
இயற்கை மாறிக்கொண்டே இருப்பதால் பொருட்களை மாற்றும், நம்முடைய சுற்றுப்புறத்தையும் மாற்றத்தான் செய்யும். அது எப்படி மாறுபாடு அடைகிறது, அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
‘நீண்ட காலமாக இந்த வீட்டில் நல்ல சௌகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம். இப்போ ரெண்டு, மூணு வருஷமாகத்தான் கஷ்டமாக இருக்கிறது. நிம்மதியே இல்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை’ என்று சிலர் குறைபட்டுக் கொள்வதை நாம் கேட்டிருப்போம். அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், ‘உங்கள் வீடு அப்படியே இருக்கலாம். ஆனால், வீட்டின் உள்ளே பிரவேசிக்கிற உயிர் சக்தியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்’ என்கிறது ஃபெங் சுயி.
விரும்பத்தகாத மாற்றம் என்றும் அதைக் கூறலாம். அதற்கு சுற்றுப்புறமும் ஒரு காரணமாகலாம். அண்டை வீட்டுக்காரர் தமது வீட்டை விரிவுபடுத்திக் கட்டி இருப்பார். முன்புறத்திலோ, பின்புறத்திலோ ஒரு பெரிய புதிய வீடு கட்டப்பட்டிருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்ட வீட்டுக்கு அருகே ஒரு மரம் மளமளவென்று ஓங்கி வளர்ந்திருக்கலாம். இரண்டு மூன்று வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட முடிகிறது என்றால், ஃபெங் சுயி மாறுவதில் என்ன வியப்பு? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
அதற்கு உங்கள் வீடு கிழக்கு மற்றும் மேற்கு பார்த்த வீடாக இருக்கும் பட்சத்தில் உயிர் சக்தியை எப்படி அதிகரிக்கலாம் என்றால், கிழக்கு பிரிவு வீடுகளில் செடிகள், பூக்கள், பிரகாசமான விளக்குகள் போன்றவை உயிர் சக்தியை அதிகரிக்க உதவும். அவற்றை வைத்துப் பயன் பெறலாம். மேற்கு பார்த்த வீடுகளில் காற்றில் ஆடும் மணித் தொடர், ஸ்படிகக்கல் போன்றவை உயிர் சக்தியை அதிகரிக்க உதவும். அவற்றை வைத்து பயன் பெறலாம் என்கிறது ஃபெங் சுயி.
உங்களுக்கு நல்ல திசைகள் எவை என்று முதலில் தீர்மானியுங்கள். உங்களுடைய படுக்கை அறை எங்கே அமைய வேண்டும். எது உங்கள் உடல் நலத்துக்கு உகந்த இடம், நீங்கள் எங்கே உணவருந்த வேண்டும், எது வளம் நிறைந்த பகுதி என்பவற்றை அவற்றின் மூலம் அறியலாம். இதற்கான சிறந்த தேர்வு முறை என்னவென்றால், அந்த வீட்டில் அடிக்கடி நடந்து ஒவ்வொரு அறையிலும் ஆழ்ந்து அனுபவித்துப் பார்க்கும்பொழுது எந்தப் பகுதியில் எதை வைக்கலாம் என்பது நன்றாகத் தெரிந்து விடும். அதற்கேற்ப பொருட்களை வைத்துப் பயன் பெறலாம்.
கிழக்குப் பிரிவு வீடு என்றால் வடமேற்கில் சேமிப்பறை, மேற்கில் சமையலறை, தென்மேற்கில் படுக்கையறை வைப்பது கெடுதல். வடகிழக்கில் கழிப்பறை அமைப்பதும் கெடுதல்தான். நீங்கள் மேற்குப் பிரிவைச் சேர்ந்தவராயின் வடமேற்கு, வடகிழக்கு மற்றும் மேற்கு திசை நல்லது. இதை சரிவரப் புரிந்து கொண்டு செயல்படுத்தினால் நல்லது என்கிறது ஃபெங் சுயி.
உங்கள் வீடு தவறான வகையாக இருந்தால் என்ன செய்வது?
நீங்கள் கிழக்கு பிரிவினராய் இருந்து, மேற்கு பிரிவு வீட்டில் வசிக்கும்படி இருக்கலாம் அல்லது மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு பிரிவு வீட்டில் வசிக்கும்படி ஆகலாம். இப்படி சமரசம் செய்து கொள்ளும்படி ஆனதற்கு வருத்தப்பட வேண்டியது இல்லை. மாறாக, தவறான வீட்டில் இருந்தாலும் சரியான பலனைப் பெற, இருப்பதில் நல்ல இடமாகப் பார்த்து உறங்க வேண்டும். உங்கள் வளமைக்குரிய திசையில் தலை வைத்துப் படுங்கள். படுக்கையறையோடு இணைந்த கழிப்பறை இருக்குமாயின் அதன் கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருங்கள். அடுப்பின் வாய் உங்கள் அதிர்ஷ்ட திக்கு பார்த்தவாறு அல்லது எரிவாயு குழாய் உங்கள் அதிர்ஷ்ட திக்கில் இருந்து வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
செல்வத்தின் மூலஸ்தானம் தெற்கு. அங்கே ஒரு பிரகாசமான விளக்கு இருக்க வேண்டும். வீட்டுக்குள் உலர்ந்த பூக்களை விட்டு வைக்காதீர். நீங்கள் உங்களுக்குப் பொருத்தம் இல்லாத வீட்டில் இருந்தாலும் முறையான இயந்திரப்பொறி (Gadgets) மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். அது குறிப்பிட்ட பகுதியில் உயிர் சக்தியை ஊக்குவிக்கும். வீட்டின் முன்புற வாசலுக்கு அருகே மணித் தொடர் ஒன்றை கட்டித் தொங்க விடலாம். இதுதான் அதற்கான பரிகாரம்.
பொறுமை: பரிகாரங்களை 'சிகிச்சை' (cure) என்றும் சொல்வார்கள். ஒரு பரிகாரம் உடனே பலித்து விடாது. ஒரு க்யூர் நேர்மறை விளைவினை உண்டாக்கத் தவறினால் இன்னொன்றை பயன்படுத்தும்படி இருக்கும். எல்லாவற்றுக்கும் கால அவகாசம் கொடுத்து தீர்மானிக்க வேண்டும். நல்லவிதமான மாற்றம் ஏற்பட பொதுவாக ஆறு வாரங்கள் ஆகும். ஆறு வாரங்களில் பலன் கிட்டவில்லையானால் எவ்வித இயந்திரப்பொறியை எங்கு வைப்பது என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.
ஃபெங் சுயி சமநிலை பற்றியது. அது சரியாக இருக்க வேண்டும். எதையும் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்துங்கள். பூக்களோ, முகம் பார்க்கும் கண்ணாடியோ, நிறங்களோ எதுவாயினும் அளவுக்கு மீறினால் எதிர்மறையான சூழலை ஏற்படுத்திவிடும். அதனால் அது சரியாக இருக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறது ஃபெங் சுயி.