
மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? மனதிலே குழப்பமா? அப்படியானால், அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்று, அங்கே ஒரு மெல்லிய சத்தத்துடன் சலசலத்துக் கொண்டிருக்கும் செயற்கை நீரூற்றை ரசித்தபடி சற்று நேரம் அமர்ந்து பார்த்தது உண்டா? அமர்ந்து பாருங்கள்; சில நிமிடங்களிலேயே மனம் அமைதி காணும்! உள்ளம் தெளிவடையும்! உடலெங்கும் உற்சாகம் அடையும். ஒரு கொண்டாட்ட மனநிலையை அடைவீர்! இதுதான் நீரூற்றுகளின் மகிமை. ஆம்! உள்ளம் களிக்க உலகின் மிகப்பெரிய ஆறு. நீரூற்றுகள் சிலவற்றைக் கண்டு வருவோமா?
ஆயிரம் காலத்திற்கு முன்பிருந்தே நீரூற்றுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஷாஜஹானால் கட்டப்பட்ட ஷாலிமார் தோட்டங்கள் 410 நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரோமானிய நீரூற்றுகள் விலங்குகள் அல்லது முக்கியத் தலைவர்கள் உருவங்களை வெண்கலம் அல்லது கல் முகமூடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இன்னும் விதவிதமாக உலகம் முழுவதும் நீரூற்றுகளால் நகரத்தை அலங்கரித்திருக்கிறார்கள்.
1. பெல்லாஜியோ நீரூற்று (அமெரிக்கா): உலகின் மிகப்பெரிய நீரூற்றுகளில் பெல்லாஜியோவின் நீரூற்றும் ஒன்றாகும். இது அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் 140 மீட்டர் உயரம் வரை தண்ணீர் பீய்ச்சி புதிய பொழிவுடன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இந்நீரூற்று துபாயில் 2009ம் ஆண்டு திறக்கப்பட்ட துபாய் நீரூற்று வருகைக்குப் பின் உலகின் மிகப்பெரிய நீரூற்றுகளின் தரவரிசையில் மாற்றம் கண்டது. 8.5 ஏக்கர் செயற்கை ஏரியில் 1200க்கும் மேற்பட்ட முனைகள் மற்றும் 4,800 வெள்ளை நிற விளக்குகளைக் கொண்டுள்ளன. விளக்கு கம்பங்களில் பொருத்தப்பட்ட 183 ஸ்பீக்கர்களிலிருந்து இசைக்கும் இசைக்கு தகுந்தபடி அபிநயம் பிடிக்கும் நீர்த்திரைகள் அற்புதமான கலைப்படைப்பாக பார்போரின் கண்களை கொள்ளை அடிக்கின்றன.
2. ஜெட் டி ஈவ் நீரூற்று (சுவிட்சர்லாந்து): சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் 140 மீட்டர் உயரத்திற்கு செல்லும்படியான நீரூற்று 1951ல் இருந்து தனது கம்பீரத் தோற்றத்தை கலாப்பூர்வமாக மாற்றி காண்போருக்கு காட்சி தருகிறது. ஜெட் டி ஈவ் நீரூற்று. ஜெனிவா ஏரி, ரோன் ஏரி சந்திக்குமிடத்தில் 10,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்தும் பார்க்க முடியும். இது வினாடிக்கு 500 லிட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது. அதேநேரத்தில் எந்த நேரத்திலும் காற்றில் 6,800 லிட்டர் தண்ணீர் நீர்த்திரையாகத் தெரியும்.
3. துபாய் நீரூற்று (துபாய்): துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய் நீரூற்று 152.4 மீட்டர் உயரத்தில் தண்ணீர் பறக்கும். இது 2009ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது உலகத்தின் மிகப்பெரிய நீரூற்று ஆகும். துபாயில் உள்ள செயற்கையான 30 ஏக்கர் பரப்பளவில் புர்ஜ் கலீஃபா ஏரியில் அமைந்துள்ளது. இது இரண்டு நீண்ட வளைவுகளுடனும், ஐந்து வெவ்வேறு அளவிளான வட்ட வடிவத்திலும் அமைந்துள்ளன. 6500க்கும் மேற்பட்ட விளக்குகளைக் கொண்டுள்ளது. 83,000 லிட்டர் தண்ணீர் காற்றில் எந்நேரமும் காட்சி அளிக்கிறது. இந்நீரூற்று கிளாஸிக்கல் மற்றும் உலக இசையுடன் நடனமிடும் நீர்க்காட்சி தனது அற்புதத்தை உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறது.
4. கேட்வே கீசர் (அமெரிக்கா): அமெரிக்கா, இல்லினாய்ஸ் கேட்வே கீசர் நீரூற்று 192 மீட்டர் உயரம் வரை நீர் மேல் எழும்பும். 1995 முதல் இது தனது வசீகரத்தை பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இது உலகின் இரண்டாவது பெரிய நீரூற்று ஆகும். இந்நீரூற்று இல்லினாய்ஸில் உள்ள மால்கம் டபிள்யூ மார்டின் நினைவு பூங்காவில் அமைந்துள்ளது. இது 800 குதிரைத் திறன் கொண்ட இரண்டு பம்புகளின் உதவியுடன் செயல்படுகிறது. நிமிடத்திற்கு 28,000 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை காற்றில் நின்றாடுகிறது. இதிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மணிக்கு 273 கி.மீ. வேகத்தை எட்டுகிறது.
5. கிங் ஃ பகத் நீரூற்று (சவுதி அரேபியா): சவுதி அரேபியா, ஜெட்டாவில் அமைந்துள்ளது. சவுதி அரேபியா முன்னாள் மன்னர் ஃ பஹத்பின் அப்துல் அஜிஸ் சவுத் என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்டு, அவருடைய பெயரிலேயே கிங் ஃபகத் நீரூற்று என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய நீரூற்று ஆகும். இதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் வேகம் மணிக்கு 375 கி.மீ. வேகம் ஆகும். இந்நீரூற்றின் அடிப்பகுதி மப்காரா எனப்படும் பாரம்பரிய அரேபிய தூப பர்னரை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எந்த நேரத்திலும் காற்றில் பறக்கும் நீரின் அளவு 16 டன்களுக்கும் மேல் இருக்கும்.
6. ரோமின் ட்ரெவி நீரூற்று (ரோம்): ரோமின் மிகப்பெரிய பரோக் நீரூற்று 23.5 மீட்டர் உயரம், 49.1 மீட்டர் அகலம் கொண்டது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் ட்ரெவி நீரூற்று நிக்கோலா சால்வியால் வடிவமைக்கப்பட்டு, 1762ம் ஆண்டு கியூசெப் பன்னினியால் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு வரும் பார்வையாளர்கள் நித்திய நகரத்திற்கு திரும்புவதை உறுதிப்படுத்த வலது கையை இடது தோளில் வைத்து நீரூற்றுக்குள் ஒரு நாணயத்தை வீசுவது பாரம்பரியமானது. இதில் வரும் பணத்தை நகரத்தின் ஏழைகளுக்கான ஒரு பல்பொருள் அங்காடிக்கு நிதியாக அளிக்கப்படுகிறது.
தண்ணீர் என்பது, வீட்டில் தண்ணீர் தொட்டியாக இருந்தாலும், மலை உச்சியில் அருவியாக கொட்டினாலும் என எந்த வடிவத்தில் இருந்தாலும் மனித உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடியதாக இருக்கிறது. மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு நீரூற்று சிறந்த மருத்துவமனை என்பதை அனுபவித்தவர்கள் நிச்சயம் அறிவார்கள்!