
உலகில் பயன்பாட்டிலிருக்கும் சாலைகளில் ஓடும் வண்டிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல நாடுகளிலும் வேக வரம்பு (speed limit) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வேக வரம்பு என்பது மிக அதிகமான வேகத்தை அல்லது மிகக் குறைந்த வேகத்தை அல்லது இரண்டையும் குறிக்கக் கூடும். பெரும்பான்மையான நாடுகளின் முக்கியமான சாலைகள் அனைத்துக்கும் வேக வரம்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வேக வரம்பு விதிக்கப்படாமல் இருப்பதும் உண்டு.
பெரிய சாலைகளில் சிறிய வண்டிகளுக்கு ஒரு வேக வரம்பும், பார வண்டிகளுக்கு அதிலும் குறைவான வேக வரம்பும் விதிக்கப்படுவது உண்டு. சாலைகளுக்கான வேக வரம்புகளை, சாலைகளில் போக்குவரத்துக் குறிப்பலகைகளை இடையிடையே வைப்பதன் மூலம் மக்களுக்கு அறிவிக்கின்றனர். பொதுவாக, வேக வரம்புகள், சட்ட அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டு, காவல் துறையினரால் செயற்படுத்தப்படுகின்றன.
உலகின் முதலாவது வேகக் கட்டுப்பாட்டை 1861 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தினர். அது ஒரு மணிக்கு 10 மைல்கள் ஆகும். 2005 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் விதிக்கப்பட்ட மிக அதிகமான வேக வரம்பு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள் என்று இருக்கிறது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அமீரகமான அபுதாபியில் செயல்படுத்தப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டில் 140 கிமீ/மணியாக மாற்றப்பட்டுள்ளது.
சில சாலைகளுக்கு வேக வரம்பு விதிக்காத நாடுகளும் இருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, ஜெர்மனியைக் குறிப்பிடலாம். இங்கேப் போக்குவரத்து நெரிசல் குறைவான நெடுஞ்சாலைகளில் உயர் வேக வரம்பு கிடையாது.
வேக வரம்பு, சாலைப் போக்குவரத்தின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்காகவே அதிகமாகப் பயன்படுகின்றது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது, சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் சேதங்களைக் குறைப்பது போன்றவை இவற்றுள் முக்கியமானவை. "சாலைப் போக்குவரத்துக் காயங்களைத் தவிர்ப்பது தொடர்பான உலக அறிக்கை" (World report on road traffic injury prevention) என்று தலைப்பிட்ட உலக நல நிறுவனத்தின் அறிக்கை, சாலைச் சேதங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக வேகக் கட்டுப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தினால் ஏற்படக்கூடிய சூழல் தாக்கங்களைக் குறைப்பதற்கும் வேக வரம்பு உதவுகின்றது. வேகமாகச் செல்லும் வண்டிகளினால் இரைச்சல், அதிர்வு, கேடு விளைவிக்கக்கூடிய வாயு வெளியேற்றம் என்பன கூடுதலாக இருக்கின்றன.
இந்தியாவில், பல்வேறு சாலைகளின் அமைப்புக்கு ஏற்ப வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள், ஓட்டுநர் இருக்கைக்குக் கூடுதலாக எட்டு இருக்கைகளுக்கு மேல் இல்லாத வாகனங்கள் (M1 வகை வாகனங்கள்) அணுகல் கட்டுப்பாடுடன் கூடிய விரைவுச் சாலைகளில் 120 கிலோ மீட்டர் வரையிலும், நான்கு வழி மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட வாகனப் பாதைகளில் 100 கிலோ மீட்டர் வரையிலும், நகரப் பகுதிகளில் 70 கிலோ மீட்டர் வரையிலும் வேகமாகச் செல்ல முடியும்.
ஓட்டுநர் இருக்கைக்கு கூடுதலாக ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள் (M2 மற்றும் M3 வகை வாகனங்கள்) மேற்காணும் பிரிவுகளில் முறையே, 100 கிலோ மீட்டர், 90 கிலோ மீட்டர், 60 கிலோ மீட்டர், 60 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல முடியும். சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் அதிக வாகனங்கள் (அனைத்து N வகை வாகனங்கள்) மேற்காணும் பிரிவுகளில் முறையே, 80 கிலோ மீட்டர், 80 கிலோ மீட்டர், 60 கிலோ மீட்டர், 60 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல முடியும்.
இருசக்கர வாகனங்கள் (Motor Cycles) அணுகல் கட்டுப்பாடுடன் கூடிய விரைவுச் சாலைகளில் அனுமதிக்கப்பட்டால், மேற்காணும் பிரிவுகளில் முறையே, 100 கிலோ மீட்டர், 90 கிலோ மீட்டர், 60 கிலோ மீட்டர், 60 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல முடியும். நான்கு சக்கரச் சுழற்சியிலான வாகனங்கள் (Quadricycle) அணுகல் கட்டுப்பாடுடன் கூடிய விரைவுச் சாலைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற பிரிவுகளில் முறையே, 60 கிலோ மீட்டர், 50 கிலோ மீட்டர், 50 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல முடியும். மூன்று சக்கர வாகனங்கள் அணுகல் கட்டுப்பாடுடன் கூடிய விரைவுச் சாலைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற பிரிவுகளில் முறையே, 50 கிலோ மீட்டர், 50 கிலோ மீட்டர், 50 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல முடியும்.
இந்திய அரசு அறிவித்துள்ள மேற்காணும் வேக வரம்பைத் தவிர்த்து, தங்களது பகுதிகளுக்குக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவே, தனியான வேக வரம்புகளை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.