பலரும் தலையணை உறைகளை வாரம் ஒரு முறை அல்லது பத்து நாளுக்கு ஒரு முறை மாற்றும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். தலையணை உறைகள் பாக்டீரியாக்கள், அழுக்கு, எண்ணெய்ப்பசை மற்றும் இறந்த செல்களின் கூடாரமாக இருக்கின்றன. பெரும்பாலும் நாம் தலையணையில் முகத்தின் பக்கவாட்டுப் பகுதிகளை குறிப்பாக கன்னத்தை பதிய வைத்து தான் உறங்குகிறோம். தலையணை உறையில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் அப்படியே முகத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுகின்றன. இவை முகத்தில் உள்ள துளைகளை அடைத்து பருக்களை உருவாக்குகின்றன.
நமது சருமம் இயற்கையாகவே இறந்த சரும செல்களை வெளியேற்றுகிறது. அப்படி வெளியேறும் இறந்த செல்கள் தலையணை உறைகளில் அப்படியே உறைந்து விடும். இவை தலையில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெயுடன் சேரும்போது அவை முகத்தில் உள்ள துளைகளை அடைத்து முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு வழி ஏற்படுத்தித் தருகிறது.
மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இது போன்ற நேரங்களில் தலையணை உறையும் அழுக்காக இருந்தால் பருக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உருவாகும்.
பொதுவாக ஏழு அல்லது எட்டு மணி நேரங்கள் ஒரே இடத்தில் ஒரே நிலையில் உறங்கும் போது அது உடலை சூடாக்கும். இரவில் வியர்க்கும் போது அழுக்குத் தலையணை உறையில் ஈரம் படியும். இதனால் பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கும். இது சருமத்தில் எரிச்சல் மற்றும் முகப்பருவுக்கு வழிவகுக்கிறது.
தூசி பூச்சிகள் மற்றும் பிற ஒவ்வாமை பொருள்கள் தலையணை உறைகளில் சேரக்கூடும். இவை முகத்தில் படும்போது சருமத்தை எரிச்சல் அடைய செய்து முகப்பருக்களை உருவாக்குகின்றன. தூசி பூச்சிகளைத் தவிர தலையணை உறைகளில் மனிதர்களின் முடி, செல்லப் பிராணிகள் வளர்த்தால் அவற்றின் முடி மற்றும் மகரந்தம், காற்றில் உருவாகும் தூசி குப்பை போன்றவையும் சேர்ந்திருக்கும். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சரும அழற்சி ஏற்படும். இதனால் முகப்பரு அதிகமாக உருவாகும்.
நிறைய பேர் தூங்கும் போது முகத்தை கழுவி விட்டு படுப்பதில்லை. மேக்கப்பை அகற்றாமல் தூங்கும் போது தலையணை உறைகளில் அவை படிகின்றன. ஒப்பனை எச்சங்களுடன் அழுக்குத் தலையணை உறைகளில் படிந்திருக்கும் தூசிகள், அழுக்கு, பாக்டீரியாக்கள் போன்றவை முகத்தில் துளைகளை அடைக்கின்றன. அதனால் முகப்பருவும் கரும்புள்ளிகளும் தோன்றுகின்றன.
முகத்தில் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தடுக்க வழிமுறைகள்:
இரவு தூங்கும் போது ஒப்பனையை நன்றாக கலைத்துவிட்டு முகத்தை சோப்புப் போட்டு கழுவி, மென்மையாகத் துடைத்து விட்டு தூங்க வேண்டும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது தலையணை உறைகளை மாற்ற வேண்டும்.
முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலையணை உறைகளை மாற்ற வேண்டும்.
தரம் குறைந்த கரடு முரடான தலையணை உறைகள் முகத்தில் எரிச்சலையும் உராய்வையும் ஏற்படுத்தி முகப்பருவை வளர்க்கும். எனவே மென்மையான இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட தலையணை உறைகளை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும்.
முகத்தை எப்போதும் சுத்தமான துண்டால் துடைக்க வேண்டும். தலையணை உறை அழுக்காக இருக்கும்போது ஒரு நல்ல வெள்ளைக் கர்ச்சீப்பை விரித்து அதன் மேல் முகத்தை வைத்துத் தூங்கலாம். ஆனால் காலையில் அதைத் துவைத்து விடவேண்டும்.
மேலும் தலையணைகளை அவ்வப்போது வெயிலில் வைத்து அதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் தூசுகளை அகற்ற வேண்டும்.