
மேடை போட்டு பொன்னாடை அணிவித்து, கரவொலி வழங்கினால்தான் பாராட்டா? இல்லை, இதெல்லாம் தேவையில்லை. ஒரே வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்கள். உங்கள் நட்பு வட்டம் பெருகும். உங்கள் உறவுகள் மனதில் உங்களுக்கென தனி சிம்மாசனம் கிடைக்கும். இவ்வளவு ஏன், உங்களுக்கே ஒரு பெரிய மனநிறைவு கிடைக்கும்.
அவ்வளவு சக்தி வாய்ந்த சொல் இருக்கிறதா என்ன? இருக்கிறது, "நல்லாயிருக்கு” என்ற ஒரு சொல்லுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது தெரியுமா?
அதைச் சொல்வது வெகு சுலபம்தான். ஆனால் நம்மில் நிறைய பேருக்கு அந்த ஒற்றை சொல்லைச் சொல்வதற்கு மிகுந்த தயக்கம்.
“என்னத்த பெருசா இதெல்லாம் சொல்லிட்டு. நாம சொன்னா மட்டும் நமக்கு என்ன கிரீடம் வைக்கப் போறாங்களா?” இப்படி, அதைத் தவிர்ப்பதற்கான காரணங்களை மட்டும் தேடித்தேடி சொல்வோமே ஒழிய, நல்லாயிருக்கு என்ற பாராட்டை மட்டும் வெகு சுலபத்தில் நாம் சொல்வதில்லை.
சரி, எங்கெல்லாம், யாரிடமெல்லாம் நாம் இந்த வார்த்தையைச் சொல்லத் தவறுகிறோம் என்று பார்க்கலாமா?
வீட்டில் இருந்தே ஆரம்பிப்போமே. தினமும் வீட்டில், அதிகாலை துவங்கி இரவுவரை வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் தேவைகளை அறிந்து உணவு சமைத்துத் தரும் அம்மா/ மனைவி/ சகோதரி/ மகள் இவர்களிடம் “நல்லாயிருக்கு” “அருமையா செஞ்சிருக்கே” “சூப்பர்” என்று எவ்வளவு நாட்கள் சொல்லியிருக்கிறோம்?
“இன்னிக்கு சாம்பார் அருமை!”
“குழம்பு ரொம்ப நல்லாயிருக்கு!”
இப்படி எவ்வளவு பேர் பாராட்டுகிறோம்?
“நம்ம வீடு, நம்ம அம்மா சமைக்கறாங்க. அவங்ககிட்ட போய் தினமும் நல்லாயிருக்கு நல்லாயிருக்குன்னு சொல்லவா முடியும்? அதான் அம்மா நல்லா சமைப்பாங்கன்னு தெரியுமே. இதைப் போய் சொல்லுவாங்களா?”
இப்படித்தானே இதற்குக் காரணம் தேடுவோம். ஆனால் நாம் பாராட்டாவிட்டாலும், சலிக்காமல் எல்லாம் செய்துதரும் அந்த மனத்திற்கு, நல்லாயிருக்கு என்ற ஒற்றை வார்த்தை எவ்வளவு பெரிய உற்சாகத்தைத் தரும் தெரியுமா. எத்தனை புத்துணர்ச்சியைத் தரும் என்று தெரியுமா?
“இன்னிக்கு உப்புமா ரொம்ப நல்லாயிருக்கு மா” என்று சொல்லித்தான் பாருங்களேன். சமையல் செய்பவர்களுக்கு இந்த ஒற்றை வார்த்தை மிகப்பெரிய விருதாக நினைக்கத் தோன்றும். அவ்வளவு நேரம் வேலை செய்த களைப்பு காணாமல் போகும். அடுத்த முறை இன்னும் அதிக சிரத்தையோடு நமக்காகச் செய்வார்கள்.
இந்த நல்ல பழக்கத்தை வீட்டோடு நிறுத்திக் கொள்ளாமல் வெளியிலும் படர விடலாம். ஏதாவது உணவகங்களில் சாப்பிட்ட பிறகு, அங்கு சாப்பிட்ட உணவைப் பாராட்டலாம். உங்கள் தேவைகளைக் கேட்டறிந்து, சரியான முறையில் உணவுகளைப் பரிமாறியவர்களிடமும் அவர்களின் சேவை நன்றாக இருந்ததாகச் சொல்லலாம். நம் வயிறு நிறைந்தது போல அவர்கள் மனமும் நிறையும். மறுமுறை அந்த உணவகத்திற்குப் போகும்போது அவர்கள் உங்களைக் கவனிக்கும் விதமே தனியாகத் தெரியும்.
இதே பழக்கத்தை நம் உறவினர் வீடுகளிலும், திருமணம் போன்ற விழாக்களிலும் பின்பற்றினால் நம் மனதில் ஒரு நிறைவான உணர்வு ஏற்படும். அதே நேரம் பிறர் மனதில் நம்மைப் பற்றிய நல்ல அபிமானமும் வளரும்.
சரி, வெறும் சாப்பாடு விஷயத்தில் மட்டும்தான் இந்தப் பாராட்டா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சின்னச் சின்ன செயல்களைக் கூட பாராட்டலாம். சூப்பர், நல்லாயிருக்கு என்ற ஒற்றைச் சொல்லை மறந்துவிட்டு, குறைகளை மட்டுமே அடிக்கோடிட்டால் தவறைத் திருத்திக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் மனப்பக்குவம் யாருக்கும் லேசில் வந்துவிடாது.
சிறு குழந்தைகள் தப்பும் தவறுமாக சொல்லும் ரைம்ஸ், கிறுக்கலாக வரையும் ஓவியங்கள், பேனா பிடித்து முதல்முறை எழுதும் எழுத்து, சிந்தியும் சிதறியும் பழகும் சமையல் என ஒவ்வொன்றையும் பாராட்டிப் பழகலாம். வயதில் பெரியவர்கள் இதைப் பின்பற்றினால் இளைய தலைமுறைக்கும் இந்தப் பழக்கம் வரும்.
நாம் வழக்கமாக காய்கறி, கீரை, பூ, மளிகைச்சாமான் வாங்குபவர்களிடமும் இந்த நல்ல பழக்கத்தைப் பின்பற்றலாம்.
“உங்ககிட்ட வாங்கின கீரை ரொம்ப நல்லாயிருந்தது. அதிகம் கழியல,” என்று பாராட்டிப் பாருங்கள். அடுத்த முறை, இருப்பதிலேயே நல்லதாக ஒரு கீரைக் கட்டை உங்களுக்காக எடுத்து வைத்துத் தருவார்கள்.
இதேபோல் நம் வீட்டில் வேலை செய்பவர்கள், நமக்காக கடைகளில் துணிகளை எடுத்துப் போடுபவர்கள் என எல்லோரிடமும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றலாம்.
ஜவுளிக்கடையில், சலிக்காமல் நமக்காகத் துணிகளை எடுத்துப் போடுபவர்களிடம் “உங்க சேவை ரொம்ப நல்லாயிருக்கு, பொறுமையா வேலை பண்றீங்க, அருமை,” என்று சொல்வதால் எந்த விதத்திலும் நாம் குறைந்து போகப் போவதில்லை. ஆனால் அவர்களுக்கு அது மிகப்பெரிய உற்சாக டானிக்.
இப்படி, அன்றாடம் நமக்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் நல்லாயிருக்கு என்று சொல்லித்தான் பாருங்களேன். வாழ்க்கை மிக அழகாகும்.