

நம்முடைய வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படுவதற்கு முக்கியமான காரணமே கணவன், மனைவி இரண்டு பேரும் சேர்ந்து செயல்படுவதுதான். குடும்பத்தில் செல்வம் செழிக்க வேண்டுமானால் கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே திட்டமிட வேண்டும். அப்போதுதான் ஒருவருடைய குறைகள் மற்றவர்களால் நிறையாகும். குடும்பத்தில் ஏகோபித்தமாக ஒருவர் மட்டுமே எல்லா விஷயங்களையும் முடிவு செய்வதை விட, இருவரது முடிவு பெரும்பாலான நேரத்தில் பிளஸ் மைனஸ்களை சரியாக அலசுவதற்கு சிறந்ததாக இருக்கும்.
ஜாயிண்ட் அக்கவுண்ட்: வங்கிக் கணக்குகளை ஜாயின் அக்கவுட்டுகளில் வைத்துக் கொண்டால் ஒருவர் மேல் ஒருவர் மீதான நம்பிக்கை அதிகரித்து சிறப்பாக செயல்பட முடியும். அதேபோல், பொறுப்புகளும் எளிதாக பிரிக்கப்பட வேண்டும். ஒருவருக்கு எதில் திறமை அதிகம் இருக்கிறதோ, எளிதாக வருகிறதோ அதை அவரிடம் விட்டு விட வேண்டும். அது மனைவியாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி யாருக்கு சரியாக செய்ய வருகிறதோ அவர்களிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவதே வேலை சிறப்பாக முடிய உதவியாக இருக்கும்.
பட்ஜெட் போடுவது: பொதுவாகவே பெண்களுக்கு பட்ஜெட் போடுவது மிகவும் எளிதாக வரும். இருப்பதை வைத்து சிறப்பாக செய்யக்கூடியவர்கள் பெண்கள். எனவே, அந்த வேலையை அவர்களிடம் தந்து விட்டு அதை பற்றி இருவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். முதலீடுகள், ஷேர் மார்க்கெட்களில் ஆண்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். எனவே, அந்த முதலீட்டு யோசனைகளை அவரிடம் விட்டு விட்டு இருவரும் கலந்தாலோசித்து முடிவை எடுக்கலாம்.
மொத்தத்தில் யார் எந்த பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் இருவரும் இணைந்துதான் முடிவு எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் நிலைக்கும். இல்லையென்றால் அதிக பொறுப்பை சுமக்கும் ஒருவர் நானேதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா என்று அலுத்துக் கொள்வார்கள்.
பெரிய செலவுகள்: வீடு வாங்குவது, வங்கியில் பெரிய தொகையில் கடன் எடுப்பது போன்ற பெரிய செலவுகளை இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. அதேபோல் வாங்கும் கடனை யார் பெயரில் வாங்குவது, யார் அதற்கு வட்டி கட்டுவது, யாருடைய பெயரில் வாங்கினால் நன்மைகள் அதிகம் அல்லது இரண்டு பேரும் சேர்ந்து வாங்கலாமா போன்ற முடிவுகளை எடுப்பதற்கு இருவரும் உட்கார்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இதில் ஈகோ கூடாது. குடும்பத்தின் தேவை என்ன, இலக்கு என்ன, இந்தக் கடன் தேவையா போன்றவற்றை அலசி தீர்மானிக்க வேண்டும்.
பொறுப்பு பகிர்ந்தளிக்கப்படுவது: பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் பொழுது அவற்றை சரியாகவும், திறமையாகவும் செய்ய முடியும். ஒருவரே அனைத்து பொறுப்புகளையும் வைத்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படுவதுடன், வேண்டாத பிரச்னைகளும் தலைதூக்கும். வீட்டில் குழப்பமும் உண்டாகும். வீட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை. ஏதோ பேருக்கு இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். எனவே, பொறுப்புகள் பகிரப்படுவதால் சுமைகளும் குறையும்; நெருக்கமும் கூடும்.
விண்டோ ஷாப்பிங்: கடைகள் போக பிடிக்கணும். ஆனால், அவற்றை வாங்குவதை விட கண்ணால் கண்டு ரசிப்பதே நல்லது. விண்டோ ஷாப்பிங் சிக்கனத்திற்கு சிறந்தது. அதேபோல, விதவிதமான ஆடைகளை ரசித்துப் பார்க்கலாம். ஆனால், தேவைக்கேற்ப குறைந்தபட்ச ஆடைகள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். தின்பண்டங்களிலும் அப்படித்தான். விதவிதமானவற்றை கண்டு ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வயிறு கெட்டுப் போய் டாக்டரிடம் கொடுக்க வேண்டி இருக்கும். இப்படி அனாவசிய செலவுகளையும், அளவுக்கு மீறிய ஆசைகளையும் குறைத்துக் கொள்வதே குடும்பத்தில் செல்வம் செழிக்க உதவும்.