

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படும். ‘உலக ஹலோ தினம்’ உலகளாவிய அமைதியை கருத்தில் கொண்டும், மக்களிடையே மோதலைத் தடுத்து புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் கலாசாரப் பிளவுகளை இணைப்பதற்கும், ஒரு எளிய நட்பு ரீதியான வாழ்த்து அடித்தளமாக இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது. இந்த நாளில் குறைந்தது 10 பேருக்காவது ஹலோ சொல்லி வாழ்த்த வேண்டும். இது ஒரு எளிய செயல் போல தெரிந்தாலும் மிகப் பெரிய முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் கொண்டுள்ளது. தெரிந்த நபர்களுக்கு வாழ்த்து சொல்வது இயல்பாக நடக்கும் ஒரு விஷயம்தான். ஆனால், இந்த நாளில் தெரியாத அந்நியர்களுக்கு ஹலோ சொல்வதுதான் மிகவும் முக்கியம்.
தெரியாதவர்களுக்கு ஹலோ சொல்வதால் ஏற்படும் நன்மைகள்:
தடைகள் உடைக்கப்படுதல்: புதிய அன்னியமான ஒரு நபருக்கு ஹலோ சொல்வதன் மூலம் ஒரு புதிய மனிதரின் நட்பைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும். புதியவர் என்கிற மனநிலையை உடைப்பதற்கான ஒரு அடிப்படை செயலாக இது அமைகிறது. தகவல் தொடர்பு மோதலை தீர்க்கும் விதமாக இந்த ஹலோ அமைகிறது.
இணைப்புக் கருவி: ஒரு அன்னியரை ‘ஹலோ’ சொல்லி வாழ்த்தும்போது அந்த சிறிய சொல் ஒரு உரையாடலுக்கான அடித்தளமாக அமைகிறது. இரண்டு மனித மனங்களை இணைக்கும் கருவியாக இது செயல்படுகிறது. கலாசார சமூகப் பிளவுகளை இணைப்பதில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறது.
மகிழ்ச்சி சுரப்பு: மக்களை வாழ்த்தும்போது மனிதரின் மூளையில் வேதியல் மாற்றம் நிகழ்கிறது. மனநிலையில் நேர்மறையான விளைவும் ஏற்படுகிறது. மூளையில் உள்ள டோபமைன் தூண்டப்பட்டு, மகிழ்ச்சியை சுரக்க வைக்கிறது. மனிதர்களுடன் உரையாடுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள் அமைதியாக இருப்பவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
மன ஆரோக்கியம்: புதிய மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கிறது. காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆக்சிடாஸின் ஒரு ஹலோ சொல்லும்போது தூண்டப்படுகிறது. சமூகப் பிணைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த ஹார்மோன் மன அழுத்தத்தை குறைத்து, நம்பிக்கை மற்றும் பச்சாதாப உணர்வுகளை அதிகரிக்கிறது.
சமூகப் பிணைப்பு: நவீன சமுதாயத்தில் தனிமை என்பது ஒரு பெரிய உலகளாவிய பிரச்னையாக மாறிவிட்டது. சமூக வலைதளங்களில் சுமுகமாக உரையாடும் நாம் பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவுகளுடன் சரியான உறவை பேணுவதில்லை. ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரர், செக்யூரிட்டி, அங்கு வேலைக்கு வருபவர்கள் போன்ற நபர்களிடம் ஒரு எளிய ஹலோ சொல்லி புன்னகையுடன் பேச ஆரம்பிக்கும்போது தனிமை உணர்வுகளை எதிர்த்துப் போராடி, ஒரு சமூகத்துடன் இணைந்திருப்பது போன்ற உணர்வை வளர்க்கின்றன.
உரையாடலின் சாவி: சமூகப் பதற்றம் உள்ளவர்களுக்கு ஹலோ என்ற ஒரு ஒற்றைச் சொல் உரையாடலின் சாவியாக விளங்குகிறது. இது அவர்களது தன்னம்பிக்கையை மீட்க உதவுகிறது. ஒரு அன்பான வாழ்த்து தொழில்முறை அமைப்புகளில் உடனடி உறவை ஏற்படுத்தி மனிதர்களை மிகவும் அணுகக்கூடிய நபர்களாகவும் நட்பாகவும் காட்ட உதவுகிறது. குழுப் பணி மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றில் மிகவும் அவசியமாக இருக்கிறது.
மதிப்பு: இந்த எளிய ‘ஹலோ’ என்ற சொல் எதிரில் இருப்பவரை அங்கீகரிக்கப்பட்ட நபராகவும் மதிப்புமிக்க மனிதராகவும் உணர வைக்கிறது. நம்ப முடியாத உற்சாகத்தைத் தருகிறது. ஒதுக்கப்பட்டதாக உணரும் மனிதர்களுக்கு இந்த ஹலோ பெரிய மாயாஜாலங்களை செய்யும்.
புரிதல்: நீண்ட காலமாக பேசாமல் இருக்கும் நபர்களிடம் கூட வலியச் சென்று ‘ஹலோ’ என்று கூறி உரையாடலை தொடங்கும்போது, மீண்டும் நட்பின் வாசலை திறந்து வைக்கும். புதிய தெரியாத நபர்களுடன் பேசுவதன் மூலம் உள்ளுக்குள் உற்சாகம் பெருகுவதும், தன்னம்பிக்கை அதிகரிப்பும் பரஸ்பர புரிதலையும் ஏற்படுத்துகிறது.