
பணிஓய்வு பெற்று அட என்ன செய்வது என்று மன உளைச்சலுக்கு ஆளானவரானாலும் சரி, வேலைப் பளு தாங்க முடியாமல் ஐயையோ என்ன செய்வது என்று அலறுபவரானலும் சரி, தொடர்ந்து இடைவிடா வீட்டுவேலை, மற்றும் குழந்தைகளை பல்வேறு விதமாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் அலுப்புற்று மன அழுத்தம் கொண்ட பெண்மணிகளாக இருந்தாலும், சரி, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது 'நிக்ஸென்'. (NIKSEN)
இப்போது ட்ரெண்டிங் அது தான்!
நிக்ஸென் என்பது (ஹாலந்து என்று அறியப்படும்) நெதர்லாந்துவாசிகள் மேற்கொள்ளும் ஒரு ரிலாக்சேஷன் உத்தியாகும்.
இதற்குப் பொருள்: சும்மா இருப்பது!
அட, சும்மா இருக்கலாமா? அது சோம்பேறித்தனம் அல்லவா என்றோ, போரிங் என்றோ நினைத்து விடக் கூடாது.
அல்லது ஜாலியாக சனி, ஞாயிறுகளில் ஒரு உல்லாசப் பயணத்தை மேற்கொள்வது என்றோ அல்லது சமூக ஊடகங்களில் திளைத்து நேரத்தைப் போக்குவதென்றோ அர்த்தமல்ல.
இது யோகா மாஸ்டரிடம் சென்று கற்க வேண்டிய தியானமுமல்ல; எந்த ஒரு நிபுணரிடமும் போக வேண்டாம்; எந்தச் செலவும் இல்லை; குறிப்பிட்ட நேரமும் இதற்குக் கிடையாது.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சில கணங்களை திட்டமுடன் தீர்மானித்து சும்மா இருப்பதே நிக்ஸென்.
நிக்ஸெனை எப்படிச் செய்வது?
தேர்ந்தெடுத்த ஒரு இடத்தில் - உங்கள் வீட்டு அறையிலோ அல்லது, தோட்டத்திலோ - ஜாலியாக படுத்திருக்கலாம் அல்லது ஜன்னல் ஓரத்தில் ஈஸி – சேரில் உட்கார்ந்திருக்கலாம்.
மாடியில் படுத்து மேகமூட்டத்தைக் கவனிக்கலாம். உள்ளத்தில் இருக்கும் எரிச்சலைப் போக்கிக் கொள்ளலாம்.
அமைதியாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியிடலாம்.
மனதிற்குப் பிடித்த இதமான கீதங்களைக் கேட்கலாம். அல்லது ஓவியம் ஒன்றை ரசிக்கலாம்.
எதுவும் வேண்டாம் என்றால் பகல் கனவு ஒன்றைக் கண்டு வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கலாம். அங்கு உங்களுக்குக் கிடைக்கும் பாராட்டு மழையிலும் நனையலாம்!
வெளியிலே ஒரு நடை நடந்து மற்றவர்களைப் பார்த்து அவர்களின் நடை உடை பாவனைகளை ரசிக்கலாம்.
ஒரு பூங்காவிற்குச் சென்று அங்கு மதிய உணவை உண்ணலாம்.
இது தாங்க நிக்ஸென்.
இதனால் உங்கள் உடலும் உள்ளமும் ரீ சார்ஜ் செய்யப்பட்டு ஒரு புத்துணர்வு எழும்.
படைப்பாற்றல் கூடும்.
மற்றவர்களால் நமக்கு ஏற்பட்ட பாதிப்புகள், மற்றும் மன உளைச்சல்களை லெட் கோ (LET GO) என்று விட்டுவிட ஏதுவாக இருக்கும்; அவர்களை மன்னிக்கவும் மனம் வரும்!
Mindfulness என்று சொல்கிறோமே மன விழிப்பு அல்லது மனத்தெளிவு - அந்த நிலை உண்டாகும்.
முக்கியமான ஒரு விஷயம்; நிகழ்காலத்தில் வாழ உங்களை இது பழக்கப்படுத்தும். LIVING IN PRESENT என்ற இதன் பயன்கள் ஏராளம், ஏராளம்!
வாழ்க்கை என்றால் என்ன என்று உங்களை சில கணங்கள் சிந்திக்க வைக்கும். உங்கள் வாழ்க்கை லட்சியத்தை உருவாக்கும். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைப்பாட்டை மேற்கொள்ள வைக்கும்.
தூக்கமின்மை நீங்கும்.
அடிக்கடி மூட் என்று சொல்லும் மனநிலை மாறுபடுவது நிற்கும். அதிக கவன சக்தி உண்டாகும்.
ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அதனால் எதிர்மறை பாதிப்புகள் ஏற்படாமல் மனம் ஓய்வாக இருக்கச் செய்யும்.
இதனால் திடீரென்று இதுவரை விடை கிடைக்காத பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
ஊக்கமூட்டும் விவேகம் தோன்றி புதிய பாதையையும் காண முடியும்!
நீங்கள் யார் என்ற சுய விசாரம் கிளம்பி அதன் பயன்களைப் பெறவும் முடியும்.
‘அட, கிராமத்தில் காலை நான்கு மணிக்கு எழுந்து ஏராளமான வேலைகளைச் செய்யும் எங்க அம்மாவும் பாட்டியும், 'ஒரே அலுப்பா இருக்கம்மா, கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன்' என்று அடுப்படி ஓரம் செல்வதுண்டே' என்ற நினைவு உங்களுக்கு வந்தால் அதுவும் நிக்ஸென் தான்!
என்ன கிளம்பி விட்டீர்கள்? ஓ! இது நிக்ஸென் நேரமா?