
நாம் கிராமப்புறங்களில் தெருவில் வரும் பெருமாள் மாடு, வண்ண வண்ண ஆடைகள் அணிந்து வரும். அதை ஓட்டி வரும் அந்த நபரும் வண்ண ஆடைகள் அணிந்து இருப்பார்.
இந்த மாட்டின் கொம்புகளை இணைத்து மணிகள் கட்டபட்டிருக்கும். கழுத்தைச் சுற்றி ஒலி எழுப்பும் சின்ன சின்ன மணிகளும், கால்களில் சிறு சலங்கைகளும் கட்டப்பட்டிருக்கும். நெற்றியில் பெரிய திருமண் இடப் பட்டுருக்கும். இந்த மாட்டுடன் வந்த நபர், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தான் கொண்டு வந்திருக்கும் சின்ன நாதஸ்வரம் போன்ற கருவியில் ஓசை எழுப்பி, அய்யாவுக்கு “நல்ல காலம் பொறந்துச்சு, அப்படித்தானே!" என்று சொன்னால், அந்த மாடும் தலைய ஆட்டும். அப்படி ஆட்டும் போது வித விதமான ஒலிகள் எழும். இவரை 'பூம் பூம் மாட்டுக்காரன்' என்று அழைப்பார்கள். சில பேர் பணமாகவோ, பொருளாகவோ இவருக்கு கொடுப்பது வழக்கம்.
கிராமப்புறங்களில் இன்னும் இந்த பூம் பூம் மாட்டுக்காரன் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தலைமுறையும் சரி, நகரத்தில் வசிக்கும் மக்களும் சரி, இதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு ஒரு ஆறுதல்... 'அதே கண்கள்' திரைப்படத்தில் கதாநாயகி கிராம சீர்திருத்தப் பணிகள் செய்யும் காட்சி வரும். அப்போது இந்த பூம் பூம் மாட்டுகாரன் வருவது போன்ற ஒரு காட்சி வரும். கதாநாயகி மற்றும் தோழிகள் “பூம் பூம் மாட்டுகாரன் தெருவில் வந்தாண்டி டூம் டூம் மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி“ என்று பாடுவார்கள். பார்த்து கொள்ளுங்கள்.
சரி சரி இந்த பூம் பூம் மாட்டுக்கும் Yes Boss Principle க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது என் காதில் விழுகிறது.
ஒருவரிடம் நமக்கு காரியம் ஆக வேண்டுமானால் அவர் என்ன சொன்னாலும், அதிலுள்ள உண்மையை ஆராயமால் உடனே “ஆமாம் ஆமாம்” என்று கூறுவதை, பெருமாள் மாடு தலயசைப்பதற்கு ஒப்பாகக் கூறுவர்.
இதனை மேலாண்மைக் கொள்கைகளில் (Management Principles) YES BOSS PRINCIPLE என்று அழைப்பர்.
தன்னுடைய மேலதிகாரி சொல்லும் அனைத்து வார்த்தைகளுக்கும், ஆமாம் போடுபவர் பெருமாள் மாடு ஆவர். பாஸ் சொல்லும் அனைத்து வார்த்தைகளிலும் ஏதோ ஒரு பொருள் இருப்பதாக எண்ணி, ஆனால் அதை அறிந்து கொள்ள இயலாமல், மாடு தலையாட்டுவதைப் போல, தன் மேலதிகாரியிடம் காக்கா பிடித்து காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைக்கும் அந்த நபரும் 'ஆமாம் ஆமாம்' என்று தலை அசைப்பார்.
இதுவே 'YES BOSS' PRINCIPLE
பின் குறிப்பு:
இப்படிபட்ட ஊழியர்களின் செயலால் அந்த நிறுவனம் அழிவை நோக்கிச் செல்லுமே தவிர முன்னேற்ற பாதையில் செல்லாது. இது தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். என்னுடைய நாற்பது வருட அலுவலக பணியில் நான் கண்ட உண்மை.