
நம்முடைய இப்போதைய நாகரிக கலாசாரத்திலும் ஏழை, பணக்காரன் என எல்லோருடைய சாப்பாட்டு ப்ளேட்டிலும் இவன்தான் இன்னமும் கெத்தாக நிற்கிறான் என்று சொன்னால் அது மிகையாகாது. எத்தனையோ ஸைடிஷ்கள் விதவிதமாய் இருந்தாலும் ஒவ்வொரு வாய் உணவிற்கும் இவனை ஸைடிஷாக கடித்துச் சாப்பிடும் சுவையே அலாதிதான். அது வேறு யாருமில்லை, நம்முடைய ஏழைகளின் உணவில் 365 நாளும் பழைய சோறுக்கு ஸைடிஷாக இருக்கும் பச்சை வெங்காயம்தான். ஆம்! பச்சை வெங்காயத்திற்கு ஈடிணை வேறு எதுவுமில்லை.
பழைய சோற்றில் மோரை ஊற்றி இந்த பச்சை வெங்காயத்தின் துணையோடுதான் ஏழைகளின் வயிறு நிரம்புகிறது. காலம் காலமாகப் போற்றப்படும் இந்த பழைய சோறும் வெங்காயமும் நம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமுள்ள ஏழைகளின் உணவாக இது கருதப்படுகிறது. ஏழைகளைத் தவிர, பொதுவாக எல்லோர் வீட்டிலும் தினமும் இதை சாதத்தோடு சாப்பிடும் வழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. வட இந்தியாவில் டால் சாதத்திற்கு அவர்கள் வெங்காயத்தை தொட்டுக் கொள்ளாமல் சாப்பிட மாட்டார்கள். சப்பாத்தி, பரோட்டா என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த வெங்காயம்தான் மிக முக்கியமான ஒன்றாகும்.
ஓட்டல்களிலும் அதைத்தானே கடைபிடிக்கிறார்கள். சில இடங்களில் வட்டமாக நறுக்கி வைத்து விடுவார்கள். சில இடங்களில் பாதியாக நறுக்கி அதை வினிகரில் ஊற வைத்து பின் சாப்பிடுவதற்குப் போடுவார்கள். அந்த வெங்காயத்திற்குத்தான் எத்தனை சுவை! எத்தனை விலை உயர்ந்த உணவை சாப்பிட்டாலும் ஒரு துண்டு வெங்காயத்திற்கு ஈடாகாது. இந்த வெங்காயத்தை நம் இந்திய உணவுத் தட்டுகளில் இருக்கும் ஒரு மாயப்பொருள் என்றே சொல்லலாம்.
வெங்காயத்தை நம் முன்னோர்கள் தினமும் சாப்பாட்டில் ஏன் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள் தெரியுமா? இந்த வெங்காயம் வெறும் மாயப் பொருள் மட்டுமில்லை, ஆரோக்கியமும் நிறைந்தது. இனி, பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களைப் பார்ப்போம்.
பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் நம்முடைய இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தையும் இது குறைக்கிறது.
வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறைகிறது. வெங்காயத்தை தினமும் எடுத்துக் கொண்டால், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் நம்மை அது பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இது நம் உடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கவும் உதவுகிறது.
பச்சை வெங்காயத்தில் இருக்கும் நார்ச்சத்தானது நம்முடைய செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், மூல நோய் பிரச்னையையும் குறைக்கிறது. வெங்காயம் எலும்புகளை பலப்படுத்துகிறது. கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கிறது.
வெயில் காலத்தில் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவது இந்த பச்சை வெங்காயம்தான். அதிக வெயில் இருக்கும்போது வெங்காயத்தை மூக்கில் முகர்ந்து கொண்டு போனால் அனல் காற்றினால் உண்டாகும் பாதிப்பு நமக்கு வராது.
இத்தனை ஆரோக்கியம் நிறைந்த நம்முடைய இந்திய உணவின் மாயப் பொருள் வெங்காயத்தை தினமும் நீங்களும் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு பயனடையுங்கள். ஆனால், இதனை அளவோடுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா? அளவோடு எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்!