

பொதுவாகவே காலையில் கண் விழித்தவுடன் வீடு குப்பையாகக் கிடப்பதைப் பார்த்தால் அந்த நாளே நமக்கு எரிச்சலாக ஆரம்பிக்கும். வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் வீட்டைச் சுத்தம் செய்ய நேரம் இருக்காது.
ஆனால், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி சில சின்னச் சின்ன வேலைகளைச் செய்து முடித்தால், மறுநாள் காலை உங்களுக்க மிகவும் பிரெஷ்ஷாக இருக்கும். அப்படி உங்கள் வீட்டைப் பத்து மடங்கு அழகாக மாற்ற, கிளீனிங் எக்ஸ்பெர்ட்ஸ் சொல்லும் 6 அட்டகாசமான இரவு நேரப் பழக்கங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.
சமையலறை மேடைகளைத் துடைக்கவும்!
நமது வீட்டில் உள்ள டாய்லெட் சீட்டை விட கிச்சன் சிங்க் தான் மிகவும் அசுத்தமான ஒரு இடமாம். தினமும் சமைத்து முடித்த பிறகு அங்கே தெறித்து விழும் எண்ணெய் மற்றும் உணவுத் துகள்களில் ஏராளமான பாக்டீரியாக்கள் உருவாகும். அதனால் தூங்குவதற்கு முன்பு கிச்சன் மேடை மற்றும் சிங்கை ஒரு நல்ல Degreaser வைத்து சுத்தமாகத் துடைத்துவிடுவது முக்கியம்.
அதிகம் பயன்படுத்தும் இடங்களைப் பெருக்கவும்!
வீட்டில் நாம் அடிக்கடி நடந்து செல்லும் இடங்களான ஹால், நுழைவாயில் மற்றும் சமையலறையில் நாள் முழுவதும் ஏராளமான தூசுகளும் குப்பைகளும் சேர்ந்திருக்கும். காலையில் இதைப் பார்த்து டென்ஷன் ஆவதைத் தவிர்க்க, இரவு தூங்கும் முன்பே ஒரு முறை சாதாரணமாகத் துடைப்பம் வைத்து இந்த அதிக பயன்பாடு உள்ள இடங்களை மட்டும் பெருக்கி விடுவது வீட்டை ரொம்பவே சுத்தமாகக் காட்டும்.
பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும்!
காலையில் எழுந்ததும் சிங்க் நிறைய எச்சில் பாத்திரங்களைப் பார்ப்பது ஒரு மோசமான உணர்வைத் தரும். அதிலிருந்து வரும் துர்நாற்றம் வீடே நாறும்படி செய்துவிடும். இதைத் தவிர்க்க, இரவு சாப்பிட்ட பாத்திரங்களை உடனுக்குடன் டிஷ்வாஷரில் வைத்துவிட வேண்டும். குறைவான பாத்திரங்கள் இருந்தால் கையாலேயே கழுவி முடித்துவிடுவது உங்களுக்கு மறுநாள் ஒரு நிம்மதியான தொடக்கத்தைக் கொடுக்கும்.
பாத்ரூம் கண்ணாடிகளைப் பராமரிக்கவும்!
நாம் காலையில் அவசரமாகப் பல் தேய்க்கும்போது கண்ணாடிகள் மற்றும் குழாய்களில் பேஸ்ட் கறைகளும் தண்ணீர் துளிகளும் தெறித்து அசிங்கமாக ஒட்டிக்கொள்ளும். இரவில் இதற்கென ஒரு பிரத்யேகமான Foaming Cleaner ஸ்ப்ரே அடித்து லேசாகத் துடைத்து வைத்தால், மறுநாள் நீங்கள் பாத்ரூம் செல்லும்போது அந்த இடமே எந்த ஒரு கறையும் இல்லாமல் பளிச்சென்று இருக்கும்.
சோபா மற்றும் தலையணைகளை அடுக்குங்கள்!
ஹாலில் இருக்கும் சோபாவில் உள்ள தலையணைகளை அழகாக அடுக்கி வைப்பதும், கலைந்து கிடக்கும் போர்வைகளை மடித்து வைப்பதும் உங்கள் வீட்டின் லுக்கையே மாற்றிவிடும். வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால், அவற்றின் முடிகளை ஒரு ரோலர் வைத்து அகற்றி விடுவது வீட்டை இன்னும் நீட்டாகக் காட்டும். இதனால விலங்குகளின் வாடை வீட்டிற்குள் தங்குவதும் தடுக்கப்படும்.
துர்நாற்றங்களை நீக்கும் வழிகள்!
வீடு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் சில நேரங்களில் கெட்ட வாடை வரும். இரவு தூங்கும் முன்பு குப்பைத் தொட்டியை வெளியே வைப்பது அவசியமான ஒன்று. அதேபோல, வீட்டில் உள்ள ஸ்க்ரீன்கள் மற்றும் கார்பெட்களில் Fabric Refresher அடித்து வைக்கலாம். கிச்சன் மற்றும் பாத்ரூம் குழாய்களில் அடைப்பு, வாடை இருந்தால், தூங்கும் முன்பு கொஞ்சம் கிளீனர் ஊற்றி வைத்தால் காலையில் அந்த துர்நாற்றம் அறவே இருக்காது.
இந்த ஆறு வேலைகளையும் செய்ய உங்களுக்கு அதிகபட்சம் ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இது மறுநாள் காலையில் உங்களுக்குத் தரும் அந்த நிம்மதியான மனநிலைக்கு அளவே கிடையாது.