ஆண்களின் மூட் ஸ்விங்ஸ்: காரணங்களும் பெண்களின் பங்களிப்பும்!

mens-mood-swing
mens-mood-swing
Updated on

பொதுவாக, நம் சமூகத்தில் ஆண்கள் எதற்கும் கலங்காத இரும்பு மனிதர்கள், பெண்களைப் போலப் புலம்பவோ, அழவோ கூடாது என்று கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதார்த்தத்தில், பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால், பெரும் உணர்ச்சிப் போராட்டங்கள் ஏற்படுகின்றன (Mood Swings) என்கிறது மருத்துவ அறிவியல். அத்தகைய காலகட்டங்களில் ஆண்களுக்குக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் சப்போர்ட்டிவாக இருப்பது முக்கியம்.

ஆண்களின் மூட் ஸ்விங்ஸிற்கான காரணங்கள்:

24 மணி நேர ஹார்மோன் சுழற்சி: பெண்களுக்கு ஹார்மோன் சுழற்சி என்பது மாதமொரு முறை நிகழும். ஆனால் ஆண்களின் ஹார்மோன் சுழற்சி 24 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடும். ஆண்களின் சுறுசுறுப்பிற்குக் காரணமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் காலை வேளையில் மிக உச்சத்தில் இருக்கும்.

அதனால்தான் ஆண்கள் காலையில் அதிக ஆற்றலுடனும் தெளிவான சிந்தனையுடனும் காணப்படுகிறார்கள். மாலை நேரம் ஆகும்போது இந்த ஹார்மோன் மெல்லத் தேயத்தொடங்கும். இதனால்தான் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் ஆண்கள், சோர்வாகவோ சட்டென்று எரிச்சலடைபவர் களாகவோ இருக்கிறார்கள்.

இரிட்டபுள் மேல் சின்ட்ரோம் (Irritable Male Syndrome): அதிகப்படியான வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் அல்லது நிதி நெருக்கடியால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது, அவர்களின் உடலில் 'கார்டிசோல்'  என்னும் அழுத்த ஹார்மோன் சுரக்கிறது. இது அதிகமாகும்போது ஆண்களின் உற்சாகம் கணிசமாகக் குறைந்துவிடுகிறது. இதுவே அவர்கள் சட்டென்று எரிச்சலடைவதற்குக் காரணமாகிறது.

இதையும் படியுங்கள்:
பெண்ணின் கோபத்திற்குப் பின்னால் இருக்கும் பேரன்பும் ஆணின் புரிதலும்!
mens-mood-swing

ஆண்களுக்கான மெனோபாஸ் (ஆண்ட்ரோபாஸ்): ஆண்களுக்கு 30 வயதைக் கடந்ததும், ஒவ்வொரு வருடமும் ஒரு சதவீதம்  டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறையத் தொடங்கி, 40 முதல் 50 வயதை எட்டும்போது இன்னும் அதிகமாகக் குறையும். இதையே 'ஆண்ட்ரோபாஸ்' என்பார்கள். இக்காலத்தில் ஆண்களுக்குத் தன்னம்பிக்கை குறைவது, திடீர் பதற்றம், காரணமற்ற கோபம் மற்றும் தீவிரமான தனிமை உணர்வு போன்றவை தலைதூக்கும்.

ஆண்கள் தங்களின் மூட் ஸ்விங்ஸை எப்படி வெளிப்படுத்துகிறார்கள்?

பெண்கள் தங்களின் மன அழுத்தத்தை அழுதோ, தங்களுக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசித்தீர்ப்பதன் மூலமாகவோ எளிதாக வெளிப்படுத்திவிடுகிறார்கள். ஆனால், 'ஆண் அழக்கூடாது' என்கிற சுயக்கட்டுப்பாட்டால்,  தனக்குள் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்களை  தமக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்கிறார்கள். அல்லது அதை மற்றவர்களிடம் கோபமாகவோ, நக்கல் பேச்சாகவோ வெளிப்படுத்துகிறார்கள்.

குடும்பத்துப் பெண்கள் எவ்வாறு உதவலாம்?

தங்களின் பலவீனங்களை வெளியே சொல்லத்தயங்கும் சுபாவம் கொண்டவர்கள். இதனால் வீட்டில் இருக்கும் தாய், மனைவி அல்லது சகோதரி அவர்களைக் கனிவாக அணுகுவது மிக முக்கியம். அன்பாகப் பேசும்போது, அவர்கள் தன் மனதில் உள்ளவற்றை எடுத்துச் சொல்வார்கள்.

அவர் சோர்வாகவோ அல்லது மன இறுக்கத்துடன் வீட்டுக்கு வந்தால் கேள்விக்கணைகளால் துளைத்து எடுக்காதீர்கள். அவர் அமைதியாக இருக்க விரும்பினால், அதற்கு இடம் கொடுங்கள். தன்னைத்தானே மீட்டெடுக்க தனிமை  உதவும்.

அவர் திடீரென எரிந்து விழுந்தால் அது உங்கள் மீதுள்ள கோபமல்ல. அலுவலகத்தில் அல்லது வெளியிடங்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணம் மற்றும் ஹார்மோன், மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் கோபத்தில் கத்தும்போது பதில் பேசாமல் அமைதி காப்பது நல்லது.

அவரது கோபமும் எரிச்சலும் தணிந்து சாந்த நிலைக்கு வந்த பிறகு, “ஏன் அப்படி நடந்ததுக்கிட்டீங்க?” என்று குற்றம் சாட்டாமல், “உங்களுக்கு ஏதோ மனசுல கஷ்டம்னு புரியுது, நான் ஏதாவது உதவி செய்யணுமா?” என மென்மையாக, ஆறுதலாகக் கேட்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஏன் தந்தையின் கண்டிப்பு பெண் பிள்ளைகளை உடைத்து விடுகிறது? - ஒரு உளவியல் பார்வை!
mens-mood-swing

முறையான தூக்கம், சத்தான உணவு மற்றும் எளிமையான உடற்பயிற்சிகள் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவைச் சீராக வைக்க உதவும். அவர்களின் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களுக்குப் பெண்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் பெண்கள், ஆண்கள்  அகப்போராட்டத்தில் தவிக்கும்போது அன்பான அரவணைப்பையும் புரிதலையும் கொடுக்கவேண்டும். இதன் மூலம் கடினமான காலகட்டத்தையும் ஆண்கள் எளிதாகக் கடந்து, நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com