இருப்பதைக்கொண்டு வாழும் கலையும் மகிழ்ச்சி ரகசியமும்... நிஜ மகிழ்ச்சி எங்கிருக்கிறது?

இல்லாதவற்றைச் சுமப்பதை விட இருப்பவற்றைக் கொண்டாடுவதே உண்மையான செல்வம்—முத்துவின் கதை சொல்வது இதுதான்.
நிஜ மகிழ்ச்சி - inner happiness
நிஜ மகிழ்ச்சி - inner happinessImage credit: Gemini
மும்பை மீனலதா

ஆர்.மீனலதா பன்முகத் திறமை கொண்ட படைப்பாளி. மும்பையைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர். விளையாட்டு, இசை, ஆகியவைகளில் ஆர்வமுடையவர். நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர் மற்றும் இயக்குநர், பல போட்டிகளுக்கு நடுவர்.கல்கி குழுமத்துடன் 25 ஆண்டுகள் தொடர்பு. கல்கி குழும இணைய தளத்துக்கு பல்வேறு தலைப்புக்களில், கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறார்.

Updated on: 

பெரும்பாலும் நம்முடைய மகிழ்ச்சியை, நமது உடைமைகள், பதவிகள், சாதனைகள் போன்ற விரும்பும் விஷயங்களைக் கொண்டே நாம் அளவிடுகிறோம். நம் வாழ்வில் இல்லாதவற்றைப் பற்றி குறை கூறுகிறோம். ஆனால் நம்மிடம் ஏற்கனவே உள்ளவற்றைப் பாராட்ட மறந்துவிடுகிறோம். எதற்கெடுத்தாலும் முணுமுணுப்பு. குற்றம் -குறை காண்பது இத்யாதி..!இத்யாதி..!

சிறுவன் ஒருவனிடமிருந்து நாங்கள் தெரிந்துகொண்ட விஷயம் அற்புதமான ஒன்று. அதன் விபரம் என்னவென்று நீங்களும்தான் தெரிந்துகொள்ளுங்களேன்.

என்னுடைய சிநேகிதியும் நானும் அலுவலகம் முடிந்தபின் கதை பேசிக்கொண்டே தினமும் மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்புவது வழக்கம். இடையில் இருக்கும் சிறிய மைதானம் ஒன்று குறுக்குப் பாதையாக அமைந்திருந்த காரணம் பெரும்பாலும் அவ்வழியே வருவோம்.

நாங்கள் வருகின்ற வழியில், கட்டுமானத்தளம் ஒன்று ஆரம்பமாக, அநேக தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கே தொழிலாளர்களின் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை நாங்கள் பார்த்துக்கொண்டே வருவோம். சில நாட்கள் அவர்களுக்கு பிஸ்கட், கடலை போன்றவைகளை வாங்கி வந்து கொடுப்பதுண்டு. 

அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகள், கண்ணாமூச்சி மற்றும் ஒரு ரெயில் வண்டியை உருவாக்குவதுதான். ஒரு பையன் என்ஜினாக இருக்க, மற்ற பசங்கள் முன்னால் செல்லும் பையனின் பின்புறத்து சட்டையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறு கையை வாயில் வைத்து ஜுக்-ஜுக் ..ஊ!....ஊ...! என சத்தமிட்டவாறே பெட்டிகளைப் போல பின் தொடர்வார்கள். என்ஜின் ஆக இருக்கும் பையன் புஸ் - புஸ் என்று கூறுவான். மற்ற பசங்களும், என்ஜினாக இருக்க விரும்புவதால், அவர்களுக்குள் சிறு சண்டை நடக்கும். பிறகு முறை வைத்துக்கொண்டு இன்று இவன், நாளை அவன் என்று விளையாடுவார்கள்.

நிஜ மகிழ்ச்சி - inner happiness
நிஜ மகிழ்ச்சி - inner happinessImage credit: Gemini

ஒரு சிறுவன் மட்டும் எல்லோருக்கும் பின்னால், கடைசியில் பச்சைத் துணியை அசைத்தபடி கார்டு மாதிரி செல்வான். என்ஜினாக முதலில் நிற்கவேண்டும் என்று கேட்டதில்லை. மற்றவர்கள் கூறினாலும், கடைசியில்தான் நிற்பான். ஆனாலும் மகிழ்வுடன் பச்சைத்துணியை ஆட்டியவாறு செல்வான்.

இதையும் படியுங்கள்:
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய 3 கேள்விகள்?
நிஜ மகிழ்ச்சி - inner happiness

முதலில் இதை நாங்கள் கவனிக்கவில்லை. நாட்கள் செல்ல-செல்ல கவனித்தோம்.

எதனால் அந்தப் பையன் மட்டும் என்ஜினாக முதலில் நிற்கவில்லை என்ற விபரம் புரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன், ஒரு நாள் நாங்கள் அவனை அணுகி, பெயரைக் கேட்டோம். முத்து என்று சொன்னான். உனக்கு எப்போதாவது என்ஜினாக மாறி முதலில் நிற்க வேண்டும் என்று தோன்றவில்லையா?” என்று எனது சிநேகிதி கேட்டவுடன்,

 “இல்லை” என்று பதிலளித்தான்.

  “ஏன் இல்லை?” ஆச்சரியத்துடன் நான் கேட்டேன். அதற்கு முத்து

 மிகுந்த அப்பாவித்தனத்துடன், 

“நான் என்ஜினாக மாறினால், மற்ற சிறுவர்கள் என் சட்டையைப் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நான் அணிந்திருக்கும் இந்த ஒரே சட்டை மிகவும் பழசு. பின்னால் கிழிசல். அவர்கள் பிடித்தால் கிழிந்துவிடும். எனது அம்மா பாவம். இரண்டு வேளை கஞ்சி கிடைப்பது சந்தோஷம்.  இந்த பச்சைத் துணியை அசைப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று மகிழ்வுடன் கூறினான்.

எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது. பேச வார்த்தை வரவில்லை.

வழக்கம்போல ஜுக்-ஜுக் ரெயில் மெதுவாக நகர்ந்து செல்ல, அந்தச் சிறுவன் கடைசியில் நின்றுகொண்டு, பச்சைத் துணியை மகிழ்ச்சியுடன் அசைத்தபடி, அமைதியாக விளையாட்டுக்குத் திரும்பினான்.

முத்துவின் எளிய வார்த்தைகள் எங்கள் மனதை ஆழமாகத்தொட்டன. அவனிடம் நல்ல சட்டை இல்லாதபோதும், தன்னிடம் இல்லாததைப் பற்றி குறை கூறவில்லை. தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டு வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவிக்க அவன் ஒரு வழியைக் கண்டறிந்திருந்தான். கார்டு மாதிரி பின்னால் இருப்பதற்கு சந்தோஷப்பட்டான்.

சிறுவன் முத்து எங்களுக்கு கற்றுக்கொடுத்தது என்னவென்றால், நிஜ மகிழ்ச்சி என்பது எப்போதும் அதிகமாக வைத்திருப்பதிலிருந்து வருவதில்லை; அது பெரும்பாலும் நம்மிடம் உள்ளவைகளை, மகிழ்ச்சியுடன் பயன்படுத்துவதிலிருந்து வருகிறது என்பதாகும்.

இதையும் படியுங்கள்:
நாம் உண்மையில் வாழ்கிறோமா? வாழ்க்கையைத் தொலைக்கும் அவசர உலகம்!
நிஜ மகிழ்ச்சி - inner happiness