

பிறக்கும்போது வலியுடன் பிறந்து, வளரும்போது குறிப்பிட்ட படிப்பைப் படிக்க வேண்டும், குறிப்பிட்ட வேலையைப் பார்க்க வேண்டும், திருமணம், குழந்தைகள் எனச் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் அனைவரும் ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
ஆனால், திடீரென்று ஒரு நாள், "நாம் ஏன் இதையெல்லாம் செய்கிறோம்?" என்ற கேள்வி நமக்குள் எழுந்தால், நாம் செய்யும் எல்லா செயல்களும் அர்த்தமற்றவை என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும். வாழ்க்கையின் மீதான இந்தக் குழப்பமான மனநிலைதான் 'அப்சர்டிசம்' (Absurdism) என்று அழைக்கப்படுகிறது.
ஏன் இந்த மனநிலை உருவாகிறது?
பழங்காலத்தில், கடவுள் நம்பிக்கை ஆழமாக இருந்தது. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாகக் கருதி வாழ்ந்தார்கள். அதனால் அவர்களுக்கு, "வாழ்க்கை அர்த்தமற்றதா?" போன்ற கேள்விகள் எழவில்லை.
ஆனால், அறிவியல் வளர்ச்சியும், நாகரிக மாற்றங்களும் வந்த பிறகு, பலர் கடவுள் நம்பிக்கையையும், அதன் பெயரால் சொல்லப்பட்ட வாழ்க்கை முறைகளையும் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். இப்போதுள்ள உலகில், நல்லது கெட்டது என்பதைத் தீர்மானிக்க மேலிருந்து யாரும் வரப்போவதில்லை; நமக்குத் தோன்றியதைச் செய்வதே சரி என்ற மனநிலை பலருக்கு வந்துவிட்டது.
கடவுள் இல்லை என்றால், நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் ஏன் வாழ்கிறோம்? நாம் செய்வதன் அர்த்தம் என்ன? போன்ற கேள்விகள் எழும்போது, நாம் ஒரு அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வதாக உணர்ந்து, 'அப்சர்டான' மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வது எப்படி?
வாழ்க்கை அர்த்தமற்றது என்ற உண்மையை உணர்ந்த பின், சோகமாக இருப்பதோ அல்லது வாழ்க்கையை முடித்துக்கொள்வதோ தீர்வல்ல என்று பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் கேமூ (Albert Camus) கூறுகிறார். அவர், வாழ்க்கை அர்த்தமற்றது என்பதை முதலில் நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.
இதை விளக்க அவர் 'சிசிபஸ்' (Sisyphus) என்ற கிரேக்கக் கதையைக் கூறுகிறார். சிசிபஸ் என்ற அரசனுக்கு, ஒரு பெரிய பாறையை ஒரு மலையின் உச்சிக்குத் தள்ளிச் செல்ல வேண்டும் என்று கடவுள்களால் தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால், அவன் அந்தப் பாறையை உச்சிக்குக் கொண்டு சென்றவுடன், அது மீண்டும் கீழே உருண்டு வந்துவிடும். அவன் மீண்டும் அதைத் தள்ள வேண்டும். இது முடிவே இல்லாத, அர்த்தமற்ற ஒரு தண்டனை.
ஆல்பர்ட் கேமூ, சிசிபஸின் இந்த நிலையையும் மனித வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். நாமும் படிப்பு, வேலை, சம்பாத்தியம் எனப் பல விஷயங்களைச் செய்து, வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். ஆனால், முடிவில் எல்லாமே அர்த்தமற்றதாக மாறுகிறது.
சிசிபஸுக்குத் தெரியும், அந்தப் பாறை மீண்டும் கீழே விழும் என்று; அது ஒரு அர்த்தமற்ற செயல் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற உண்மையை அவன் ஏற்றுக்கொள்கிறான். அந்தப் பொய்யான நம்பிக்கையை நம்பி, அவன் ஒவ்வொரு முறையும் அந்தப் பாறையைச் சந்தோஷமாக மேலே தள்ள முயற்சி செய்கிறான்.
இதேபோல, நமது வாழ்க்கையும் அர்த்தமற்றது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால், சமுதாயம் சொல்லும் அர்த்தங்களைத் தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை.