
சொந்தமாக வீடு கட்டி அதில் குடியேற வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். வீடு கட்டும் முன் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
1) நிலம் தேர்வு செய்வது:
சரியான மனையை தேர்வு செய்து வாங்குவது மிகவும் அவசியம். மனை வாங்குவதற்கு முன்பு அதைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆவணங்களை சரி பார்ப்பதும் குறைந்தபட்சம் 1200 சதுர அடி பரப்பளவு நிலம் இருக்குமாறு தேர்வு செய்வதும் நல்லது. அரசு விதிப்படி புதிய கட்டட அனுமதிக்கு குறைந்த பட்சம் 850 சதுர அடியாவது இருக்க வேண்டும்.
2) பாதை வசதி:
நாம் வாங்கும் மனைக்கு உரிய பாதை வசதி உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். அந்தப் பாதை பிரதான சாலையுடன் முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். மனைக்கு குடிநீர், மின்சார இணைப்புகள், கழிவுநீர் வடிகால் வசதிகள் பெறுவதற்கான வசதிகள் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
3) அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்:
அந்த மனை அமைந்துள்ள நிலம் முறையாக அரசுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும், அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுமனை அப்ரூவலான மனையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான DTCP அனுமதிக்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.
4) திட்டமிடல்:
புதிய வீடு கட்டுவதில் முழுமையான திட்டமிடுதல் அவசியம். குறைந்தது மூன்று பில்டர்களிடமாவது கொட்டேஷன் பெற்றுக் கொள்வது நல்லது. அதில் என்னென்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். வெறும் பணம் மட்டுமே குறைவாக இருக்கும் என்பதற்காக யாரையும் தேர்ந்தெடுத்து விட வேண்டாம்.
இதற்கு முன் அவர்கள் எவ்வளவு வீடு கட்டி உள்ளார்கள்? சமீபத்தில் கட்டி முடித்த வீட்டை சென்று பார்ப்பது, வீடு கட்டி முடிக்க எடுத்துக் கொண்ட காலம், பில்டிங்கின் தரம் ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியம். வீடு கட்டும் முன்பு ஆர்க்கிடெக்ட் ஒருவரை அழைத்து வீடு கட்ட போகும் இடம், அதற்கான பட்ஜெட், வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கூறினால் அதற்கு தகுந்தார் போல வரைபடம் உருவாக்கி தருவார்.
5) பட்ஜெட்:
வீடு கட்டுவது என்பது ஒரு பெரிய முதலீடாகும். வீட்டை கட்ட எவ்வளவு செலவாகும்? முதலில் நம்மிடம் எவ்வளவு கையிருப்பு உள்ளது. எவ்வளவு வரை நம்மால் செலவு செய்ய முடியும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடுவது நல்லது. அப்போது தான் நாம் நினைக்கும் பட்ஜெட்டிற்குள் நம் வீட்டை கட்ட முடியும். வீட்டை கட்டுவதற்கான மூலப் பொருட்கள் எங்கு குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு வாங்கினால் நம் பட்ஜெட்டிற்குள் குறைந்த செலவில் தரமான பொருட்களை வாங்க முடியும். வீட்டு வேலைகள் வேகமாகவும், எந்த விதமான சிக்கல்கள் இன்றியும் நடப்பதற்கு இவை உதவும்.
6) என்ன தேவை என்பதில் உறுதியாக இருப்பது:
புதிதாக வீடு கட்டுவதற்கு முன்பு நமக்கு அந்த வீட்டில் என்ன தேவை என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெட்ரூம்கள், வீட்டின் முன் பகுதியில் கடைகள் ஏதேனும் கட்டிவிட உத்தேசமா, தரையில் மார்பிளா, டைல்ஸா, கிரானைடா எதை போட வேண்டும்? வீட்டின் உள்ளே கப்போர்ட், லாப்ட் மற்றும் பால்ஸ் சீலிங் வேலைகள் வேண்டுமா என்று நம் தேவைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தெளிவாக முடிவு செய்த பிறகு தான் இன்ஜினியரையோ, காண்ட்ராக்டரையோ, பில்டரையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.