
கோடைக் காலம் நெருங்கி வருவதால் அந்தக் காலகட்டத்தில் உயரும் வெப்பநிலையைச் சமாளிக்க நம் வீடுகளை முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும். காலத்திற்கு ஏற்றாற்போல் நாம் சில புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தினால்தான் கோடை காலத்தில் உண்டாகும் வெப்பத்தைத் தணிக்க முடியும். வீட்டின் உள்ளே நிலவும் வெப்பத்தைக் குறைக்கும் வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. பசுமை நிறைந்த மேல் கூரை மற்றும் தோட்டங்கள்:
வீட்டின் மேல் கூரையில் செடிகள் (புற்கள்) நிரம்பிய பசுமையான பகுதியை நிறுவுவது, வீட்டைச் சுற்றி செங்குத்தான தாவரங்களை உருவாக்குதல் ஆகியவை வீட்டை இயற்கையாக குளிர்விக்க உதவும். இந்த விஷயங்கள் வீட்டின் உட்புற வெப்பநிலையைக் குறைக்கின்றன. கூடவே காற்றின் தரத்தையும் மேம்படுத்துகின்றன. இதை நாம் செய்ய தவறும்போதுதான் ஏர் கண்டிஷனிங்(AC) சார்ந்த செயற்கை குளிர் காற்றை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம்.
2. சூரிய ஒளியை விரட்டும் வர்ணங்கள் (Solar Reflective Paints):
சூரிய ஒளியைத் தடுக்கும் வர்ணங்களை மொட்டை மாடிக் கூரைகள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் பயன்படுத்துவதால் வீட்டின் உட்புற வெப்பத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். இந்த வர்ணங்கள் சூரிய ஒளியைப் பிரதிபலித்து (Reflecting) உட்புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன. இதைப் பயன்படுத்தாத பட்சத்தில் வீடுகள் வெப்பக் காடாக மாறி அசௌகரியத்தை அதிகரிக்க செய்யும்.
3. கூல் ரூஃப் டெக்னாலஜி (Cool Roof Technology): கூல் ரூஃப் என்பது அதிகமான சூரிய ஒளியை உள்ளே விடாமல் தடுக்கும் (Reflect) முறை. இதில் டைல்ஸ், வர்ணங்கள் (paints) என்று பல வகைகள் இருக்கின்றன. இந்தத் திட்டம் உட்புற வெப்பநிலையை வெகுவாகக் குறைத்து, வெப்பத்தால் உண்டாகும் அசவுகரியத்தைக் குறைக்கும். கூல் ரூுப் டெக்னாலஜியைத் தவிர்ப்பதால் வீடுகளில் வெப்ப அனல் வீசி, நெருப்பு சூழ்ந்ததுபோல் உணர வைத்துவிடும்.
4. நீர் பாதுகாப்பு அமைப்புகள்:
இப்போது நிகழும் காலநிலை மாற்றத்தால் எப்போது மழை வரும், வராது என்பதை யூகிக்க கடினமாக இருக்கிறது. அதனால் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை (rainwater harvesting systems) நிறுவுவது மற்றும் பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல் (greywater recycling) ஆகியவை கோடைக் காலங்களில் போதுமான நீர் விநியோகத்தை நமக்கு உறுதி செய்யும். இதுபோல நீர் பாதுகாப்பைச் சார்ந்த விஷயங்களைப் புறக்கணிப்பது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் எழும் தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
5. இயற்கை காற்றோட்ட மேம்பாடுகள்:
கடந்த காலங்களில் நாம் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் நம் வீட்டின் பகுதிகளைச் சற்று மாற்றிக்கொள்ளலாம். தேவையான இடங்களில் ஜன்னல்கள் மற்றும் காற்றோட்டம் வழிகளை (Ventilators) கோடைகாலம் வரும் முன்பே அமைத்துகொள்ளலாம்.
6. சுற்றுச்சூழலுக்கு உகந்த வெப்பத்தை தணிக்கும் பயன்பாடுகள்:
ஆவியாக்கும் குளிரூட்டிகள் (Evaporative coolers), மூங்கில் திரைகள் மற்றும் களிமண் சார்ந்த குளிரூட்டும் ஓடுகள் (clay-based cooling tiles) போன்ற இயற்கையாகவே வெப்பத்தைத் தணிக்கும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது அதீத வெப்பத்திலிருந்து நம்மைக் காக்கும். இதை புறக்கணித்தால் AC போன்ற அதிக ஆற்றலை உறிஞ்சும் செயற்கையான காற்றிலே வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம்.
7. உட்புறத் தாவரங்கள்:
கற்றாழை, பாம்பு செடி (snake plant) மற்றும் பீஸ் லில்லி (Peace Lilly) போன்ற உட்புற தாவரங்களை வைத்திருப்பது வீட்டின் உட்புறக் காற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு ஒரு குளிர்ச்சியான சூழ்நிலையையும் உணரவைக்கும். இதைப் பயன்படுத்த தவறுவதால் காற்றின் தரம் மோசமடையும், நாம் வாழும் சூழ்நிலையையும் சற்று அசெளகரியம் ஆக்கும்.
ஆக, கடந்த கோடைக் காலத்தில் சந்தித்த இன்னல்கள் மறுபடியும் தலைதூக்காமல் வைக்க மேலே குறிப்பிட்ட புதுமையான திட்டங்களைக் கோடை காலத்திற்கு முன்பே செயல்படுத்திப் பாருங்கள். இது நமது வீட்டின் சூழ்நிலையைச் சவுகரியமாகவும், ஆற்றல் திறன் கொண்டதாகவும் (Energy efficient) மாற்றியமைக்கும்.