

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த பல்வேறு வழிமுறைகள் வந்துவிட்டன. இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதற்கு முன்னதாக மின்சார அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மின் கட்டணத்தை செலுத்தினோம். ஆனால் தற்போதைய டிஜிட்டல் உலகில் நொடிப் பொழுதில் வீட்டில் இருந்தே மின்சார கட்டணத்தை செலுத்திவிட முடியும்.
தமிழ்நாட்டில் 2 மாதங்ளுக்கு ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. கணக்கீடு எடுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வேலைப்பளு காரணமாக ஒருசிலர் மின் கட்டணத்தை மறந்து விடுவார்கள். இந்நிலையில் இதற்கும் ஆன்லைன் மின் கட்டண வழிமுறையில் தீர்வு இருப்பது வரப்பிரசாதம் தான்.
ஒருமுறை மின் கட்டணத்தை செலுத்தி விட்டு, ஆட்டோ பே (Auto Pay) முறையை ஆன் செய்தால், அதற்குப் பின் நீங்கள் மறந்தால்கூட தானாகவே மின் கட்டணம் செலுத்தப்பட்டு விடும். அவ்வகையில் மின் கட்டணத்தை சரிபார்ப்பது முதல் ஆன்லைனில் கட்டணம் (TNEB Online Bill) செலுத்துவது வரையிலான முழுவழிகாட்டியை இப்போது தெரிந்து கொள்வோம்.
மின் கட்டணத்தை சரிபார்க்கும் வழிமுறை:
* https://www.tnpdcl.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவேண்டும்.
* மின் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் ஓடிபி வழியாக உள்நுழைய வேண்டும்.
* உங்கள் வீட்டு மின் இணைப்பு எண்ணை உள்ளிட்டு, Bill Details அல்லது View Bill ஆப்ஷனை கிளிக் செய்தால், நீங்கள் தற்போது கட்ட வேண்டிய மின்சார கட்டணம் எவ்வளவு என்பது திரையில் தெரியும்.
* ஒருவேளை நீங்கள் ஏற்கனவே மின் கட்டணத்தை செலுத்தி இருந்தால், பில் தொகை காட்டாது. இதற்கு முன் நீங்கள் செலுத்திய பில் தொகைகள் வரிசையாக காண்பிக்கப்படும்.
ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்தும் முறை:
* https://www.tnpdcl.org/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு, Pay என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
* டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை முறையைத் தேர்ந்தெடுத்து, மின்சார கட்டணத்தை செலுத்தலாம்.
* கட்டணத்தை செலுத்தி முடித்த பிறகு, உறுதிப்படுத்தல் ரசீது கிடைக்கும். எதிர்கால பயன்பாட்டிற்கு இதனை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.
ஆட்டோ பே வசதி:
ஆன்லைன் வாடிக்கையளர்களுக்கு மின்சார வாரியம் ஆட்டோ பே வசதியை வழக்குகிறது. இதனை ஆன் செய்து, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்து விட்டால், அடுத்து எப்போது மின் கணக்கீடு செய்தாலும், 10வது நாளில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே கட்டணம் செலுத்தப்படும். ஆன்லைன் வழியாக மின்சார கட்டணம் செலுத்துவோருக்கு ஆட்டோ பே வசதி மிகவும் உதவியாக இருக்கும்.
யுபிஐ செயலிகளில் மின் கட்டணம் செலுத்தும் முறை:
தினசரி பணப் பரிமாற்றத்திற்கு GPay, Phonepe மற்றும் Paytm உள்ளிட்ட யுபிஐ செயலிகள் உதவுகின்றன. இந்த செயலிகள் வாயிலாகவும் மின் கட்டணத்தை மிக எளிதாக செலுத்தி விடலாம்.
* யுபிஐ செயலியில் Electricity அல்லது Electricity Bill என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* 11 இலக்க மின் இணைப்பு எண்ணை உள்ளிட வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் பெயரை உள்ளிடலாம்.
* மின் இணைப்பு எண்ணை உள்ளிட்டவுடன் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தொகை எவ்வளவு என்பது திரையில் தெரியும்.
* இப்போது யுபிஐ பின் நம்பரை உள்ளிட்டு மின் கட்டணத்தை செலுத்தலாம்.
யுபிஐ செயலிகளிலும் ஆட்டோ பே வசதி உள்ளது. தேவையெனில் ஆன் செய்து கொள்ளலாம். ஒருமுறை யுபிஐ செயலியில் மின் கட்டணத்தை செலுத்தி விட்டால், அதன்பிறகு மின் கணக்கீடு செய்யும் போதெல்லாம், உங்களுக்கு ‘மின் கட்டணத்தை இப்போதே செலுத்துங்கள்’ என்ற நோட்டிபிகேஷன் வந்துகொண்டே இருக்கும்.
வாட்ஸ்அப்பில் மின் கட்டணம் செலுத்துதல்:
இன்று உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் பயனர்களுக்கு உதவும் வகையில் மின் கட்டணத்தையும் இதில் செலுத்துவதற்கான வசதி அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப்பில் மின் கட்டணத்தை செலுத்த முடியும். பெரும்பாலான நடுத்தர மக்கள் 500 யூனிட்டுகளுக்கு குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், இந்த வசதி அவர்களுக்கு உதவாது.
உதவி எண்:
ஆன்லைன் முறையில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது புகார் அளிக்க விரும்பினாலோ 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.