ரயிலில் சங்கிலி இழுத்தால் உண்மையிலேயே என்ன நடக்கும்? அபராதம் எவ்வளவு?

ரயில் தானாக நிற்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் நுட்பம் மற்றும் சங்கிலி பிடிப்பதற்கு விதிக்கப்படும் சட்டப்பூர்வ அபராத விபரங்கள்.
ரயில் சங்கிலி
ரயில் சங்கிலிGemini image
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on: 

முதன்முதலாக ரயிலில் பயணம் செய்யும் பொழுது வீட்டில் உள்ளவர்கள் நமக்கு சொல்லித் தந்திருப்பது என்னவென்றால் ஏதாவது அவசரம் என்றால் அங்கு உள்ள சங்கிலியை பிடித்து இழுத்தால் ரயில் நின்று விடும். ஆதலால் அவசர காலத்தில் அதை பயன்படுத்திக் கொள் என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் அப்படி எல்லாவற்றிற்கும் அதை இழுக்க முடியாது. எப்படிப்பட்ட செயல்களுக்கு இழுக்கலாம், எப்படிப்பட்ட செயல்களுக்கு இழுக்கக் கூடாது என்பதை பற்றியும், அப்படி இழுக்கும்போது அறிவியல் பூர்வமாக அந்த ரயில் எப்படி நிற்கிறது என்பதை பற்றியும் இப்பதிவில் காண்போம்.

ரயில் பெட்டியில் உள்ள அவசரகாலச் சங்கிலியை (Alarm Chain) இழுக்கும் போது நிகழும் அறிவியல் செயல்முறை மற்றும் அதற்கான சட்டப்பூர்வ அபராத விபரங்கள் பற்றிய தகவல்கள் இதோ:

முதலில் ​சங்கிலியை இழுத்தால் நடக்கும் அறிவியல் செயல்முறை:

​நாம் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளின் பிரேக் அமைப்பானது காற்று அழுத்தத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த அடிப்படையில் ரயில் பெட்டிகளில் இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியானது ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள அவசரகால ஏர் வால்வுடன் (Alarm Chain Pull Valve) இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை நாம் இழுக்கும்போது, அந்த வால்வு திறந்து பிரேக் பைப்பில் உள்ள காற்று அழுத்தம் வேகம் வேகமாக வெளியேறுகிறது.

தானியங்கி பிரேக்: அப்படி வெளியேறும் காற்று அழுத்தம் குறைந்தவுடன், அனைத்துப் பெட்டிகளிலும் உள்ள பிரேக் கட்டைகள் (Break blocks) தானாகவே சக்கரங்களைப் பிடித்துக்கொள்ளும்.

ரயில் சங்கிலி
ரயில் சங்கிலிGemini image

லோகோ பைலட்டிற்கு எச்சரிக்கை: சக்கரங்கள் அப்படி பிடிக்கும் போது இன்ஜின் ஓட்டுநரின் (Logo Pilot) அறையில் உள்ள 'பிரேக் பிரஷர் கேஜ்' அளவீடு சட்டெனக் குறையும். அதே சமயம் ஓட்டுநருக்கு எச்சரிக்கை ஒலியும் (Audio-visual alarm) கேட்கும். அப்போது ரயில் நின்று விடும்.

கார்ட் நடவடிக்கை: அப்படி ரயில் நின்றவுடன், எந்தப் பெட்டியில் சங்கிலி இழுக்கப்பட்டது என்பதை ஓட்டுநரும் பாதுகாப்புப் படையினரும் (RPF) எளிதாகக் கண்டறிந்து விடுவர். ஏனெனில், சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டியின் வெளிப்புறத்தில் உள்ள சிறிய சிவப்பு நிற வால்வு லீவர் (Valve lever) மேல்நோக்கி நிற்பதுடன் காற்று வெளியேறும் சத்தம் கேட்கும். அப்பொழுது சங்கிலியை பிடித்து இழுத்தது எந்த பெட்டியில் இருந்து என்பதை துல்லியமாக கண்டறிந்து அதற்கான காரணத்தை கேட்பார்கள். இதுதான் நாம் சங்கிலியை பிடித்து இழுக்கும்போது நடக்கும் அறிவியல் செயல்முறை.

அடுத்ததாக அபராதம் பற்றிய விபரங்கள்!

​ரயில்வே சட்டப் பிரிவு 141 (Section 141 of Indian Railways Act, 1989)-ன் படி, தகுந்த காரணமின்றி அவசரகாலச் சங்கிலியை இழுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவற்றுக்கான அபராத விதிமுறைகள்:

அபராதம்: ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.​

சிறைத்தண்டனை: 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

அல்லது இரண்டும்: குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்பது ரயில்வேயின் பொது விதி.

​ஆனால் எந்தெந்த சூழ்நிலைகளில் சங்கிலியை பிடித்து இழுக்கலாம் என்று அனுமதிக்கப்பட்ட அவசரக் காரணங்கள் பற்றிய விதிமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதைப் பற்றி இதோ:

1. ​பயணி யாராவது ஓடும் ரயிலில் இருந்து தவறிக் கீழே விழுந்தால் சங்கிலியை பிடித்து இழுக்கலாம். 

2. பெட்டியில் தீ விபத்து அல்லது ஆபத்தான குற்றங்கள் நடந்தால் சங்கிலியை பிடித்து இழுக்கலாம்.

​3. வயதானவர்கள், குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனாளிகள் ஏறும்போது ரயில் புறப்பட்டுவிட்டால் இழுக்கலாம். 

​4. பயணியின் உடல்நலத்தில் திடீரெனப் பெரிய அவசரகாலப் பாதிப்பு ஏற்பட்டால் சங்கிலியை பிடித்து இழுக்கலாம் என்பது ரயில்வே நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் ஆகும். 

இதையும் படியுங்கள்:
பயணத்தின்போது பொருள் தொலைந்தால் என்ன செய்யவேண்டும்? – இதை மட்டும் செய்யுங்கள்!
ரயில் சங்கிலி

சங்கிலியை எப்பொழுதெல்லாம் இழுக்கக் கூடாது என்பதை நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கான குறிப்பு:

ரயில் தாமதமாகிறது என்ற காரணத்திற்காகவோ, மறந்த பொருட்களைப் எடுப்பதற்காகவோ, அல்லது நண்பர்கள் ஏறுவதற்காகவோ சங்கிலியை இழுப்பது சட்டப்படி குற்றமாகும்.

ஒரு முறை நான் ரயிலில் பயணம் செய்த பொழுது என் பக்கத்தில் இருந்த ஒருவர் சங்கிலியை பிடித்து இழுத்தார். காரணம் கேட்ட பொழுது குழந்தைக்கு பீடிங் பாட்டிலில் பால் கொடுத்துக் கொண்டிருந்த நிப்பில் கீழே விழுந்து விட்டது அதை எடுப்பதற்காக சங்கிலியை பிடித்து இழுத்தேன் என்று கூற கார்ட் மிகவும் கோபமாகிவிட்டார். உடனே 500 ரூபாய் அப்பொழுது அபராதமாக கொடுக்க வேண்டி வந்தது. அவரும் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
உஷார்! கேஸ் சிலிண்டர் அருகில் இந்த 1 பொருள் இருந்தால் பெரும் ஆபத்து!
ரயில் சங்கிலி

500 ரூபாய் பெரிது இல்லை. ஆனால் குழந்தைக்கு பால் கொடுக்கும் நிப்பில் ரயிலில் கிடைக்காது. அதுதான் அவசியம் என்று கூறினார். ஆதலால் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்கள் இதற்கான மாற்றுப் பொருளையும் எடுத்துச் செல்லுங்கள். அதுதான் பாதுகாப்பானது. 

இதைப் படிக்கும் பொழுது ரயிலில் பயணம் செய்பவர்கள் சங்கிலியை எந்தெந்த நேரங்களில் இழுக்கலாம், இழுக்க கூடாது என்ற தெளிவான விளக்கத்தை பெறுவார்கள்.

ரயில் சங்கிலி பிடித்து இழுக்கும் போது காற்று அழுத்த பிரேக் சிஸ்டம் எவ்வாறு இயங்குகிறது என்ற அறிவியல் உண்மையையும், எந்தெந்த அவசர நிலைகளில் மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்ற ரயில்வே விதிகளையும் பயணிகள் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com