

நிறைய மதிப்பெண் பெறுபவர்களைத்தான் புத்திசாலிகள் என்றும், சமூகமும் கல்வி நிறுவனங்களும் வரையறுக்கிறார்கள். குறைவாக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை புத்திசாலிகள் அல்ல என்று தீர்மானிக்கிறார்கள். இந்தக் கருத்தை ஹோவர்ட் கார்டனர் என்கிற உளவியலாளர் மறுக்கிறார். ஒரு மனிதன் எல்லாத்துறைகளிலும் புத்திசாலியாக இருக்க முடியாது. ஒன்பது வகையான புத்திசாலித்தனத்தை பட்டியலிட்டு இதில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் மனிதர்கள் நிச்சயம் புத்திசாலியாக இருப்பார்கள் என்கிறார்.
9 வகையான புத்திசாலித்தனம்:
1. மொழி சார்ந்த புத்திசாலித்தனம்:
சிலருக்கு தாய் மொழியில் ஆழ்ந்த அறிவும் வளமான சொற்களஞ்சியத்தை பயன்படுத்தும் திறனும் இருக்கும். கவிதைகள், கதைகள் படைக்கும் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும், சிறந்த மொழித் திறமையால் பார்வையாளர்களை கட்டிப்போடும் திறன் பெற்ற பேச்சாளர்களாக இருப்பார்கள். இவர்களால் புதிய மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ள முடியும்
2. இடம் சார்ந்த நுண்ணறிவு:
இடம் வடிவம் மற்றும் திசையை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். கட்டிடக்கலைஞர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள்,விமானிகள் போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சிறந்த திசை உணர்வு இருக்கும். த்ரீ டைமென்ஷன்ஸ் கோணத்தில் பொருள்களை காட்சிப்படுத்தி கையாளும் திறன் பெற்றவர்கள்.
3. உடல் இயக்கவியல் நுண்ணறிவு:
பளு தூக்கும் வீரர்கள், நீச்சல் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், நடனக் கலைஞர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உடல் இயக்கம் மற்றும் உடலின் கட்டுப்பாடு பற்றிய இயல்பான புரிதல் சிறப்பாக இருக்கும். இவர்கள் உடலை திறமையாக பயன்படுத்துவார்கள். உடல் ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டை பற்றி அதிகமாக தெரிந்திருக்கும்.
4. தனிப்பட்ட (Intrapersonal) நுண்ணறிவு:
இவர்கள் வெளிப்பார்வைக்கு அமைதியானவர்களாக தெரிந்தாலும் ஆழமாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சிந்திக்கிறார்கள். தன் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்களுக்கு யாரும் மோட்டிவேட் செய்ய தேவை இல்லை. சுயஉந்துதலால் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். உளவியலாளர்கள், தத்துவஞானிகள், ஆன்மீக வழிகாட்டிகளுக்கு இந்த நுண்ணறிவு அதிகமாக இருக்கும்
5. ஆன்மீக நுண்ணறிவு:
வாழ்க்கையின் அர்த்தம், மரணம் மற்றும் ஆன்மீகம் போன்ற மனித இருப்பு பற்றிய ஆழமான தத்துவார்த்த கேள்விகளில் ஈடுபடும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். தத்துவ ஞானிகள் மற்றும் ஆன்மீக தலைவர்களுக்கு இந்த நுண்ணறிவு அதிகமாக இருக்கும்.
6. பிறரைப் பகுத்தறியும் புத்திசாலித்தனம் (Interpersonal):
மற்றவர்களை புரிந்து கொண்டு திறம்பட தொடர்பு கொள்ளும் சக்தி வாய்ந்தவர்கள். பிறரின் மனநிலைகள், உந்துதல்கள், விருப்பங்களை பகுத்தறிவதில் சிறந்தவர்கள். இது தலைவர்கள், ஆலோசகர்கள் அரசியல்வாதிகள் நடிகர்கள் போன்றவர்களுக்கு இருக்கும்.
7. இயற்கை சார்ந்த நுண்ணறிவு:
பல்வேறு வகையான தாவரங்கள் மரங்கள் மற்றும் இலைகளை எளிதில் அடையாளம் கண்டு அவற்றை பற்றி நிறைய தெரிந்து வைத்திருப்பார்கள். விலங்குகளுடன் நன்றாக பழகுவார்கள். அவற்றின் நடத்தை அல்லது பிரச்சினைகளை பற்றி அவர்களுக்கு அதிகமாக தெரியும். இவர்கள் காடுகளுக்குச் சென்று பறவைகள் மற்றும் பூச்சிகளின் செயல்பாடுகளை கண்டறிந்து புகைப்படம் எடுத்து அவை பற்றிய அதிகமான நுண்ணுறிவு பெற்றிருப்பார்கள்.
8. இசை நுண்ணறிவு:
சிலருக்கு தொழில் முறை பயிற்சி இல்லாவிட்டாலும் இசையில் சிறந்து விளங்கும் திறன் உண்டு. ஒலிகளின் தொனி, சுருதி மற்றும் தாளத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள், இயற்கையாகவே சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் இருக்கும். மியூசிக் டைரக்டர்கள், பாடகர்கள் மற்றும் ஒலி தொடர்பான கலைஞர்கள் இவர்கள்.
9. லாஜிக் மற்றும் கணித நுண்ணறிவு:
இந்தக் கல்வி நுண்ணறிவில் தேர்ச்சி பெற்றவர்கள் சிக்கலான கணக்குகளை எளிதாக போடுவதில் வல்லவராக இருப்பார்கள். மனக்கணக்குகளை விரைவாக போடுவார்கள். திறனறித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். புதிர்களை மிக எளிதாக தீர்ப்பார்கள். வலுவான நினைவாற்றலால் தர்க்கரீதியான பகுத்தறிவு கணக்கீடுகளில் சிறந்தவர்கள். இப்ப சொல்லுங்க, இந்த ஒன்பது விஷயங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் சிறந்தவர் தானே?