வைரமும் கண்ணாடித் துண்டும்: மதிப்பை உணர்த்தும் வாழ்க்கைப்பாடம்!

Life lessons
Life lessons
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதில் மிக முக்கியமானது, நாம் கொடுக்கும் முக்கியத்துவமும் மதிப்பும் எப்போதும் மறுமுனையிலிருந்து சமமாகத் திரும்பக் கிடைப் பதில்லை என்பதை உணர்வதாகும். இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொள்வதே மன அமைதிக்கான முதல் படிக்கல்லாக அமைகிறது.

வைரமும், கண்ணாடித் துண்டும்

ஒரு புகழ்பெற்ற வைர வியாபாரி தன் மகனிடம் ஒரு அரிய வைரத்தைக் கொடுத்து, ‘இதை எடுத்துக்கொண்டு போய் முதலில் ஒரு பழைய இரும்புக்கடைக்காரனிடம் விலை கேள்’ என்றார். அந்த இரும்புக்கடைக்காரர், ‘இது ஏதோ ஒரு கூழாங்கல் போல இருக்கிறது, இதற்கு பத்து ரூபாய் தருகிறேன்’ என்றான்.

அடுத்து ஒரு சாதாரண நகைக் கடைக்காரரிடம் சென்றான். அவர், ‘இது நல்ல கல், இதற்கு பத்தாயிரம் தருகிறேன்’ என்றார். இறுதியாக ஒரு வைரக் கலை நிபுணரிடம் சென்றான். அவர் அந்த வைரத்தைப் பார்த்து வியந்து, ‘இது விலைமதிப்பற்றது, என் கடையை விற்றாலும் இதன் விலையை ஈடுகட்ட முடியாது’ என்றார்.

ஒரே வைரக்கல்தான். ஆனால் அதை மதிப்பிடுபவர்களின் தகுதியைப் பொறுத்து அதன் விலை மாறியது. ஒருவரை இரும்புக்கடைக்காரர் மதிக்கவில்லை என்பதற்காக, அவர் வைரமாக இருப்பதை நிறுத்திவிட வேண்டிய அவசியமில்லை. தகுதியற்ற இடத்தில் மதிப்பை எதிர்பார்ப்பது வைரத்தைக் கூழாங்கல்லாக மாற்றுவதற்குச் சமம்.

மௌனமான விலகலின் சக்தி:

மதிப்பு இல்லாத இடத்தில் மீண்டும் மீண்டும் நியாயத்தை நிரூபிக்க முயற்சிப்பது, மூடிய கதவைத் தலையால் முட்டித் திறக்க முயல்வதற்குச் சமமானது. அங்கே செய்ய வேண்டிய மிக வலிமையான செயல் - 'மௌனமான விலகல்'.

இந்த விலகல் என்பது கோபத்தினால் எடுக்கப்படும் முடிவோ அல்லது பழிவாங்கும் எண்ணமோ அல்ல. இது முழுக்க முழுக்க சுயமரியாதையின் வெளிப்பாடு. "மதிப்பு இல்லாத இடத்தில் இனி இருப்பதில் பயனில்லை" என்று அமைதியாக நகரும்போது அங்கே இரண்டு நன்மைகள் நிகழ்கின்றன:

அந்த இடத்தில் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகிறது. அது இழந்தவற்றின் அருமையை மற்றவர்களுக்கு உணர்த்தக்கூடும். மிக முக்கியமாக, ஆரோக்கியமான சூழலில் வளர்வதற்கான ஒரு புதிய வழி பிறக்கிறது.

இதையும் படியுங்கள்:
சின்னச் சின்ன மாற்றங்கள்.. சிங்காரமான வாழ்க்கை! உங்கள் நாளை உற்சாகமாக்க இதோ வழி!
Life lessons

ஆற்றலைச் சேமிக்கும் கலை:

நேரம், உழைப்பு மற்றும் மன ஆற்றல் ஆகியவை ஒருவருடைய மதிக்கத்தக்க சொத்துக்கள். அவற்றை எங்கே முதலீடு செய்வது என்பதில் அதிகக் கவனம் தேவை. தவறான நபர்களிடம் உணர்வுகளைக் கொட்டி வீணாக்குவதைவிட, இலக்குகளை நோக்கி அந்த ஆற்றலைத் திருப்புவதே ஒருவரை வெற்றியாளராக மாற்றும்.

மன அமைதியைப் பாதுகாப்பது என்பது சுயநலம் அல்ல; அது ஒரு வகையான ஒழுக்கம். அந்த ஒழுக்கமே ஒருவரைச் சரியான பாதையில் வழிநடத்தும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதும், தகுதியற்ற உறவுகளில் இருந்து கண்ணியமாக விலகி இருப்பதும் மன வலிமையின் அடையாளமாகும்.

இதையும் படியுங்கள்:
பாத்ரூம் ஷவரில் இருக்கும் பிங்க் கலர் கறையை விரட்ட சூப்பர் ஐடியா.. இதோ ட்ரை பண்ணுங்க!
Life lessons

வெற்றியின் சூத்திரம்;

வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல விரும்புபவர்கள், எப்போது விலகவேண்டும் என்பதையும், எப்போது வளரவேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். கவனச்சிதறல்களைத் தவிர்த்து, சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே உண்மையான வெற்றி.

யாரோ ஒருவருக்காகத் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை. வைரத்தின் மதிப்பை அறிந்தவர்கள் அதை இயல்பாகவே மதிப்பார்கள். அந்தச் சரியான மனிதர்கள் மற்றும் சூழல்கள் அமையும் வரை, அமைதியையும் நேரத்தையும் பாதுகாப்பதே அறிவுடைமையாகும்.

எப்போதும் நினைவில் கொள்ளவேண்டியது இதுதான்: சில நேரங்களில் திரும்பி நடக்கத் தொடங்குவது தோல்வியல்ல, அது சரியான பாதையை நோக்கி எடுத்து வைக்கும் முதல் எட்டாகும்!

logo
Kalki Online
kalkionline.com