‘நிகழ்காலமும், எதிர்காலமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், செயல் நோக்கமாக இருந்தால்தான் நினைத்தது நிறைவேறும். அதற்காகவே மகிழ்ச்சியான மனநிலையில் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும்’ என்கிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் எட் மைனர். எப்போதும் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், அப்படி இருப்பது என்னவோ எளிமையான காரியம் கிடையாது. எனினும், நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமா அல்லது வருத்தமாக இருக்க வேண்டுமா என்பதை நாமே தேர்வு செய்கிறோம்.
மகிழ்ச்சியான மனநிலையில் வாழ்ந்தால் நம் உடலில் ‘சிக் ஏ’என்ற பொருளும் ‘இன்டர்காமின் 6’ என்ற பொருளும் அதிகரிக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பாற்றலை வீரியத்துடன் வைத்திருக்கிறது. இது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. நம்முடைய மகிழ்ச்சியான உணர்வுகளுக்குக் காரணம் மூளையில் சுரக்கும், ‘டோபமைன்’ எனும் ரசாயனம்தான். இதுதான் நமது இயக்கம், கற்கும் ஆற்றல், நினைவுத் திறன் மற்றும் மூளையின் பலத்திற்கும் காரணமாக இருக்கிறது. எனவேதான் அன்றாடம் மகிழ்ச்சி மனநிலையில் இருங்கள் என்கிறார்கள், ‘யேல்’ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
மகிழ்ச்சியாக இருக்க தினமும் சலவை செய்த பளிச்சென்ற புதிய ஆடைகளை அணியுங்கள். அளவுடன் சாப்பிடுங்கள். மூச்சு முட்ட சாப்பிடாதீர்கள். எதிலும் ஆர்வமாக, சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள். உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வாருங்கள். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்பட்டால் நீங்கள் கைவிட வேண்டிய ஒருசில மோசமான பழக்கங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தொடர்ச்சியாக உங்களுடைய வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, உங்களுடைய மகிழ்ச்சியை குறைத்து, பாதுகாப்பு இல்லாத ஒரு உணர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலுமே சவால்கள் இருக்கும். எனவே, உங்கள் மீதும் உங்களுடைய மகிழ்ச்சியின் மீதும் கவனம் செலுத்துங்கள்.
தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருப்பது மற்றும் உங்களுடைய கடந்த கால தவறுகளைப் பற்றியும், எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக இருப்பீர்களா என்பது குறித்த சந்தேகங்களையும் கைவிடுங்கள். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் மட்டுமே ஏற்படும். எனவே, இதற்கு பதிலாக கடந்த காலத்தை கடந்தவையாக பாருங்கள். தற்போதைய தருணத்தில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்களைப் பற்றி நீங்களே தவறாகப் பேசுவதைத் தவிர்க்கவும். மற்றவர்களை நீங்கள் எவ்வளவு அன்போடு, கனிவோடு நடத்துகிறீர்களோ அவ்வாறே உங்களையும் நடத்துங்கள். நீங்கள் செய்யும் ஒரு விஷயம் ஒருவரை திருப்திப்படுத்தலாம், மற்றவருக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தலாம். எனவே, ஆரோக்கியமான வரம்புகளை அமைத்து, உங்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
எந்த சூழலில் நாம் பயணித்தாலும் எப்போதுமே நேர்மறை, அதாவது பாசிடிவ் எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். படிப்பது முதல் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் எதிர்மறை எண்ணங்கள் வந்துவிட்டால் எல்லாமே முற்றிலும் மாறிவிடும். எனவே, முடிந்தவரை முடியாத காரியத்தைக் கூட எப்படியாவது செய்து விடுவோம் என்ற நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒருவகையில் இது எந்த வயதிலும் புத்துணர்ச்சியுடன் ஓடுவதற்கு உதவியாக இருக்கும்.
நேரத்தை வீணாகக் கழிப்பது மற்றும் தாமதப்படுத்துவது ஆகியவை உங்களுக்கு மன அழுத்தம், பதற்றம் மற்றும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். எனவே, அதற்கு பதிலாக உங்களுடைய வேலைகளை நீங்கள் சமாளிக்கக்கூடிய சிறிய வேலைகளாக பிரித்து உடனடியாக முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
எதிர்மறையான நபர்கள் அல்லது ஆற்றல் கொண்டவர்களோடு உறவு வைத்துக் கொள்வது உங்களுடைய மகிழ்ச்சியை சீர்குலைக்கும். எனவே, அதற்கு பதிலாக அன்பு, மரியாதை மற்றும் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நபர்களை உங்களை சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். எல்லா நேரத்திலும் உங்களால் பெர்ஃபெக்டாக இருக்க முடியாது. எனவே, இதனை நினைத்து நீங்கள் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்தாதீர்கள். மாறாக, உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். பிறருடைய முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள், பாராட்டுக்களை வழங்குங்கள்.