நல்ல நண்பனாக இருப்பது எப்படி? நீடித்த நட்பைப் பேண உதவும் 6 பொன்னான விதிகள்!

உங்களுடைய நட்பு வட்டத்தை அழகாகவும் பலமாகவும் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிகள்.
நண்பன்
நண்பன்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நட்பு என்பது பாசம், அன்பு, மரியாதை ஆகியவற்றுடன் தேவைப்படும் நேரங்களில் உதவி செய்யும் மனப்பான்மையையும் உள்ளடக்கிய ஒரு ஆதரவான பிணைப்பாகும். நல்ல நண்பர்களை உருவாக்குவதும், அப்படி உருவாக்கிய நட்பு வட்டத்தை அழகாக தக்கவைத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம். ஒரு நல்ல நண்பனை தக்க வைத்துக் கொள்வதற்கு முதலில் நாம் ஒரு நல்ல நண்பனாக இருக்க வேண்டும்.

1. தவறாமல் தொடர்பில் இருப்பது:

நட்பு சிறந்தது. ஆனால் அதைப் பேணுவது சிறிது கடினம்தான். வலுவான, நீண்ட காலம் நீடிக்கும் நட்பை வைத்திருக்க நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போன் செய்து அல்லது நேரில் சந்தித்து பேசுவதும், நேரம் கிடைக்கும் பொழுது அவர்களுடன் சேர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்று அவர்களுடன் ஒன்றாக நேரம் செலவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நண்பர்களை தக்க வைத்துக்கொள்ள உதவும். இதற்கெல்லாம் நேரமில்லை என்று நினைப்பவர்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் நலம் விசாரிப்பது நாம் எப்போதும் அவர்களுடன் இருக்கிறோம் என்ற உணர்வைத்தரும்.

2. சிறந்த கேட்பாளராக மாறுவது:

அவர்கள் கூறுவதைப் பொறுமையாகவும் அக்கறையுடனும் கேட்பதும், நம் கருத்துக்களை மட்டும் திணிக்காமல் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதேபோல் அவர்கள் பேசும் பொழுது தேவையில்லாமல் குறுக்கிடாமல் இருப்பதும் நட்பை தொய்வின்றி வைத்திருப்பதுடன் நட்பை வளர்க்கவும் செய்யும். நண்பர்கள் தங்களுடைய மகிழ்ச்சி அல்லது கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் பொழுது, அதை அலட்சியப்படுத்தாமல் உண்மையான கவனத்துடன் காது கொடுத்து கேட்க வேண்டும்.

3. உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வது:

எப்பொழுதும் முடிந்தவரை நேர்மையாக இருப்பதும், நண்பர்களைத் தவறாக வழிநடத்தாமல் இருப்பதும் அவசியம். எந்த சூழ்நிலையிலும் பொய் பிரட்டு பண்ணாமல், நம்பிக்கைக்கு உரியவராக இருப்பது நண்பர்களை தக்கவைத்துக் கொள்ள உதவும்.

நண்பன்
நண்பன்Gemini image

நண்பர்களின் ரகசியங்களை காப்பதும், எந்த சூழ்நிலையிலும் அவர்கள் நம்பத்தகுந்த ஒருவராக நாம் இருப்பதும் நட்பின் அடித்தளமாகும். ஒருவரைப் பற்றி தவறான வதந்திகளையோ அல்லது பொய்களையோ பரப்புவது நட்பை முற்றிலுமாக முறித்து விடும். நேர்மையான மற்றும் கனிவான வார்த்தைகளே உறவைத் தக்க வைக்கும். நட்பின் மிக முக்கிய அடித்தளம் நம்பிக்கைதான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுவது நட்பை மேலும் பலப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
பெற்றோரின் அந்த ஒரு வார்த்தை… பல ஆண்டுகள் கழித்தும் மனதில் ரணமாய் வலிப்பது ஏன்?
நண்பன்

4. சுக துக்கங்களில் பங்கெடுப்பது:

நண்பர்களின் சிறு முன்னேற்றங்களையும் மனதாரப் பாராட்டி மகிழ்ச்சியான தருணங்களில் பங்கெடுப்பது அவசியம். அதேபோல் இக்கட்டான சமயங்களில் அவர்களுக்குத் தோள் கொடுத்து ஆதரவாக நிற்பதும் நண்பர்களை தக்கவைத்துக் கொள்ள பெரிதும் உதவும். நண்பர்களின் வெற்றி, நல்ல குணங்கள் அல்லது அவர்கள் நமக்காக செய்யும் சிறிய உதவிகளைக்கூட மனதாரப் பாராட்ட வேண்டும். உறவுகளில் அங்கீகாரம் குறையும் பொழுதுதான் விரிசல்கள் ஆரம்பிக்கின்றன.

5. தவறுகளை மன்னிப்பது:

மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. எனவே தேவையற்ற கோபங்களைத் தவிர்த்து, சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளை மறந்து மன்னிக்கப் பழகுவது நல்ல நண்பர்களின் தொடர்பில் இருக்க உதவும். முக்கியமாக கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பொழுது ஈகோ பார்க்காமல் பேசி தீர்த்துக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தவறுகள் ஏற்படும்போது குத்திக் காட்டி அவர்களை வருத்தப்பட செய்யாமல் தட்டிக் கொடுப்பதுதான் உண்மையான நட்பு.

இதையும் படியுங்கள்:
பள்ளிக்குச் செல்ல குழந்தைக்கு பயமா? மௌனமாகத் தாக்கும் ‘புல்லிங்’ ஆபத்து: தப்பிப்பது எப்படி?
நண்பன்

6. சுயமரியாதைக்கு மதிப்பளிப்பது:

நட்புக்கு எல்லை கிடையாது; ஆனால் நண்பர்களுக்கு உண்டு. ஏனெனில் அவர்களும் மனிதர்கள்தான். எனவே அவ்வப்பொழுது அவர்களுக்குத் தேவையான இடத்தை வழங்குவது அவசியம். சிலர் சில சமயம் தனிமையை விரும்புவார்கள்.

சிலர் அமைதியை விரும்பி தனியாகப் பயணம் செய்வார்கள். இப்படி நம் நண்பர்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற சூழலை ஏற்படுத்தித் தருவதும் நீடித்த நட்புக்கு வித்திடும். அதேபோல் நண்பர்களின் தனிப்பட்ட கருத்துகளுக்கும் சுய விருப்பங்களுக்கும் மதிப்பளிப்பது முக்கியம். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து எல்லையைத் தாண்டாமல் இருப்பது அவசியம்.

ஒரு சிறந்த நண்பன் ஆக மாறுவது எப்படி என்பதையும், நம்மைச் சுற்றியுள்ள நட்பை வாழ்நாள் முழுவதும் எப்படிக் கொண்டாடுவது என்பதற்கான முழுமையான வழிகாட்டி.

logo
Kalki Online
kalkionline.com