
அந்தக் காலத்தில் பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 23 வயது என்று திருமணத்திற்கான வயதுகளை நிர்ணயித்தார்கள். வாழ்க்கையில் ஒரு சராசரி மனிதருக்கு அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப திருமணம் நடப்பதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் அவசியமாகிறது. ஆனால், கல்வியறிவு பெருகி நாகரிகம் முன்னேறிவிட்ட இந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் திருமண வயதை தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார்கள். காரணம், தாங்கள் நினைத்தபடி வேலை, வசதி என செட்டிலாவதுதான் வாழ்க்கையில் முதல் லட்சியமாக அவர்கள் எண்ணுகிறார்கள். அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை நிச்சயமாகத் தள்ளிப் போடுகிறார்கள்.
தகுந்த வயதில் திருமணம், குழந்தை என்று இருந்தால்தான் எதிர்காலத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நலமாக இருக்க முடியும். குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டால் உண்டாகும் வயது வித்தியாசம் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே ஒரு சிறு இடைவெளியை ஏற்படுத்தி விடும் என்று உளவியலாளர்கள் கருதுகின்றனர். சரி, திருமணமான பிறகு எத்தனை வருடங்கள் வரை குழந்தை பெறுவதைத் தள்ளி போடலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
திருமணத்திற்கும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் இடையிலான சரியான நேரம், தனிப்பட்ட சூழ்நிலைகள், உணர்வு ரீதியான தயார் நிலை மற்றும் பொருளாதார சூழல் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு தம்பதிக்கும் மாறுபடும். இந்த உணர்வு பூர்வமான அலசல் அனைவருக்கும் பொருந்தக்கூடியது என்றாலும், சில பொதுவான ஆலோசனைகளை மட்டும் பார்ப்போம்.
பெரும்பாலும், திருமணமான புது ஜோடிகளுக்கு 2 அல்லது 3 வருட இடைவெளி நன்மை பயக்கும் என்கின்றனர். இது தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ளவும், திருமண வாழ்க்கையில் பொருத்திக் கொள்ளவும், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்த இடைவெளி உதவுகிறது. இதிலும் திருமணத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் காத்திருப்பது என்பது அந்த ஜோடிகளின் முழு திருமண திருப்திக்கு வழிவகுக்கும். ஏனெனில், இது தம்பதிகள் ஒருவருக்கொருவர் முரண்களை தெரிந்து சகிக்க அல்லது சரி செய்யவும் குழந்தைகளைப் பெறுவதற்கு முன்பு எந்தவொரு பிரச்னையையும் தீர்க்கவும் கூடுதல் அவகாசம் அளிக்கிறது. இருப்பினும், இந்த 3 வருடம் என்பது தம்பதியரின் பரஸ்பர புரிதல், உணர்வு ரீதியான தயார் நிலை காரணமாக மாறுபடலாம். ஆகவே, 2 முதல் 3 வருடங்கள் மட்டுமே திருமணத்திற்கும் முதல் குழந்தைக்கும் இடையிலான பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியாகக் கருதப்படுகிறது.
சரி, முதல் முறையாக பெற்றோர்களாக மாறுவதற்கான முன்னெச்சரிக்கைகள் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது. முதலில் கூடுதலாக வரப்போகும் பெற்றோரின் பொறுப்புகளை மனதளவில் ஏற்க கணவன், மனைவி இருவரும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இருவருடன் மூன்றாவதாக ஒரு உறவு வரும்போது ஒரு நிலையான அடிப்படை நிதி வசதியை உறுதி செய்வது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, குழந்தைக்குப் பாதுகாப்பான சூழலை வழங்கும்.
தற்போதைய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது அதிக ஆபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. அதே நேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதிகரித்த உடல்நல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு குழந்தையைப் பெறுவது உங்கள் தொழில் மற்றும் கல்வி இலக்குகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை நிச்சயமாக கவனித்து அதற்கேற்ப மாற்று வழிகளை சிந்திக்க தயாராகுங்கள்.
அதேபோல், முதல் குழந்தை பெறும் நிலையில் உள்ள தம்பதியர், வயது 20களின் பிற்பகுதியிலிருந்து 30களின் முற்பகுதியில் உள்ள பெண்கள் பெரும்பாலும் குழந்தை பிறப்பதற்கு உகந்த வயது வரம்பில் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு பாட்டி, தாத்தா போன்ற ஒரு நிலையான மற்றும் ஆதரவான உறவு மிகவும் முக்கியமானது என்பதால் குடும்பம் மற்றும் நண்பர்கள் உட்பட ஒரு வலுவான ஆதரவு அமைப்பு இருப்பது புதிய பெற்றோருக்கு நன்மை பயக்கும் விஷயமாகிறது.
கூடிய மட்டும் திருமணமாகி நீண்ட வருடங்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவதைத் தவிர்த்து, திருமணம் ஆனதும் இரண்டாம் வருடத்தில் குழந்தைக்கான பிளான் செய்வது தம்பதியருக்கு மகிழ்ச்சியைத் தரும்.