சில பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பார்த்திருப்போம். பணக்கார வீட்டு குழந்தைகளான அவர்கள் பள்ளி சொல்லும் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படாமல் சொகுசாக இருப்பதை காணலாம். உதாரணமாக மற்ற பிள்ளைகள் தங்கள் பிறந்தநாளுக்கு கடலை பர்பி போன்றவற்றை எடுத்து வரலாம் எனும் சூழ்நிலையில் இவர்கள் மிகப்பெரிய சாக்லேட் பார்களை தூக்கி வருவார்கள்.
அவர்களின் அந்தஸ்து காரணமாக அல்லது பள்ளிக்கு அவர்களால் கிடைக்கும் ஆதாயம் காரணமாக அந்த பள்ளி நிர்வாகமும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் இது போன்ற செயல்கள் மற்ற பிள்ளைகளிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும் .
அது மட்டும் இன்றி அந்த பணக்கார வீட்டு குழந்தைக்கு தானே மற்றவர்களை விட உயர்ந்தவன்(ள்) எனும் எண்ணம் மனதில் பதிந்து பின்னாளில் அதுவே குழந்தையை எவருடனும் பழக விடாமல் செய்து விடும். இதனால் அவர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நிலையற்ற பணத்தைக் கொண்டு நிரப்பாமல் மதிப்பு தரும் குணத்தை கொண்டு நிரப்பினால் அவர்களும் சிறந்த வெற்றியாளராக வாழ்வார்கள்.
குறிப்பாக பணத்துடன் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமநிலையை கற்றுத் தருவது பணக்கார பெற்றோராக மிக முக்கியமானது. பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டிய 10 நல்ல பழக்கங்கள் பற்றி இங்கு காண்போம். இவைகள் பணக்கார பெற்றோர்களுக்கு மட்டுமல்ல மற்ற சாதாரண பெற்றோருக்கும் பொருந்தும்.
1. பணத்தின் மதிப்பை புரிந்து கொள்ள வையுங்கள்.
பெற்றோரிடம் எப்போதும் பணம் இருக்கும் என்பதால் பணத்தின் மதிப்பு இவர்களுக்கு தெரியாது. எனவே பணம் எளிதில் வரும் ஒன்று அல்ல என்பதையும் அதை சம்பாதிக்கவும், நிர்வகிக்கவும் கடின உழைப்பு தேவைப்படுவதையும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.
2. சேமிப்பு பழக்கத்தை கற்றுத் தாருங்கள்.
எப்படியும் பணக்கார குழந்தைகள் கையில் பாக்கெட் மணி என்ற பெயரில் பெற்றோர் பணத்தை தருவதுண்டு. அப்படி தரும் பணத்தில் ஒரு பகுதியை "Piggy Bank” அல்லது சிறு சேமிப்பு கணக்கு மூலம் சேமிக்கச் செய்வதை சிறு வயதிலேயே பழக்கமாக்க வேண்டும் .
3. பகிர்ந்தளிக்கும் மனப்பான்மையை வளர்த்து விடுங்கள்.
சில குழந்தைகள் பணமும் வசதிகளும் தனக்கு மட்டுமே என்று எண்ணி யாருக்கும் உதவுவதை தவிர்ப்பார்கள். ஆனால் தன்னுடைய வசதிகளிலிருந்து தானம், சமூக சேவை, அல்லது பிறரை மகிழ்விக்கச் செய்வது போன்றவைகளை அவர்கள் கையாலேயே செய்ய வைத்து மற்றவர்களுக்கு உதவுவதின் மகத்துவத்தை கற்றுத்தருங்கள்.
4. நேரத்தை மதித்து செலவழிக்க சொல்லுங்கள்
பணத்தைக் காட்டிலும் நேரம் அருமையானது என்பதை உணர்த்துங்கள். நேரம் மேலாண்மை குறித்து புரிய வையுங்கள். நல்ல திட்டமிடல், சரியான பணி முடித்தல் இவற்றுடன் ஓய்வுக்கும் மதிப்பு கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.தேவையில்லாமல் பொழுதுகளை வெறுமனே வீணாக்குவதை அனுமதிக்காதீர்கள்.
5. சிந்தித்துத் தீர்மானிக்கும் பழக்கம் அவசியம் என்று உணர்த்துங்கள்.
பணம் தந்தால் விரும்பும் எல்லாவற்றையும் வாங்கலாம் என்றஎன்ற எண்ணத்தில் எதைக் கண்டாலும் வாங்க தடை போடுங்கள். ஏதாவது வாங்குவதற்கு முன் “இது உண்மையில் தேவைதானா?” என்ற கேள்வியை கேட்கச் சொல்லுங்கள். தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய அவர்களிடமே விடுங்கள். இது பொறுப்பான நிதி முடிவுகளை எப்போதும் எடுக்க உதவும்.
6. பணிவும் நன்றியுணர்வும் கற்றுத் தாருங்கள்.
மற்றவர்களை விட பணம் அதிகம் அவர்களிடம் இருப்பது ஒரு வாய்ப்பு மட்டுமே என்றும் அதுவே பெருமை அல்ல என்பதையும் கற்றுத்தருங்கள். மற்றவர்களின் குணங்களை ஏற்று மதிப்பதும், செய்த செயலுக்கு அவர்கள் இருந்தாலும் நன்றி சொல்லும் பழக்கமும் மிகப் பெரிய குணங்களாகும்.
7. புதிது புதிதாக கற்றுக்கொள்வதை தொடர்ந்து செய்வது..
நமக்குத் தான் பணம் இருக்கிறதே என நினைத்து எதையும் முனைந்து கற்றுக் கொள்ளாமல் இருப்பது தவறு. பணம் இருந்தாலும் கற்றல் நிறுத்தக் கூடாது. புதிய திறன்கள், புத்தகங்கள், அனுபவங்கள் ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்யுங்கள்.
8. தன்னம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வுகளை புரிய வையுங்கள்.
தாங்கள் செய்யும் எந்தவொரு செயல்களுக்கும் (தவறோ சரியோ) பொறுப்பு ஏற்கும் பழக்கத்துடன் வெற்றி, தோல்வி இரண்டையும் நேர்மையாக அணுகக் கற்றுக்கொடுங்கள். பொய் சொல்லி தப்பிப்பதும் சாக்கு சொல்வதும் சரியல்ல என்பதை சொல்லித் தாருங்கள்.
9. நல்ல நடத்தை மற்றும் ஒழுக்கமே சிறந்தது என்பதை அழுத்தமாக பதியுங்கள்.
பண பந்தா காட்டி அலட்சியம் காட்டாமல் மனித உறவுகளை மதித்து நடத்துவதும், – பணக்காரர் என்ற பெயரில் அதிகாரம் காட்டாதிருத்தல் மற்றும் பணிவாக நடப்பதுடன் தனி மனித ஒழுக்கங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். சொத்துக்கும் பொறுப்புக்கும் இடையிலான வேறுபாட்டை உணர வையுங்கள்.
10. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது கடமை என வலியுறுத்துங்கள்.
பணம் இருப்பதால் அவர்கள் கூடுதல் அக்கறையுடன் சமூகத்திற்கும், உலகிற்கும் பொறுப்பு உள்ளவர்களாக வளர வேண்டும் என்பதுடன் பொது இடங்களில் பொருள்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், இயற்கையை மதித்தல் போன்றவைகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.