வீட்டை ராயல் தோற்றமா மாற்ற வேண்டுமா? மரச் சிற்பங்களின் ரகசியம் இதோ!

பாரம்பரிய கலையோடு உங்கள் வீட்டை சொர்க்கமாக மாற்ற எளிய வழிகள்.
மரச் சிற்பங்கள்
மரச் சிற்பங்கள்AI image
Updated on

வீட்டு அலங்காரத்தில் மரச் சிற்பங்கள் இயற்கையான அழகையும், பாரம்பரிய நயத்தையும், நவீன கலவையான நேர்த்தியான, கம்பீரமான தோற்றத்தையும் தருகின்றன. தேக்கு, ஓக், மஹோகனி, வாகை மற்றும் அரும்பாவூர் தழுதாழை போன்ற கடின மரங்களால் செய்யப்படும் சிற்பங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.

இவற்றை வீட்டின் வரவேற்பறை, பூஜை அறை முதல் பிரதான கதவுகள் வரை மரச் சிற்பங்களை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தலாம். இவை எந்த ஒரு அறைக்கும் அமைதியான மற்றும் நேர்த்தியான சூழலை உருவாக்குகின்றன.

1. தம்மம்பட்டி மரச் சிற்பம்:

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மர சிற்பக்கலை ஒரு பாரம்பரியத் தொழிலாக தொடர்ந்து வருகிறது‌. சுமார் 70 குடும்பங்களைச் சேர்ந்த கலைஞர்கள் அபூர்வமான மரங்களைத் தேர்வு செய்து தத்ரூபமான சிற்பங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த ஊரின் பெயரைக் கேட்டாலே மர சிற்ப கலைஞர்களின் கைவண்ணம்தான் முதலில் நினைவிற்கு வரும்.

இங்கு இவர்கள் மரச் சிற்பக்கலையை ஒரு பாரம்பரியத் தொழிலாக செய்து வருகின்றனர். உச்சி முதல் பாதம் வரை அளவுகள் சரியாக அமைய வேண்டும் என்பதற்காக பாண்டியர் காலத்தில் பின்பற்றப்பட்ட ஏழரை பாக அளவுமுறையை இன்றும் இவர்கள் பின்பற்றுகின்றனர். இறுதியில் முகம் மண்டலத்தில் கண், மூக்கு, உதடு போன்றவை வடிவமைக்கப்படும் தருணங்கள் தான் அந்த சிற்பத்திற்கு உயிர் சேரும் நேரம் என்று இந்த கலைஞர்கள் கூறுகின்றனர். இவர்களின் மர சிற்பங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மரச் சிற்பங்கள்
மரச் சிற்பங்கள்AI image

2. மரச் சிற்பங்களின் வகைகள் மற்றும் வடிவங்கள்:

தெய்வீக வடிவங்கள்:

விநாயகர், முருகர், நடராஜர், கிருஷ்ணர் மற்றும் புத்தர் சிலைகள்.

விலங்கு வடிவங்கள்:

பாரம்பரிய முறையில் செதுக்கப்பட்ட யானை, குதிரை மற்றும் அன்னப்பறவை சிற்பங்கள்.

நவீன & சுருக்க வடிவங்கள்(Abstract): சமகால கலை நயத்தைக் காட்டும் வடிவியல் கோடுகள் மற்றும் சுருக்கமான வடிவங்கள்.

இதையும் படியுங்கள்:
புதிய துணிகளின் நிறம் மங்காமல் இருக்க... இந்த ஒரு பொருள் போதும்!
மரச் சிற்பங்கள்

3. அலங்கரிக்கும் முறைகள்:

வரவேற்பறை (living room):

நவீன அல்லது பாரம்பரிய கலைப் பொருட்களை காட்சிப்படுத்த விரும்புபவர்கள், வரவேற்பறையில் புத்தர், நடராஜர் அல்லது நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சுவரில் தொங்கவிடப்படும் மரப் பேனல்கள் (wall panels) மற்றும் 3D வடிவங்களை வைக்கலாம். சோபா அருகில் அல்லது மூலையில் பெரிய அளவிலான மரச் சிற்பங்களை வைப்பது பார்வையாளர்களை ஈர்க்கும்.

பூஜை அறை:

இறைவழிபாட்டிற்கு உகந்ததாக வடிவமைக்கப்படும் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி மற்றும் முருகன் போன்ற சுவாமி சிலைகள் மற்றும் மரத்தாலான சிறிய பூஜை மண்டபங்களை அமைக்கலாம்.

சுவர் அலங்காரம் (Wall Decor):

சுவர்களை வெறுமையாக விடாமல், மரத்தால் செதுக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் ஜியோமெட்ரிக் வடிவமைப்புள்ள மரச் சுவரோவியங்களைப் பொருத்தலாம். மரத்தாலான சுவர் பேனல்கள் (Wall Mount Panels) மற்றும் மரச் சட்டங்கள் கொண்ட கண்ணாடிகள்.

நுழைவு வாயில் (Main Door):

வீட்டின் நுழைவாயிலை அழகுப்படுத்தும் விதமாக கதவுகளில் மரத்தால் செதுக்கப்பட்ட தாமரை மலர், கஜலட்சுமி அல்லது பறவைகள் போன்ற சிற்ப வேலைப்பாடுகளைச் செய்யலாம். வரவேற்புப் பகுதியில் வைக்கப்படும் சிறிய மரப் பலகைகள் அல்லது பாரம்பரிய மங்கலச் சின்னங்கள் வீட்டுக்கு ஒரு அழகைத் தருவதுடன் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
செல்வத்தையும் அமைதியையும் ஈர்க்கும் வெண்கல சிலைகள் - உங்கள் வீட்டின் புதிய அடையாளம்!
மரச் சிற்பங்கள்

4. பராமரிப்பு குறிப்புகள்:

நேரடி சூரிய வெளிச்சம் வெளிப்படும் இடத்தில் வைக்க வேண்டாம். இதனால் மரத்தில் விரிசல்கள் விழலாம் என்பதால் நிழலான இடத்தில் வைக்கவும்.

மென்மையான துணி அல்லது பிரஷ் கொண்டு வாரத்துக்கு ஒரு முறை மென்மையாகத் தூசிகளைத் துடைத்து அகற்றலாம்.

சிற்பங்களை ஈரமான இடங்களில் வைக்க வேண்டாம். தண்ணீர் பட்டால் உடனடியாக உலர்ந்த துணியால் துடைத்து விடவும். ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

சோப்பு அல்லது கடினமான துப்புரவு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

தேக்கு எண்ணெய் அல்லது பிரத்யேக மர மெழுகு (wood polish) வருடத்திற்கு ஒருமுறை பூசி வர மரம் பளபளப்பாகவும் வறட்சியின்றியும் இருக்கும்.

கரையான் தாக்குதல் வராமல் இருக்க அவ்வப்பொழுது வேப்பெண்ணை அல்லது முறையான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வீட்டின் மூலைமுடுக்குகளிலும் பாரம்பரிய கலைநயத்தை கொண்டுவருவதன் மூலம், விருந்தினர்களை ஈர்க்கும் கம்பீரமான தோற்றத்தையும், மனதுக்கு அமைதியளிக்கும் நேர்மறை ஆற்றலையும் முழுமையாகப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com