நிலாச்சோறு அனுபவம்: அந்த நாளும் இனி வந்திடாதோ?

Nila soru Anubavam
Nila soru Anubavam
Published on

ப்பொழுதுமே குடும்பத்துடன் செய்யும் ஒவ்வொரு செயலும் பின் நாட்களில் சிறந்த அனுபவமாக இருக்கும். மொட்டை மாடியில் குடும்பத்துடன் தூங்குவது, அந்த சமயத்தில் அப்போது பெரிய அனுபவங்களை நமக்குத் தந்திருக்காது. ஆனால், காலம் செல்லச் செல்ல மொட்டை மாடியை பார்க்கும்போது கண்டிப்பாக அந்த நினைவுகள் திரும்பி மகிழ்ச்சியான தருணங்களை ஞாபகப்படுத்தும். எது ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு முறையும் நிலவை பார்க்கும்போதும், மொட்டை மாடியில் நின்று கொண்டு அல்லது படுத்து கொண்டு தூங்கும்போதும் இந்த அனுபவங்கள் நம் மனதில் நிழலாடும். அந்த சமயத்தில் பழைய நினைவுகளை அசை போடாமல் இருக்க முடியாது.

1. நிலாச்சோறு சாப்பிடுவது: பௌர்ணமி நாளில் நிலவொளி வெளிச்சத்தில் மல்லாந்து படுத்துக்கொண்டு நிலவை ரசிப்பதும், நட்சத்திரங்களை எண்ணுவதும் இப்படி எத்தனை எத்தனையோ நினைவுகள் வந்து மோதும். கூடவே சின்ன வயதில் ஒரு பெரிய வெங்கல உருளியில் சாதத்தை பிசைந்து, தொட்டுக்கொள்ள ஊறுகாயை வீட்டில் உள்ள குட்டீஸ் அனைவருக்கும் தனித்தனி சின்ன இலைத் துண்டில் வைத்து, கையில் சாதத்தை உருட்டி வைத்த அத்தைமார்களோ, அம்மாக்களோ நம் நினைவில் வந்து போகாமல் இருக்க மாட்டார்கள். அது ஒரு கனாக்காலம் என்று பெருமூச்சு விட்டு மௌனமாக கடந்து போவதும் உண்டு.

இதையும் படியுங்கள்:
மன முதிர்ச்சிக்கு வழிகாட்டும் 6 கொள்கைகள்!
Nila soru Anubavam

தொலைக்காட்சி, அலைபேசி என எதுவும் இல்லாத அந்த நாட்களில் இரவில் அனைவரும் வட்டமாக அமர்ந்து கையில் உருட்டித் தரும் சாதத்தை வாங்கி சாப்பிட்டு, எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாமல் ஆனந்தமாக பேசிக் கழித்த நாட்கள் அவை. அந்த நாட்கள் இனி வருமா என்றால் வரவே வராது. இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் யாரும் அதை விரும்புவதும் இல்லை.

2. அது ஒரு கனாக்காலம்: என்னதான் வெயில் அடித்துக் காய்ந்தாலும் சென்னையில் இரவு நேரத்தில் இதமான காற்று வீசும். வெயில் காலங்களில் வீட்டுக்குள் புழுக்கமாக இருக்கும். படுத்தால் தூக்கம் வராது. அதற்காக கோடை காலங்களில் மொட்டை மாடியில் நல்ல காற்று மற்றும் குளிர்ச்சிக்காக சற்று முன்னதாகவே தண்ணீர் தெளித்து வைப்பதும், தரை ஈரம் காய்ந்ததும் பாய் அல்லது ஜமுக்காளம் விரித்து படுத்துக் கொள்வதும் உண்டு. சில நாட்களில் நள்ளிரவில் குளிர் காற்றாலும், திடீர் மழையாலும் தூக்கம் கலைந்து அவசர அவசரமாக பாயை சுருட்டிக் கொண்டு வேகவேகமாக இறங்கி வீட்டுக்குள் ஓடிய அனுபவமும், அந்தக் கால 80கள் பிள்ளைகளின் மிகவும் சுவாரசியமான, நீங்காத நினைவுகளாகும்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே, படித்தது மறக்காமல் இருக்க இந்த 6 ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க!
Nila soru Anubavam

3. மொட்டை மாடி தூக்கம்: வீட்டில் கரண்ட் இல்லாதபொழுது மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிடுவதும், தூங்குவதும் என்ற வழக்கம் இருந்தது. சிறு வயதில் தினமும் மொட்டை மாடியில்தான் வெயில் காலத்தில் தூங்கும் பழக்கம் நிறைய குடும்பங்களுக்கு உண்டு. அப்போதெல்லாம் கொசு தொல்லை கிடையாது. ஏதோ ஒன்று இரண்டு கண்ணில் படும். கடித்தாலும் கண்டுகொள்ள மாட்டோம். குட்டி ட்ரான்சிஸ்டரை தலைமாட்டில் வைத்துக் கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கும் அனுபவம் அலாதியானது.

4. நட்சத்திரக் கதைகள்: அப்பொழுது தெருவில் இவ்வளவு பிரகாசமான லைட்கள் எல்லாம் இருக்காது. நிமிர்ந்து படுத்துக்கொண்டு வானத்தில் பளபளக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதும், நம் கூடப் பிறந்த பிறப்புகள், வீட்டு பெரியவர்கள் சொல்லும் நட்சத்திரக் கதைகளைக் கேட்டு மகிழ்வதும் சுவாரஸ்யமான நிகழ்வாகும். அதிலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைக் காட்டி கடவுள் அங்கிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பார்; தப்பு எதுவும் செய்யக் கூடாது, செய்தால் தண்டித்து விடுவார் என்று பயமுறுத்தி வைப்பதும், நாமும் நட்சத்திரங்களை சில சமயம் கடவுளாக எண்ணி கன்னத்தில் போட்டுக் கொள்வதும் உண்டு.

இதையும் படியுங்கள்:
பூண்டை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும் 9 எளிய வழிமுறைகள்!
Nila soru Anubavam

5. வடாம் வற்றலுக்குக் காவல் காப்பது: சின்ன வயதில் வீட்டு மொட்டை மாடியில் வடகம், வற்றலுக்குக் காக்கா ஓட்டிய அனுபவம் நம்மில் பலருக்கு இருந்திருக்கும். வீட்டில் இருக்கும் நண்டு சிண்டுகளையும், வயதான பெரிசுகளையும் ஸ்பெஷல் டூட்டி கொடுத்து காய வைத்திருக்கும் வடகத்தை காக்காய் தூக்கிக் கொண்டு செல்லாமலும், எச்சமிடாமலும் பார்த்துக் கொள்வதற்கு காவல் வைத்து விடுவார்கள்.

அந்த நாளும் இனி வந்திடாதோ என்று ஏங்காதவர்கள் இல்லையென்றே சொல்லி விடலாம். குடும்பத்தோடு ஒன்றாக இருந்து அரட்டை அடித்து சாப்பிட்டுக் கழித்தது போல் இன்னொரு நாள் கிடைக்காதா என்று அசை போடுபவர்கள் அதிகம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com