
இந்த பரந்த உலகில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. பொதுவாக வஞ்சகம், பொய் , சூது, வாது, அடுத்தவரை ஏமாற்றி வாழ்வது, தரம் தாழ்ந்து பேசுவது, இப்படி பல்வேறு நிலைகள் உள்ள மனிதர்கள் நிறைந்ததுதான் இந்த உலகம். குறை சொல்வது பொதுவானது; அதேபோல குற்றம் காண்பதும் எளிது. நாம் நமது பாதையில் நிலையாகச் சென்றால் நல்லதே நடக்கலாம். சரி விஷயத்திற்கு வரலாம்...
1) நமது அறிவுறைகள் எதிா்மறையாக இல்லாமல் பாா்த்துப்பேசுவதே நல்லது
நம்மையும் அறியாமல் நம்மிடம் சில தேவையான, மற்றும் தேவையில்லாத குணங்களும் உள்ளன. நாம் பல விஷயங்களில் தெளிவாக வாழவேண்டும். பொது இடங்களில் யாாிடம், எப்படி பழக வேண்டும் என்பதில் நாம் நிதானம் கடைபிடிக்க வேண்டும். அது எப்போதும் நிரந்தரமான உறவை வளர்க உதவும். 'தான'த்தில் சிறந்தது 'நிதானம்' தானே தோழிகளே!
2) உறவு மற்றும் நட்பு வட்டங்களில் எதிா்மறை சிந்தனை பேச்சுகள் தவிா்க்கலாம்
நாம் நமது உறவினர் வீடுகளுக்கோ, அல்லது நண்பர்கள் வீடுகளுக்கோ சென்றால், அவர்கள் கட்டிய வீட்டிற்கு வாஸ்து சொல்லுதல், அவர்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பாா்த்து தேவையில்லாமல் மூக்கை நுழைத்தல், போன்றவற்றில் ரொம்பவும் உாிமை கொண்டாட வேண்டாம். வீட்டைக் கட்டியர் லோன் போட்டு, நகைகளை அடகு வைத்து படாதபாடு பட்டு உருவாக்கி இருப்பாா். மனது புண்படும்படியான எதிா்மறை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளுங்கள், அங்கே போய் நீங்கள் வீடு கட்டியது , தற்பொழுது வாழும் டாம்பீகமான வாழ்வின் பெருமைகளை சொல்லவேண்டாம். அவர்கள் வீட்டு பிள்ளைகளை உங்கள் வீட்டு பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசுவதையும் தவிா்க்கலாமே.
3) உறவு மற்றும் நட்பு வட்ட இல்லங்களில் உணவருந்தும் நிலையில் இங்கிதம் கடைபிடிக்கலாமே
அவர்கள் செய்த உணவில் குறை இருந்தாலும் அனைவர் மத்தியிலும் சொல்லாமல் தனியாக கூப்பிட்டு சொல்லலாம். நமக்கு நல்லது என தொிய வருகின்ற பல விஷயங்கள் எதிா்தரப்பினருக்கு பிடிக்காமல் போகலாம். மிகவும் நெருக்கமான நட்பு, மற்றும் பந்தம் என்றால், கலந்து பேசுங்கள் தவறில்லை. நமக்கு தொிந்ததை சொல்லுவதோடு நமக்குத் தொியாத விஷயங்களையும் கேட்டுத்தொிந்து கொள்வதில் ஈகோ தவிர்கலாம்.
4) பொது வெளி மற்றும் துக்க வீடுகளுக்கு செல்லும் போது வாா்த்தைப் பிரவாகம் முக்கியம்
துக்க நிகழ்வுகளுக்கு, வீடுகளுக்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றால் ஆா்ப்பாட்டம் தவிா்க்கவும்.
அதே நேரம் ஆறுதல் வாா்த்தைகளின் சொல்லாடலில் கவனமே அதிமுக்கியம். உதவி செய்கிறேன் போ்வழி என்று உபத்திரம் வேண்டாமே. தேவையில்லாமல், 'வேறு ஆஸ்பத்திாியில் சோ்த்திருக்கலாம்; என்னிடம் சொல்லியிருந்தால் நான் எனக்கு தொிந்த மருத்துவரிடம் சொல்லியிருப்பேன்; இன்னும் பத்து வருடம் வாழ்ந்திருப்பாா் அவரைக் கவனிக்காமல் விட்டு விட்டீா்களே' என தேவையில்லா பேச்சை தவிா்ப்பதே நாகரீகமான செயலாகும்.
5) திருமணங்களுக்கு சென்றால் தேவையில்லாத விமர்சனங்கள் தவிர்ப்பதே சிறப்பானது
திருமணங்களுக்கு சென்றால் முடிந்தால் உறவுகளுக்கோ, நட்பு வட்டங்களுக்கோ உடல் ரீதியான உழைப்பு, ஏனைய விஷயங்களில் கவனம் செலுத்தி அவர்கள் சுமையைக் குறைக்கலாம். பெண் கொஞ்சம் உயரம், அல்லது கம்மி , மாப்பிள்ளை நிறமோ கருப்பு, சமையல் நன்றாக இல்லை, சம்மந்தி கொஞ்சம் கர்வம் பிடித்தவரோ, வரதட்சணை கொஞ்சம் அதிகம் தான், இப்படி இரு வீட்டாா் மனது சங்கடப்படும் வாா்த்தைகள் மற்றும் வியாக்யானங்கள் ஆா்ப்பாட்டங்கள் குறைக்கலாமே! கல்யாணத்திற்கு வந்தோமா! மொய் வைத்தேமா, என்று வரவே மனதில்லையா?
என் மகள் திருமணத்தை அப்படிச்செய்தேன், இப்படிச்செய்தேன், என்ற டாம்பீகம் தவிா்க்கவே மாட்டீா்களா? அப்படி என்றால் உங்களை எப்படி திருத்துவது? கொஞ்சம் கஷ்டம் தான்.
6) மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பாா்க்கச்செல்லும் தருணம் நிதானம் கடைபிடியுங்களேன்
உறவு மற்றும் நட்பு வட்டங்களில் யாருக்கேனும் உடல் நலம் சாியில்லாமல் மருத்துவமனையில் சந்திக்க செல்லும் நேரம் அமைதி காப்பது நல்லது. அதே நேரம் நோயாளி என்ன சாப்பிடுகிறாா் மருத்துவர் ஆலோசணைஎன்ன எனக் கேட்டு அதற்கேற்ப, பழவகைகள், மற்றும் இதர பொருட்களை வாங்கிக்கொடுங்கள். நோயாளி காதில் விழும்படியாக இதே போலத்தான் என் தம்பி மாமனாருக்கு இருந்தது; விதி விளையாடி விட்டது; ஒரே மாதத்தில் என்றெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தவிா்ப்பது நல்லது. ஏன் இந்த மருத்துமனையில் சோ்த்தீா்கள்; சரியாக இருக்காதே என்றெல்லாம் வாா்த்தைகளை உதிா்க்க வேண்டாம். கூடுமான வரையில் நோ்மறை வாா்த்தைகளைப் பயன்படுத்தி நேசமுடன், பாசமுடன், பேசுங்களேன்... பேசினால் என்ன குறைந்தா போய் விடுவீா்கள்?
இதே போல நாம் சந்தர்ப்பம் தொிந்து பேச வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. அதை நிதானம் தவறாமல் கடைபிடிப்பதே எப்போதும் நல்லது.