

பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பும் பொழுது ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கவும், நம் உரிமைகளை பாதுகாக்கவும் பூஜ்ஜியம் (Zero) பார்ப்பது மற்றும் தரப் பரிசோதனை செய்வது போன்ற முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும், இலவச சேவைகளையும் தெரிந்திருப்பது அவசியமாகும்.
பெட்ரோல் பங்கில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களும் மற்றும் நமக்கான உரிமைகளையும் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உஷாராக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. டிஸ்ப்ளே ஜீரோ (Zero):
எரிபொருள் போடுவதற்கு முன்பு, மெஷின் திரையில் '0.00' காட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. அடர்த்தியளவு (Density):
மீட்டரில் விலைக்குக் கீழே பெட்ரோல் / டீசலின் அடர்த்தி அளவு தினமும் மெஷின் திரையில் காட்டப்படும். பெட்ரோல் அடர்த்தி 720-775 kg/m3 வரையிலும் மற்றும் டீசலின் அடர்த்தி 820-860 kg/m3 வரம்பிற்குள் இருக்க வேண்டும். இதில் மாறுபாடு இருந்தால் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது.
3. விலை விவரம்:
அன்றைய தினசரி எரிபொருள் விலை மெஷினில் சரியாகப் புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
4. பணியாளரின் கவனம்:
நம் வாகனத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியர், இடையில் ரீடிங் மெஷினை மறைக்கிறாரா அல்லது நம் கவனத்தை திசை திருப்புகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். பெட்ரோல் போடும் போது ஊழியர்கள் யாராவது பேச்சுக் கொடுத்து நம் கவனத்தை திசை திருப்ப முயன்றால், மீட்டரில் இருந்து பார்வையை அகற்ற வேண்டாம்.
5. நுகர்வோராக நமக்கான உரிமைகள்:
இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சில உரிமைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அதைப் பற்றிய தெளிவு நுகர்வோரான நமக்கு அவசியம் வேண்டும்.
அளவை சரிபார்க்கும் உரிமை (5-Litre Test):
நமக்கு எரிபொருள் அளவில் சந்தேகம் இருந்தால், பங்கில் இருக்கும் அரசு முத்திரை இடப்பட்ட ஐந்து லிட்டர் சான்றளிக்கப்பட்ட அளவை பாத்திரத்தைக் (5L Conical Measure) கொண்டு அளந்து காட்டச் சொல்லலாம்.
தரப்பரிசோதனை (Filter Paper Test):
பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் இருந்தால், இலவசமாக ஃபில்டர் பேப்பர் கேட்டுப் பெற நமக்கு உரிமை உண்டு. அதனை வாங்கி அதில் சில துளிகள் பெட்ரோல் ஊற்றி சோதிக்கலாம். பெட்ரோல் கறை இல்லாமல் ஆவியாக வேண்டும்; கறை படிந்தால் கலப்படம் என்று பொருள்.
இலவச வசதிகள்:
ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் அனைத்து வாகனங்களுக்கும் இலவசமாக டயர்களில் காற்று/ நைட்ரஜன் நிரப்பும் வசதி இருக்க வேண்டும்.
பொது மக்களின் பயன்பாட்டிற்கு சுத்தமான குடிநீரும், சுகாதாரமான கழிவறை வசதியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இப்படி இலவசக் காற்று (Free Air), சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கட்டாயம் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் இருக்க வேண்டும்.
நம் மொபைல் வேலை செய்யாத அவசர சூழலில், பங்கில் உள்ள லேண்ட்லைன் தொலைபேசியை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலுதவிப் பெட்டி (First Aid Kit):
அவசர காலத்திற்குப் பயன்படுத்த முதலுதவிப் பெட்டி மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் அங்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
புகார் புத்தகம் (Complaint Book):
உரிமைகள் மறுக்கப்பட்டாலோ அல்லது முறைகேடுகள் நடந்தாலோ அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை எண் மற்றும் நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தை அணுகலாம். அல்லது ஏதேனும் முறைகேடு நடந்தால் அங்குள்ள புகார் புத்தகத்தைக் கேட்டு வாங்கி நம் புகாரைப் பதிவு செய்ய நமக்கு முழு உரிமை உண்டு.
பெட்ரோல் பங்குகளில் நடக்கும் முறைகேடுகளில் இருந்து தப்பித்து, உங்களுக்கான இலவச வசதிகள் மற்றும் கலப்படப் பரிசோதனை உரிமைகளை தைரியமாகக் கேட்க இந்த வழிகாட்டி உதவும்.