ளதா எனப் பார்த்து, தேவைப்பட்டால் உடனடியாக சரி செய்யவும். தண்ணீர் குழாய்கள், வால்வுகள் மற்றும் சானிட்டரி பொருட்களில் கசிவு ஏதும் உள்ளதா எனப் பார்க்க வேண்டியது அவசியம்.
முழுமையான சுத்தம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு:
சாமான்கள் வைப்பதற்கு முன்பே அதாவது வீட்டில் குடியேறுவதற்கு முன்பே சமையலறை, தரை, சுவர் மற்றும் குளியல் அறைகளை நன்கு சுத்தம் செய்து கரையான், கொசு, எறும்பு மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்க மருந்துகள் அடித்துத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவும்.
அத்தியாவசிய சேவைகள்:
மின்சாரை இணைப்பு பெயர் மாற்றம், குடிநீர் வசதி, கேஸ் சிலிண்டர் இணைப்பு மற்றும் இணையதள (Wi-Fi) சேவைகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்வது நல்லது. சமையலறை சிலிண்டர் அல்லது பைப்லைன் கேஸ் இணைப்பிற்கான வசதிகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை சரிபார்த்து, முன்கூட்டியே முகவரி மாற்றத்திற்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் பராமரிப்புக் கட்டணம் மற்றும் விதிகளைக் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அத்துடன் பார்க்கிங் மற்றும் சங்க விதிகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதும் அவசியம்.
பொருட்கள் அளவு மற்றும் இடம்:
பீரோ, கட்டில், சோபா, ஃபிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பெரிய பொருட்கள் கதவு வழியாக உள்ளே செல்லுமா மற்றும் அவற்றுக்கான இடவசதி சரியாக உள்ளதா, அறைகளில் சரியாகப் பொருந்துமா என முதலில் சரிபார்க்கவும்.
முதல் நாள் அத்தியாவசியப் பெட்டி:
குடியேறிய முதல் நாளிலேயே எல்லாப் பெட்டிகளையும் பிரிக்க முடியாது என்பதால், உடனடியாகத் தேவைப்படும் அத்தியாவசிய உடைகள், துண்டுகள், மருந்துகள், சார்ஜர்கள், சமையல் பாத்திரங்கள், குளியலறைப் பொருட்கள் மற்றும் அவசரத் தொடர்பு எண்களைத் தனிப்பெட்டியில் தயாராக வைத்துக்கொள்வது நல்லது.
முகவரி மாற்றம் மற்றும் அக்கம் பக்கம்:
ஆதார், வங்கி கணக்கு, தபால், எரிவாயு இணைப்பு, காப்பீடு மற்றும் டெலிவரி செயலிகளில் புதிய வீட்டு முகவரியை மாற்றுவது மிகவும் முக்கியம். மேலும் அருகில் உள்ள மருத்துவமனைகள், மளிகைக் கடைகள் மற்றும் அக்கம் பக்கத்தினரைப் பற்றி அறிந்து கொள்வதும், அறிமுகப்படுத்திக்கொள்வதும் அவசர காலங்களில் உதவியாக இருக்கும். அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தால் அங்குள்ள குடியிருப்போர் நல சங்கத்தின் விதிமுறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் குப்பை சேகரிக்கும் முறைகளைக் கேட்டறிந்து கொள்ளவும்.
அனைத்தையும் ஏற்பாடு செய்த பின் பாரம்பரிய வழக்கப்படி நல்ல நாள் பார்த்துப் பால் காய்ச்சுவதுடன் அரிசி, தானியம், விளக்கு, மஞ்சள் மற்றும் தண்ணீர் நிறைந்த கலசம் போன்ற மங்கலப் பொருட்களை முதலில் வீட்டிற்குள் கொண்டு செல்வது நம்மை செழிப்புடனும் வளமுடனும் இருக்கச் செய்யும்.
புது வீடு குடியேறுவதற்கு முன்பே மின்சாரம், குழாய் இணைப்புகள், சுத்தம், முதல் நாள் அத்தியாவசியப் பெட்டி மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றை வரிசையாகச் சரிபார்த்து, எந்தச் சிக்கலும் இல்லாமல் நிம்மதியாகக் குடியேற இந்தப் பட்டியல் உதவும்.