
ஆன்மிக ஒழுக்கம் நிறைந்திருந்த அந்தக் காலத்தில் அன்றாட விஷயங்களுக்குக் கூட முறையான நியதிகளைப் பின்பற்றி வந்தனர். உதாரணமாக, வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது கால்களின் பின்புறத்தைக் கழுவி வீட்டில் நுழைவது, வீட்டுக்குள் நுழைந்தவுடன் சற்று நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின்னர் வேலைகளைப் பார்ப்பது, இரவில் பால், தயிர் போன்றவற்றை இரவல் தராதது, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தலை வாறுதல், வீடு பெருக்குதல் அல்லது துடைக்காமல் இருப்பது உள்ளிட்ட எண்ணற்ற பழக்கங்களைக் கடைபிடித்தனர்.
பகுத்தறிவு பெருகினாலும் இந்த நியதிகளின் பின்னே உள்ள அறிவியலை ஆராய்ந்தால் மட்டுமே இதற்கான காரணங்கள் புரியும். இன்றும் கிராமங்களில் இந்தப் பழக்கங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் இரவு நேரத்தில் வீட்டைப் பெருக்காமல் இருப்பதும் ஆகும். ‘ஏன் இரவில் வீட்டைக் கூட்டினால் விளக்குமாறு கூட்டாதா?‘ எனும் கேலிப் பேச்சுகள் இளையவர்களிடம் உண்டு. அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக, வீடுகளைப் பெருக்கித் துடைத்து சுத்தம் செய்வதை நேர்மறை ஆற்றல் இருக்கும் பகல் நேரத்தில் மட்டுமே செய்வது வழக்கம். இரவுகளில் இதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், ஆன்மிக ரீதியாக இரவில் வீடு பெருக்குவது நல்லதல்ல என்றும், பெருக்கினால் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி வீட்டில் தங்க மாட்டார் என்றும் அதனால் செல்வம் குறைந்து வறுமை பெருகும் என்பதும் பெரியோர் கருத்து.
வாஸ்து சாஸ்திரமும் இதையே குறிப்பிடுகிறது. காரணம், இரவுகளில் உலா வரும் எதிர்மறை ஆற்றல்களை இச்செயல் எளிதாக ஈர்க்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீடு பெருக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆன்மிகக் காரணங்கள் சொல்லி அதன் பொருட்டு இதுபோன்ற விஷயங்களை எச்சரித்தாலும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால் இதன் பின்னணி என்ன என்பது புரியும்.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீடும் தனித்தனி பெரிய வீடுகளாக இருக்கும். தற்போதைய அடுக்குமாடிக் கட்டடங்கள் போல அல்லாமல் அந்த வீட்டைச் சுற்றி பெரிய பெரிய மரங்கள், செடி, கொடிகள் அனைத்தும் இருக்கும். சூரியன் மறைந்த பிறகுதான் செடி, கொடிகளில் மறைந்திருக்கும் பூச்சிகள், பூரான், தேள், பாம்பு போன்றவை வெளியே வரும். எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் அவை வரும்போது நாம் பெருக்கினால் அவற்றைத் தொந்தரவு செய்ததாக நினைத்து அவற்றினால் நமக்கு ஆபத்து நேரலாம் என்பது ஒரு காரணம்.
அதுபோல, அந்தக் காலத்தில் மின்சார வசதிகள் கிடையாது என்பதால், வெளிச்சத்திற்காக விளக்கு ஒளியைத்தான் பயன்படுத்தி வந்தார்கள் என்பதை அறிவோம். இரவில் வீட்டைப் பெருக்கினால் நம்மை அறியாமல் தரையில் விழும் நாம் அணிந்திருக்கும் தங்கம் போன்ற விலைமதிப்புள்ள பொருட்களையும் கூட்டித் தள்ளி குப்பையில் போட்டு விடும் வாய்ப்பு இருந்தது என்பதும் காரணமாக இருந்தது. இரவு நேரத்தில் குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது என்ற பழக்கமும் இதைக் காரணமாக வைத்தே வந்தது எனவும் கூறலாம்.
இது மட்டுமல்லாமல், வீட்டைத் துடைக்கும்போது அல்லது பெருக்கும்போது சில விதிகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறது. எப்போதும் வீட்டின் நுழைவாயிலிலிருந்து பெருக்கத் துவங்கி, வீட்டின் உட்புறத்தை நோக்கி குப்பையை நகர்த்தி அள்ள வேண்டும். இது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வந்து எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவதற்கு உதவி, குடும்பத்தில் மகிழ்வைத் தருகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பராமரிக்கத் தூய்மை முக்கியமாகக் கருதப்படுகிறது என்பதாலும் ஆன்மிக ரீதியில் செல்வம் பெருக பகலில் மட்டும் பெருக்குவது நல்லது என்பதாலும் இதுபோன்ற சம்பிரதாயங்களை மறுக்காமல் கடைபிடிப்பது நன்மை தரும்.