
நினைக்க மனம் கனக்கிறது. ஆனால் நிஜங்களை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்! மற்றவர்களிடம் பகிர அழுகை பீறிடுகிறது. அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த தலைமுறை முடிவுக்கு வரப்போவதை எண்ணும்போது இனி அத்தகையோரை பார்க்க முடியுமா? என்ற ஏக்கம் எழுகிறது.
வரும் 10/15 ஆண்டுகளுக்குள் அன்பாலும் பாசப்பினைப்பாலும் கட்டமைக்கப்பட்ட, தர்மத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட்ட மூத்த தலைமுறையினர் இவ்வுலகை விட்டு போக இருக்கிறார்கள்.
இவர்கள் இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலை எழுபவர்கள்; காலையில் பில்டர் காபி குடித்து நடை பயிற்சி செல்பவர்கள்; வீட்டு தோட்டம் பராமரிப்பவர்கள். தினமும் கோயிலுக்குச் செல்பவர்கள்; வழியில் சந்திப்பவர்களை வணங்கி அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள்; வழிபாடு இல்லாமல் உணவு உண்ணாதவர்கள்.
அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களது உலகமும் வித்தியாசமானது. திட்டமிட்டு செயலாற்றும் பாங்கு, வருவாய்க்கு எற்ற செலவு, சேமிப்புக்கு முக்கியத்துவம், தேவையான பேச்சு, திருவிழாக்களில் ஆர்வம், விருந்தினர் உபாச்சாரம், உணவு முறைகள், அன்றாட நடைமுறை, மற்றவர்கள் மீதானஅக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அனைத்துமே எதார்த்தமாகவும், மனிதநேயத்தோடும், இயற்கையாகவும், நாடகத்தன்மை கலவாமலும் இருக்கும்.
லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம்! தொலைபேசி எண்களை மனப்பாடமாகவும், டைரியிலும் பராமரிக்கும் பழக்கம் உடையவர்கள். முகவரியை தெளிவாக கூறுவார்கள். முடிந்தால் அழைத்துச் சென்று காட்டுவார்கள். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள். ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் வைத்து கொள்பவர்கள். கடவுள் மீது அதீத நம்பிக்கை, குடும்பம் மற்றும் சமூகத்தின் மீதான பயம்கொண்டவர்கள். எப்போதும் நாட்டு மாட்டுப்பால், கத்தரிக்காய், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.
உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா..? ஆம் எனில், நீங்கள் மட்டுமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள்! அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்! மரியாதை கொடுங்கள், அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்.
இல்லையெனில் அவர்களுடன் ஒரு அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் அழிந்து போய்விடும். அதாவது, மனநிறைவு, எளிமையான உத்வேகம் தரும் புனைவு இல்லாத வாழ்க்கை, நமது கலாச்சார வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்... உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை அளித்து அன்பை கொடுங்கள்.
நம் முன்னோர்களே நமது அடையாளம், நமது முகவரி, மற்றும் நமது பெருமை. இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம். ஆரோக்கியம் பேணுவோம். உடல் நலனிற்கு முக்கியத்துவம் தருவோம். கற்போம்; பாரம்பரியத்தை தூக்கிச்செல்லும் கலாச்சாரக் காவலராவோம்.