

அறுசுவைகளையும் உள்ளடக்கிய விருந்து போலத்தான் நம் வாழ்க்கையும். இன்பம் துன்பம், வெற்றி தோல்வி, குறை நிறை என எல்லாம் கலந்த வாழ்வில், சறுக்கல்களையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும், குறைகளையும் மட்டுமே எப்போதும் மனதில் அடுக்கி வைத்து, புலம்பி வருந்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காலப்போக்கில் தோல்விகளை, காயங்களை மறந்து சிறப்பாக வாழ்பவர்களும் உண்டு. சறுக்கல்களில் இருந்து பாடங்களைக் கற்று, தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கி உழைப்பவர்களும் உண்டு.
இன்னும் ஒரு சிலர், தங்கள் குறைகளை, இயலாமைகளை, தோல்விகளை மட்டுமே எப்போதும் முன்னிலைப்படுத்தி, புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்களால் இனிமையான தருணங்களைப் பட்டியலிட முடியாது. கிடைக்கும் சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடத் தெரியாது. நிறைய பொக்கிஷமான தருணங்களை, நினைவுகளை இவர்கள் மனதில் முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.
சரி, அதனால் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது? அவர்கள் இயல்பு அது, அப்படி இருப்பதில் என்ன தவறு என்பன போன்ற கேள்விகள் உங்களுக்குள் இருக்கிறதா? குறைகளை மட்டுமே எப்போதும் மனதில் அசைபோட்டால் என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மனநிறைவே இல்லாத வாழ்க்கை:
தங்கள் தோல்விகளையும் குறைகளையும் மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்களால், அடுத்த கட்டத்தை நோக்கி நகரவே முடியாது. கிடைக்கும் சின்னச் சின்ன வெற்றிகள், மகிழ்ச்சிகளைக்கூட நிறைவாக நினைக்கமாட்டார்கள். எப்போதும் தோல்விகளையும் குறைகளையும் மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பதால், அவர்களுக்கு வாழ்வில் மன நிறைவு என்பதே இருக்காது.
எப்போதும் கடந்த காலத்தில் ஏற்பட்ட குறைகளையோ, இழப்புகளையோ, தோல்விகளையோ பெரிதுபடுத்தி பேசிக்கொண்டே இருப்பதால், நிகழ்காலத்தில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களையும், சாதனைகளையும்கூட கொண்டாடத் தவறுவார்கள். இதனால், மகிழ்ச்சியான தருணங்களே தங்கள் வாழ்வில் இல்லை என்ற கற்பனை கவலையிலேயே இருப்பார்கள்.
ஒதுங்கும் உறவுகள்:
இப்படி இருப்பவர்களுக்கு இன்னொரு சிக்கலும் உள்ளது. தங்களைச் சுற்றி இருக்கும் உறவுகள் மற்றும் நட்புகளிடமும் குறைகளை மட்டுமே பார்க்கும் பழக்கம் வந்துவிடும். யாரிடமும் நல்லதைப் பார்க்கமாட்டார்கள். பிறர் சொல்வதில் உள்ள சின்ன நல்ல விஷயத்தைக்கூட உள்வாங்கிக் கொள்ள மறுப்பார்கள். நெருக்கமான உறவுகளிடம்கூட எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
இது வீட்டிலிருந்தே ஆரம்பமாகும். வாழ்க்கைத் துணையிடமும் குழந்தைகளிடமும் தினமும் சின்னச் சின்ன விஷயங்களில்கூட குறைகளை மட்டுமே எப்போதும் சொல்வார்கள். எத்தனை சிறப்பாக ஒரு வேலையைச் செய்தாலும்கூட, ஒரு வார்த்தை கூட பாராட்ட மனம் வராது.
இப்படி ஏன் பண்ணினே?
இன்னும் கொஞ்சம் நல்லா வாங்கியிருக்கலாம்
நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை
இப்படி, அதிருப்தியான பதில்தான் எப்போதும் வரும். வாழ்க்கைத் துணைக்கு, அது கணவனோ மனைவியோ, காலப்போக்கில் இது பழகிவிடும். கண்டு கொள்ளாமல் கடந்து செல்லப் பழகிவிடுவார்கள் ஒரு சிலர். குழந்தைகள் பதின்பருவத்தைக் கடந்ததும் எதிர்த்துப் பேசிப் பார்ப்பார்கள் அல்லது ஒதுங்க ஆரம்பித்துவிடுவார்கள்.
நட்புகள்:
குறைகளைப் பட்டியலிடும் நட்புகளிடம், அவற்றிற்கு விளக்கம் கொடுத்து நட்பைத் தொடர அத்தனை சுலபத்தில் யாரும் விரும்பமாட்டார்கள். நட்புகள், அக்கம்பக்கம் பழகுபவர்கள் என அவர்களும் சற்று எட்டியே இருப்பார்கள். நெருக்கமான நட்பு என்பது இல்லாமல், வெறுமையான உணர்வைத் தரும். ஆனால் அதற்கு தங்கள் குணம்தான் காரணம் என்பதையும் அவர்களால் கண்டறிய இயலாது. அதற்கும் மற்றவர்களைத்தான் குறை சொல்வார்கள்.
குறைகளே இல்லாமல் இவ்வுலகில் யாரும் இருக்கமுடியாது. குறை நிறைகளோடு ஒருவரை அப்படியே ஏற்றுக் கொண்டால்தான் உறவுகளைப் பேணமுடியும். அது கணவன் மனைவி உறவாக இருந்தாலும்கூட குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால், அங்கே அன்பு ஆழமாக வேர்விட்டுப் படராது. வெறுப்புதான் அதிகமாகும். அதேபோல், குறைகளைத் திருத்திக்கொள்ள அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தாலும் மனவருத்தம் தான் மிஞ்சும்.
ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதத்தில் கண்டிப்பாக வேறுபாடுகள் இருக்கும். நாம் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களின் பதில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. குறைகளை மட்டுமே பார்ப்பவர்கள், அடுத்தவர்கள் பேசும் ஒவ்வொரு வாக்கியத்திலும் தேடித்தேடி குறைகளைக் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் பேசிய பத்து வாக்கியங்களில் சில நல்லதும் இருக்கலாம். ஆனால், குறைகாணும் மனது, தங்கள் மனதுக்கு ஒப்பாத ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளும். அதையே எப்போதும் வேறு வேறு அர்த்தங்களில் பொருத்திப் பார்த்து குமுறும். நிம்மதியைத் தொலைக்கும்.
குறைகளை மட்டுமே எப்போதும் அடுக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இதுபோல் சிக்கல்கள் நிறைய வரும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது இவர்களுக்குக் கடினமாக இருக்கும். தங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளான பெற்றோர், கணவன், மனைவி போன்றவர்களிடம் உள்ள நான்கு நல்ல குணங்களை அல்லது விஷயங்களைச் சொல்லச்சொன்னால் கூட இவர்களால் சொல்லமுடியாது. இதுவே இவர்களின் மிகப்பெரிய பலவீனம்.
என்ன, இப்படி குறைகளை மட்டுமே எப்போதும் சிந்திப்பவர்களின் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்களா? முதலில் மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள். உங்களை நேசியுங்கள். உங்களிடம் உள்ள நல்ல பண்புகளை, உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை, நட்புகளை, உறவுகளை மனதில் நிறைத்துக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டு உலகை நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கை அழகாகும். மகிழ்ச்சி தேடி வரும்.