

சிறுவயதில் பெற்றோர் சொன்ன ஒரு வார்த்தை, பல ஆண்டுகள் கழித்தும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்குமா? பலரின் அனுபவம் அதற்கான பதில் "ஆம்" என்பதாகவே இருக்கிறது. ஒரு கண நேர கோபத்தில் அல்லது கவலையில் பெற்றோர் சொன்ன ஒரு வாக்கியம், குழந்தையின் மனதில் ஆழமாகப் பதிந்து, அதன் தன்னம்பிக்கை, சுயமதிப்பு மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையைக்கூட மாற்றியிருக்கலாம்.
ஏன் சில வார்த்தைகள் மட்டும் மனதில் நிற்கின்றன?
"நீ எதையும் சரியாகச் செய்யமாட்டாய்", "உன் அண்ணனைப் பார்த்து கற்றுக்கொள்", "உன்னிடம் அந்த திறமை குறைவு, இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன்" போன்ற வார்த்தைகளை பல பெற்றோர் சாதாரணமாகக் கூறியிருக்கலாம். ஆனால் அந்தச் சொற்கள் குழந்தைகளுக்கு வெறும் கண்டிப்பாக இல்லாமல், தங்களைப் பற்றிய ஒரு தீர்ப்பாகப் பதிந்திருக்கலாம்.
ஆண்டுகள் கழித்து, அந்த நிகழ்வை குழந்தை நினைவுகூரும்போது, பெற்றோர் "நான் அப்படிச் சொன்னேனா?" என்று ஆச்சரியப்படுவது அசாதாரணமானது அல்ல. காரணம், அந்தச் சம்பவம் பெற்றோருக்கு ஒரு சாதாரண நாளின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.
ஆனால் குழந்தைக்கு அது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக மாறியிருக்கலாம்.
நான் என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
எனது பள்ளிப் படிப்பின்போது நான் சக மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் மிகவும் நன்றாகப் பழகுவேன். பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றிருக்கிறேன்.
ஒருமுறை பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டேன். ஆனால் அந்தப் போட்டியில் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. அதை அறிந்த என் அம்மா, "நீ பேசும்போது மூக்கை விரித்துக்கொண்டு பேசுவாய். அதனால்தான் உனக்குப் பரிசு கிடைக்கவில்லை" என்று சொன்னார்கள்.
அவர் சொல்ல வந்தது, மேடையில் நிதானமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேச வேண்டும் என்பதுதான். ஆனால் அவர் சொன்ன விதம் மட்டும் இன்றுவரை என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
அதன் விளைவாக, இன்றுவரை மேடையில் பேசத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் ஒரு தாழ்வு மனப்பான்மையும், "நான் சரியாகப் பேசுவேனா?" என்ற சிறிய தயக்கமும் தோன்றுகிறது.
அதேபோல, "உனக்கு நடனம் வராது", "உன்னால் பாட முடியாது" என்று சிலர் சொல்லும் வார்த்தைகள், அந்தக் குழந்தைக்குள் அந்தத் திறமையின் மீது ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால்கூட, அதை வெளிப்படுத்துவதில் தயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
சில நேரங்களில் அந்த ஒரு வாக்கியமே, அவர்கள் எடுத்து வைக்க வேண்டிய அடுத்த அடியைப் பின்வாங்கச் செய்துவிடுகிறது.
'நெகட்டிவிட்டி பயாஸ்' என்றால் என்ன?
உளவியலில் "Negativity Bias" என்ற கருத்து பரவலாக அறியப்படுகிறது. அதாவது, நல்ல அனுபவங்களைவிட எதிர்மறையான அனுபவங்களை மனித மூளை அதிக முக்கியத்துவத்துடன் நினைவில் வைத்துக்கொள்ளும் இயல்பைக் குறிக்கிறது.
ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கான அன்பான வார்த்தைகளைக் கேட்டிருந்தாலும், ஒரு சில கடுமையான வார்த்தைகள் மட்டுமே மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். இது குழந்தையின் பலவீனம் அல்ல; மனித மூளையின் இயல்பான செயல்பாடாகவே உளவியல் நிபுணர்கள் விளக்குகின்றனர்.
வார்த்தைகள் உருவாக்கும் சுயமதிப்பு
குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் குரலே அவர்களுக்கு உலகின் மிகப்பெரிய அதிகாரமாக இருக்கும். அவர்கள் கூறும் பாராட்டு தன்னம்பிக்கையை வளர்க்கும். அதேபோல் தொடர்ந்து ஒப்பிடுதல், குறை கூறுதல் அல்லது இழிவுபடுத்தும் வார்த்தைகள், குழந்தையின் உள்ளத்தில் "என்னால் முடியாது", "நான் போதுமானவன் அல்ல" என்ற எண்ணங்களை உருவாக்கக்கூடும்.
பல பெரியவர்கள் தங்களுக்குள் தொடர்ந்து ஒலிக்கும் விமர்சனக் குரல், உண்மையில் சிறுவயதில் கேட்ட பெற்றோரின் வார்த்தைகளின் எதிரொலியாக இருக்கலாம் என்பதை பின்னர்தான் உணர்கிறார்கள்.
மறந்துவிட்டார்கள் என்பதால் காயம் மறையாது
ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், பெற்றோருக்கு அந்த நிகழ்வு நினைவில் இல்லாததால், குழந்தையின் மனக்காயம் இல்லாததாக ஆகிவிடாது. அதேபோல், அவர்கள் நினைவில் வைத்திருக்கவில்லை என்பதற்காக திட்டமிட்டு காயப்படுத்தினார்கள் என்றும் சொல்ல முடியாது.
ஒரு வார்த்தை சொல்லப்பட்டிருக்கலாம். அது குழந்தையைப் பாதித்திருக்கலாம். அந்தச் சம்பவம் பெற்றோரின் நினைவில் இல்லாமலும் இருக்கலாம். இந்த மூன்று உண்மைகளும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியும்.
உறவுகளை மீட்டெடுக்கும் உரையாடல்
குடும்ப உறவுகளில் பல பிரச்னைகள், ஒருவர் சொன்னதற்கும் மற்றொருவர் உணர்ந்ததற்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்து உருவாகின்றன. இத்தகைய சூழலில் குற்றம் சாட்டுவதைவிட, ஒருவரின் அனுபவத்தை மற்றொருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதே முக்கியம்.
"அது உன்னை இவ்வளவு பாதித்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று பெற்றோர் மனதாரச் சொல்வதும், "அப்போது நான் மிகவும் காயமடைந்தேன்" என்று பிள்ளைகள் பகிர்ந்துகொள்வதும், பல ஆண்டுகளாக மனதில் இருந்த சுமையை குறைக்க உதவலாம்.
வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுப்போம்
குழந்தைகளின் மனதில் பெற்றோரின் வார்த்தைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு பாராட்டும் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்; ஒவ்வொரு கடுமையான விமர்சனமும் நீண்ட காலம் மனதில் பதிந்திருக்கலாம்.
அதே நேரத்தில், எல்லா எதிர்மறை அனுபவங்களும் வாழ்நாள் முழுவதும் காயமாகவே நீடிக்கும் என்று கருத முடியாது. அன்பான உறவு, திறந்த உரையாடல் மற்றும் உண்மையான மன்னிப்பு ஆகியவை பல மனக்காயங்களை ஆற்ற உதவுகின்றன. பேசும் முன் ஒரு கணம் யோசித்து தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், குழந்தையின் எதிர்கால மனநலத்திற்கான மதிப்புமிக்க முதலீடாக அமையலாம்.
பெற்றோர்கள் அறியாமல் சொன்ன வார்த்தைகள் உங்கள் தன்னம்பிக்கையைப் பாதித்திருந்தால், அதிலிருந்து விடுபட்டு மன அமைதியை மீட்டெடுக்கும் தெளிவு கிடைக்கும்.