
மிக அதிகமாக விலை கொடுத்து குளிர்சாதனப் பெட்டியை வாங்கினால் மட்டும் போதாது. அதை சரியான முறையில் பயன்படுத்தவும் தெரிந்திருந்தால் மட்டுமே ஃப்ரிட்ஜ் நீண்ட காலம் உழைக்கும். இதோ,
ஃப்ரிட்ஜை பயன்படுத்தும்போது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.
ஒரு போதும் சமையலறையில் ஃப்ரிட்ஜை வைக்கக்கூடாது. சமையலறையிலிருந்து வரும் புகை காரணமாக ஃப்ரிட்ஜ் நிறம் மாறிவிட வாய்ப்புண்டு.
ஃப்ரிட்ஜின் கதவை அடிக்கடி திறந்து மூடக்கூடாது. இதனால் ஃப்ரிட்ஜின் ஆயுட்காலம் குறைந்துவிடும் என்று மட்டுமல்லாமல்,மின்சாரமும் அதிகமாக தேவை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஃப்ரிட்ஜைத் துடைக்கும்போது ஈரமான துணியால் துடைக்கக்கூடாது. நன்கு உலர்ந்த, காய்ந்த துணிகளைத்தான் பயன்படுத்தவேண்டும். ஃப்ரிட்ஜின் உள்பக்கம் துடைக்கும்போது சோப்புக்கட்டிகளை
பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது ஃப்ரிட்ஜின் உட்புறச் சுவரினை உடைத்துப்விடும். சோடா உப்பு கலந்த வெந்நீர் பயன்படுத்தியே ஃப்ரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யவேண்டும்.
ஃப்ரிட்ஜின் உள்ளே சூடான உணவுப் பொருட்களை வைக்கக்கூடாது. அதன் சூடு தணிந்த பிறகுதான் வைக்க வேண்டும்.
ஃபிரிட்ஜில் தேவைக்கு அதிகப்படியான பொருட்களை அடைத்துவைப்பதை தவிர்க்கவும். இதனால் ஃப்ரிட்ஜ் சீக்கிரமாக செயலிழக்கவாய்ப்பு அதிகம்.
ஃப்ரிட்ஜை ஓரிடத்தில் வைக்கும்போது அதற்கு "எர்த்" எனப்படும் நிலஇணைப்பு தருவது பாதுகாப்பானது.
ஃப்ரிட்ஜ் உள்ளே குறைந்த அளவு சமையல் பொருட்களை வைத்தாலும், அதிக அளவில் சமையல் பொருட்களை வைத்தாலும் மின்சாரச் செலவு ஒரே அளவில்தான் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
ஃப்ரிட்ஜின் உள்ளே எப்போதும் சாறு பிழிந்த எலுமிச்சம் பழத்தையோ, அல்லது கொஞ்சம் புதினா இலைகளையோ போட்டு வைத்தால் ஃப்ரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வருவதைத் தவிர்க்கலாம். மறக்காமல் வாரத்துக்கு ஒரு முறை எலுமிச்சையையும், புதினா இலை களையும் மாற்றி புதியது வைக்கவேண்டும்.
வீட்டில் அதிகமாக வெயில் படுமிடத்தில் ஃப்ரிட்ஜை வைப்பதைத் தவிர்க்கவும். இதனால் ஃப்ரிட்ஜ் சீக்கிரமாக பழுதாக வாய்ப்புண்டு.
ஃப்ரிட்ஜின் பின்பக்கம் சுவரிலிருந்து தள்ளியிருக்க வேண்டும். ஃப்ரிட்ஜின் பின் பக்கம் உள்ள கம்பி வலைகளை சுவரை ஒட்டி நெருக்கி வைக்கக்கூடாது. அந்தக் கம்பி வலையில் தண்ணீர் படவும் கூடாது.
மாதத்துக்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவுப்பொருட்களையெல்லாம் வெளியே எடுத்து வைத்து ஃப்ரிட்ஜை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கேடானா உணவுப் பொருட்களை அகற்றவும் வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ் பழுதானால் உடனே நல்ல ஒரு ஃப்ரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து அதை சரி செய்ய வேண்டும்.