

குழந்தைகள் வளரும் பருவத்திலேயே அவர்களுக்கு நல்லொழுக்கம் மற்றும் நன்மதிப்பைப் பெற்றுத்தரும் நற்குணங்கள் போன்றவற்றை வீட்டிலேயே கற்றுக் கொடுப்பது அவசியம். இது அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க நற்பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கவும் சமுதாயத்தில் உயர்வான அந்தஸ்தைப் பெறவும் உதவும். அவர்கள் கற்றுத் தெளிய வேண்டிய 7 வகை விதிமுறைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. புன்சிரிப்புடன் வணக்கம் சொல்லுதல்: தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடின்றி ஒருவரை அந்த நாளில் முதன் முறையாக சந்திக்கும்போது, முகத்தில் புன்சிரிப்போடு, ‘வணக்கம்’, ‘ஹாய்’, ‘ஹலோ’ என்பதில் ஏதாவதொன்றைக் கூறி தலையசைத்தல். இச்செயல் அந்தக் குழந்தையிடமுள்ள பணிவு, மரியாதை மற்றும் அன்பான குணங்களின் வெளிப்பாடாக அமையும். மேலும், சமுதாய உறவில் நேர்மறை உணர்வுகளுடன்கூடிய இதமான தொடர்பை உண்டுபண்ணிக் கொள்ளவும் உதவும்.
2. ப்ளீஸ் மற்றும் தேங்க் யூ போன்ற வார்த்தைகளை உபயோகித்தல்: குழந்தைகளுக்கு பணிவுடன் நடந்து கொள்ளவும், அவர்கள் பெறும் சிறு சிறு உதவிகளுக்கும் நன்றியுணர்வுடன் ‘தேங்க் யூ’ சொல்லவும், அவர்களுக்கு தேவைப்படுவதை பிறரிடம் கேட்கும்போது ‘ப்ளீஸ்’ என்ற வார்த்தையுடன் பேச்சை ஆரம்பித்து, பின், தொடர்ந்து பேச வேண்டும் என்பதையும் சிறு வயது முதலே கற்றுக் கொடுப்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு சிறந்த முறையில் உதவும்.
3. விளையாடிய பின் அல்லது ஏதாவது சாப்பிட்ட பின் அந்த இடத்தை சுத்தப்படுத்துதல்: தன் வீட்டில், நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய பின் அல்லது சாப்பிட்ட பின், உடனடியாக அந்த இடத்தை ஒழுங்கான முறையில் சுத்தப்படுத்தி, சாமான்களை அதனதன் இடத்தில் எடுத்து வைக்க வேண்டியதன் அவசியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், அவர்களின் படுக்கையை உதறிப் போட்டு அவர்களே ஒழுங்குபடுத்தி வைக்கவும் கற்றுத் தர வேண்டும். இது அவர்களுக்கு சோம்பல் இல்லாமலும், பிறரை சார்ந்து வாழாமலும் இருக்க உதவும்.
4. டிவி பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்தி வைப்பது: டிவி மற்றும் போன் ஸ்கிரீனில் அதிக நேரத்தை செலவிடுவது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கக் கூடியது. ஸ்கிரீனில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, வெளியில் சென்று விளையாடுவது, புத்தகம் படிப்பது, பாரம்பரிய குடும்ப விளையாட்டுக்களைக் கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடச் செய்து ஊக்குவிப்பது அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும்.
5. வீணாவதைத் தடுத்தல்: தட்டில் போடப்படும் உணவை மீதம் வைக்காமல் முழுவதையும் உட்கொள்ளவும், தங்களுடைய விளையாட்டு சாமான்கள் மற்றும் பிற பொருட்களை சேதப்படுத்தாமல் கவனமுடன் கையாளவும் பிள்ளைகளுக்கு கற்றுத்தருவது பெற்றோர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று. பிள்ளைகள் கூடுதல் பொறுப்புடன் வளர இது உதவி புரியும்.
6. நேர்மை: எப்பொழுதும் நேர்மையுடன் வாழவும், உண்மை பேசவும், தனது தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ளவும் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்றுத் தருவது அவசியம். இது அவர்கள் தம் பலத்தை உணர்ந்து வருங்காலங்களில் சிறந்த மனிதனாக உருவாக உதவி புரியும்.
7. இரக்க குணம் கொண்டிருத்தல்: உரத்த குரலில் பேசுவது, சொல்லத் தகாத வார்த்தைகளை சொல்வது போன்ற பழக்கங்களைத் தவிர்த்து, பணிவன்புடன் பிறரிடம் பச்சாதாபம் காட்டி பேசக் கற்றுக்கொள்வது குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் பண்புள்ள நபராக வாழ வழி வகுக்கும். இதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவரும் பொறுப்புடனும், பொறுமையுடனும் குழந்தைகளுக்குப் பச்சாதாப உணர்வினைக் கற்றுக் கொடுத்து, பண்பட்டவர்களாக அவர்களை வளர்க்க வேண்டும்.