
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அதேபோல், வாசல்தோறும் வேதனை இருக்கத்தான் செய்யும்! நாமாகத் தேடிக்கொள்ளும் சந்தோஷம் மறைவதற்குள் வேதனைகளும் கூடவே வருவது இயல்புதான். சந்தோஷம் வந்தால், ‘நேரம் நல்லா இருக்கு. கிரக அமைப்புகள் நன்கு பேசுகிறது’ என்று நினைப்போம். அதேபோல், வாழ்க்கையில் கொஞ்சம் சறுக்கல், அடியெடுத்து வைக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் மற்றும் தயக்கம் போன்ற நிலை வந்தால், ‘கட்டமே சரியில்லை, எனக்கு நேரமே சரியில்லை, ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது’ என்பது போன்ற அங்கலாய்ப்புகள் மனதில் வருகின்றன?
சுகம், துக்கம், கஷ்டம், நஷ்டம் எல்லாமும் எப்படி வருகிறது? நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் சர்வ ஜாக்கிரதையாய் எடுத்து வைப்பது நமக்கான பின்னடைவை சரிசெய்யும் ஒரு காரணியாகும். அதேபோல, தர்ம சிந்தனை, நல் ஒழுக்கம், மனசாட்சியை மறவாதது மற்றும் உண்மையான உழைப்பு இவையும் நிறைவான வாழ்க்கையின் சீக்ரெட் ஆப் அவர் எனர்ஜிதானே.
முதலில் நம்மிடம் நல்லவர்கள் போலப் பழகி, நமக்கே குழி தோண்டும் நட்பு மற்றும் உறவுப் பாலங்கள், நமக்கான தீய பாதையைக் காட்டும் நமது வளா்ச்சிக் கண்டு பொறாமைப்படுபவர்களும் நம்மை நிழல் போலத் தொடர்வதும் உண்டு. அதிலிருந்து முதலில் நாம் வெளியே வர வேண்டும். அதற்காக அவர்களை திடீரென ஒதுக்கிவிட முடியாது. நமக்குள் இருக்கும் புத்திசாலித்தனத்தால் நாம் சாதுா்யமாய் நடந்துகொள்ள வேண்டும்.
திருமணமாகும் வரை தாய், தந்தை பேச்சைக் கேட்பது மனைவி வந்ததும் அவரிடமும் கலந்து ஆலோசிப்பது போன்ற நிலைபாடுகள் நமக்கான ஏனிப்படி. அனைவரையும் கலந்து பேசி, குடும்ப வாழ்க்கையில் நாம் எடுக்கவேண்டிய நல்ல முடிவுகள் அனைத்தையும் எடுப்பதோடு நல்லதொரு வாழ்க்கையை வாழப் புரிந்து வாழ்வதே மேல்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நமது குடும்பத்தில் புகுந்து தேவையில்லாத குழப்பங்களை, அவர்களுக்குப் பிடித்த யோசனைகளை அறிவுரையாக சொல்வார்கள். நாம் அனைத்தையும் கேட்டுக்கொண்டு நமது குடும்பத்தார்களுடன் கலந்து பேசி நல்ல முடிவாய் எடுப்பதே சாலச்சிறந்தது. அக்கம் பக்கம் இருப்பவர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என அனைவர்களிடமும் நட்புப் பாராட்டிப் பழக வேண்டும். அவர்களிடம் உள்ள நல்ல பண்பாடுகளைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியதே முக்கியமானதாகும்.
பொதுவாக, ஈவு இரக்கம், மனித நேயம் கடைபிடிப்பதோடு அவற்றைக் கடைப்பிடிக்காத நபர்களிடம் கொஞ்சம் விலகி இருப்பதே நல்லது. விதண்டாவாதம், பிடிவாதம் இவற்றை அறவே மறந்து செயல்படுவதே பிரச்னை இல்லாத வாழ்க்கைக்கான முதல் படி.
கொஞ்சம் பணம் சோ்ந்தவுடன் பெருமைக்கு ஆசைப்பட்டு அகலக்கால் வைக்காமல், சிக்கனத்தைக் கையாண்டு வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து பேசி வீடு வாங்குவதோ அல்லது மனை வாங்குவதோ போன்ற செயல்களில் ஈடுபடலாம். கடைசி வரை தாய், தந்தையர் மனம் சங்கடப்படாதவாறு வாழ்க்கை எனும் பரமபதக் காயை நகர்த்த வேண்டும். எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். குழந்தைகள், வயதான பெற்றோர், மாமனார் – மாமியார், சகோதர சகோதரிகளிடம் அன்பு பாராட்டி ஒற்றுமையாய் வாழ்வதே சிறப்பான ஒன்று.
மனம்விட்டுப் பேசினாலும், சிரித்தாலும் நமக்கான நல்ல காரியங்கள் கூடிவரும். ‘அன்பே பிரதானம்’ என்ற நெறிமுறைகளை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பது நல்ல மூலதனமே! அதற்கான வட்டியே நமக்குள் இருக்கும் மனித நேயமாகும். அன்பால் எதையும் சாதிக்கலாம். வம்பால் எதையும் சாதித்துவிட முடியாது.