
என்னதான் விதவிதமான ஆடைகள் இருந்தாலும் இன்றும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பட்டுப் புடைவை அணிந்த பெண்களே அதிகம் காணப்படுகிறார்கள். பட்டுப் புடைவை அணிவதற்கு அழகாக இருந்தாலும், அதனைப் பராமரிப்பது என்பது ஒரு சவாலான விஷயம். நாம் அதிக விலை கொடுத்து ஆசையாய் வாங்கிய பட்டுப் புடைவை எத்தனை வருடமானாலும் சாயம் போகாமல், அதன் தன்மை மாறாமல் எப்படிப் பக்குவமாக சுத்தம் செய்யலாம்? பராமரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
முதலில் ஒரு புடைவையின் மேல் மற்றொரு பட்டுப் புடைவையை வைத்தால் உராய்வு ஏற்படும். இதனால் துணியின் தன்மை மோசம் ஆகிவிடும். அதனால், மஞ்சப்பையில் வைத்து பீரோவில் அடுக்கி வைக்க வேண்டும். இதனால் பட்டுப்புடைவை நீண்ட காலங்களுக்கு பளபளவென்று இருக்கும். அதேபோல், ஒரு நிகழ்ச்சிக்கு பட்டுப் புடைவையை அணிந்து சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் அதனை உடனடியாக மடித்து வைக்காமல், புடவையை நான்காக மடித்து காற்று உள்ள இடத்தில் காயப்போட வேண்டும். காய்ந்த பின்னரே மடித்து வைக்க வேண்டும்.
திருமணம், கோயிலுக்கு என அணிந்து செல்லும் புடைவையில் சில சமயம் கறை பட்டு விடும். அப்படி கறை ஏற்பட்டால் உடனடியாக ட்ரை வாஷிற்குக் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, பட்டுப் புடைவையை அடிக்கடி துவைக்கக் கூடாது. கறை இருக்கும் பகுதியில் வெட் டிஸ்யூ பயன்படுத்தி லேசாகத் துடைத்தாலே கறை நீங்கி விடும். அழுத்தித் தேய்த்தால் சாயம் போவதற்கு வாய்ப்பு உண்டு. இதுவே எண்ணெய் கறையாக இருந்தால் சிறிது பவுடர் அல்லது விபூதி சேர்த்து டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி பயன்படுத்தி துடைக்கலாம். கடலை மாவு அல்லது பச்சை பயறு மாவு கொண்டு எண்ணெய் கறையை நீக்கலாம். இதுவே நீக்க முடியாத எண்ணெய் கறையாக இருந்தால் ட்ரை கிளினிங்கில் கொடுக்கலாம்.
வீட்டில் பட்டுப் புடைவையை துவைப்பதாக இருந்தால் முந்தி தனியாக உடம்பு தனியாக முக்கி வைக்க வேண்டும். அதிலும் இதுபோன்ற புடைவையை துவைப்பதற்கு ரசாயனம் குறைவாக உள்ள பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அனுபவம் இருந்தால் மட்டுமே பட்டுப் புடைவையை வீட்டில் துவைக்கலாம்.
பட்டுப் புடைவைகளை வருடக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி பிழியாமல் நிழலில் உலர விட்டு அயன் செய்ய வேண்டும். அதேபோல் நேரடியாக அயர்ன் செய்யக் கூடாது. அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் காய விடக் கூடாது. சோப்போ, சோப் பவுடரோ உபயோகித்து துவைக்க கூடாது. வெறும் தண்ணீரில் மட்டும் அலசினாலே போதுமானது. பட்டு சேலையை எப்போதும் துணி பையில்தான் வைக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை புடைவையின் மடிப்பை மாற்ற வேண்டும். பலரது வீட்டு பீரோக்களில் உள்ள அடுக்குகளில் பல ஆண்டுகளாக பட்டுப் புடைவை வைத்த இடத்திலேயே இருக்கும். இப்படி வைத்திருப்பது பட்டுப் புடைவைகளை மோசமாகும். இதனால் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை புடைவையின் மடிப்பை மாற்றி மடித்து வைக்க வேண்டும்.
ஏனென்றால், ஒரு புடைவை மடித்து வைத்துவிட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின் எடுத்தால், புடைவையில் உள்ள மடிப்பு நிரந்தரக் கோடாக அல்லது பிய்ந்து கிழிந்து விடும். அதனால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பட்டுப் புடைவையை எடுத்து நன்கு உதறி அதன் எதிர்ப்பக்கமாக மடித்து துணிப்பையில் வைக்க வேண்டும்.
அதேபோல், அனைத்து பட்டுப் புடைவைகளையும் மடித்து வைக்கக் கூடாது. குறிப்பாக, பனாரஸ் பட்டுப் புடைவையை சுருட்டி வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பட்டுப் புடைவைகள் வாங்கும்போது கடைக்காரரிடம் புடைவையை எப்படிப் பராமரிப்பது? என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பட்டுப் புடைவையை நன்கு பராமரித்தால், ‘இது எப்போது எடுத்த புடைவை? இன்னும் பளபளன்னு இருக்குது’ என்று நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.