விஜயதசமி நாளில் குழந்தைக்கு வித்யாரம்பம்: அக்ஷராப்யாசம் செய்ய சரியான முறை எது?

சரஸ்வதி தேவியின் பரிபூரண அருளைப்பெற அரிசி மற்றும் நாக்கில் எழுதப்படும் ரகசிய சடங்குகள்.
வித்யாரம்பம் - Aksharabhyasam
வித்யாரம்பம் - AksharabhyasamImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு 'வித்யாரம்பம்' அல்லது 'அக்ஷராப்யாசம்' செய்வது மிக முக்கிய ஆன்மீக மற்றும் கலாச்சார மரபாகும். நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி தீமையை அழித்து நன்மையும், ஞானமும் வெற்றி பெற்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் எந்த ஒரு புதிய நற்காரியத்தைத் தொடங்கினாலும் அது நன்மையில் முடியும் என்பதால், குழந்தைகளுக்கு அன்று முதல் எழுத்தைக் கற்பித்து கல்வியைத் தொடங்குகின்றனர்.

கல்வி மற்றும் கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் பூரணமான அருள் இந்நாளில் கிடைப்பது இதனுடைய தனிச்சிறப்பாகும். எனவே விஜயதசமி அன்று வித்யாரம்பம் தொடங்குவது கல்வி மற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி தேவியின் அருளைப் பெற்றுத் தரும்.

நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமி அனைத்து நற்காரியங்களிலும் வெற்றியைத் தரும் நாளாக நம்பப்படுவதால் கல்வி, கலை மற்றும் புதிய முயற்சிகளைத் தொடங்க இந்த நாள் மிகவும் உகந்தது.

அதனால் கோவில்களிலும் வீடுகளிலும் வித்யாரம்பம் செய்யும் வழக்கம் உள்ளது‌. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல், பச்சரிசியைக் கொண்டு அட்சரம் எழுதி குழந்தைகள் தங்களுடைய கல்வியை ஆரம்பிப்பார்கள்.

அக்ஷராப்யாசம் செய்வதற்காக அன்று கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அத்துடன் ஏராளமான பள்ளி மாணவர்கள் நோட்டு, பேனாவை வைத்து வணங்கிச் செல்வார்கள். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
ஆண்டில் ஒருநாள் மட்டுமே திறக்கும் காஞ்சியின் பிறவாதீஸ்வரர் கோவில்!
வித்யாரம்பம் - Aksharabhyasam

குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற இந்த நிகழ்வு இந்தியாவில் பாரம்பரியமாக போற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே தங்களின் குழந்தைகளுக்கு பண்டிதரை அழைத்து வித்யாரம்பம் செய்து வைக்கலாம். கற்கும் கல்வியும் இறை வடிவமே என்பதை உணர்த்துவதற்காகவே நம் முன்னோர்கள் அட்சராப்யாசம் எனும் எழுத்தறிவித்தலை கடைபிடித்தனர்.

சிறு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனம், பிறமொழிப் பயிற்சி என புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது போன்றவற்றை இந்த நாளில் தொடங்க சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அரிசியில் "அ" எழுதும் முறை:

வித்யாரம்பம் தொடங்குவதற்கு பரந்த தட்டு ஒன்றில் பச்சரிசி அல்லது நெல்லைப் பரப்பி இந்த சடங்கு செய்யப்படுகிறது. அரிசியில் எழுதுவது அறிவைப் பெறுவதையும், வாழ்வை வளம் பெறச் செய்து செல்வ செழிப்பை கொண்டு வரும் என்பதையும் குறிக்கிறது.

வித்யாரம்பம் - Aksharabhyasam
வித்யாரம்பம் - AksharabhyasamImage credit: Gemini

வீட்டில் உள்ள பெரியவர்கள் தாத்தா அல்லது தந்தை அல்லது ஒரு குருவின் முன்னிலையில் இந்த சடங்கு செய்யப்படுகிறது. வீட்டின் பூஜை அறையிலோ அல்லது கோவிலிலோ சரஸ்வதி தேவி மற்றும் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட வேண்டும்.

பிறகு ஒரு தட்டிலோ அல்லது வாழை இலையிலோ முழுமையான, உடையாத பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். முதலில் குரு அல்லது தந்தை குழந்தையின் ஆள்காட்டி விரலைப் பிடித்து அரிசியில் "ஓம்" அல்லது குலதெய்வத்தின் பெயர் மற்றும் "ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ"போன்ற இறை மந்திரங்களை எழுத வைக்க வேண்டும்.

இது தடையற்ற தொடக்கத்திற்கு வழிவகுக்கும். அதன் பிறகு தமிழ் மொழியின் முதல் எழுத்தான "அ" என்ற எழுத்தை அரிசியில் எழுத வைக்கவேண்டும்.

நாக்கில் எழுதுதல்:

அதன் பிறகு சடங்கின் ஒரு பகுதியாக தங்க மோதிரம், தங்க ஊசி அல்லது தங்க நாணயத்தைக் கொண்டு குழந்தையின் நாக்கில் "அ" அல்லது "ஓம்" என்று எழுதுவார்கள். இது குழந்தையின் வாக்கில் சரஸ்வதி தேவி குடியிருந்து, அவர்களுக்கு சிறந்த அறிவாற்றலையும், தெளிவான பேச்சாற்றலையும் வழங்க உதவும் என்பது நம்பிக்கை ஆகும். இது ஞானத்தையும் நல்ல வாக்கையும் தரும் என்பதால் இந்தப் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏழுமலையான் 'வெறுங்கை வேடன்' என்று அழைக்கப்படுவதன் ரகசியம் தெரியுமா?
வித்யாரம்பம் - Aksharabhyasam
logo
Kalki Online
kalkionline.com