"ஒவ்வொரு மனிதருக்குள்ளும், பிறப்பிலிருந்து இறப்பு வரை நம்முடன் பயணிக்கும் இரத்தம் போல், ஆயிரக்கணக்கான ஆசைகள் பாய்ந்தோடுகின்றன. அளவிடற்கரிய ஆசைகளாலும், திரும்பத் திரும்பத் தொடரும் ஆசைகளாலும்தான் நாமெல்லாம் பொருள் தேடிக் கொண்டிருக்கிறோம். உழைத்துக் கொண்டிருக்கிறோம். நெற்கதிர்கள் அறுவடை முடிந்தபின் வயல்களில் சிறிது காலம் தரிசாக இருக்கும். அவை மீண்டும் விவசாயிகளால் விளைநிலங்களாக மாற்றப்படுகின்றன. அது போன்று தான் ஒரு ஆசை நிறைவேறியதும் மற்றொரு ஆசை வெட்ட வெட்ட வளரும் வாழை போல் உள்ளத்தில் துளிர்க்கின்றன.
வயதானவர்கள் அவருக்குக் கீழ் உள்ள, சம வயது, ஓரிரு வயது குறைவானவரிடம் உரையாடும் போது "நாம் பார்க்காததா? நாம் அனுபவிக்காததா? இன்னும் என்ன உள்ளது? எதற்காக ஏங்குகின்றாய்" என ஞானி போல் பேசுகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் பெரும்பாலானோர், எண்ணியதை ஈடேற்றிக் கொள்ளும் வசதி உடையோர், அவர்களது ஆசைகளை நிறைவேற்றியவர்களாக உள்ளனர். இருந்தும் அந்த ஆசையானது திரும்பத் திரும்ப தினசரி உதித்து மறையும் சூரியனைப் போல் தோன்றிக் கொண்டேயிருக்கிறதே!
ஆசைகளை அறுத்தவர் என்று ஒருவரும் இந்த உலகில் இல்லை. ஆசைகளின் வடிவங்கள் மாறியிருக்கலாம். நபருக்கு நபர் மாறுபட்டிருக்கலாம். ஆனால் ஆசையை அறவே விட இயலாது.
ஒவ்வொரு மதமும், நடைமுறையில், ஒரு தருணத்தில், ஒன்றிரண்டு ஆசைகளை துறந்து விட வற்புறுத்துகின்றன. சில காலங்களுக்காவது ஆசைகளை தள்ளிப் போட அறிவுறுத்துகின்றன; அதற்கான மதச் சடங்குகளை, ஒவ்வொரு வகையில், ஒவ்வொரு மதமும் கடைபிடிக்க வைக்கின்றன.
எந்தவொரு ஆசையும் இல்லாத மனிதனை சந்திக்க வேண்டும் என்றால், ஒன்று சலனமற்று கோமா நிலையில் இருக்க வேண்டும் அல்லது முழு பைத்தியமாகவும் மூளை செயல் இழந்தவனாகவும் இருக்க வேண்டும். பலரும் தங்களது அடக்க முடியாத ஆசைகளினால் தான் பைத்தியங்களாகவே மாறியிருப்பதை மனநலக் காப்பகத்தில் சென்று பார்த்தல் நாம் அறியக் கூடும்.
சில அறிஞர் பெருமக்கள், 'நியாயமான ஆசைகளை அடக்க முயலாதீர்கள்; அவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்' என அறிவுரை சொல்கிறார்கள். ஆசைகளின் அடையாளங்களே, விளைவுகள் புதிய புதிய கண்டுபிடிப்புகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆசைகளை நாம் கைக்கொள்ள வேண்டும். அவைகள் நியாயமானவைகளாக நேர் வழியை அடைபவைகளாக அமைத்தல் வேண்டும். ஓர் இடத்தை அடைவதற்கு பல வழிகள் இருக்கலாம், பயணங்கள் மாறலாம். நேர்வழிப் பயணம் எப்போதும் நிம்மதியைத் தரும். 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?' என்பது ஓர் பழமொழி. முயற்சி இல்லாதவருக்கும் முடங்கி இருப்பவருக்குமான பழமொழி அது.
மண், பெண், பொன், பொருள், பக்தி, பதவி, அதிகாரம் என ஆசைகள் பரந்து விரிந்து செல்கின்றன. அதை நோக்கி ஓடுகிறோம் தேடுகிறோம். ஒன்று கிடைத்து விட்டால் அத்துடன் அடங்கி விடுவது இல்லை மனம். ஒன்றை அடைந்துவிட்டால் மற்றொன்றை அடைய மனம் பறக்கிறது.
திரும்பத் திரும்பத் தோன்றும் ஆசைகளால்தான் உலகப் பொருளாதாரமே இயங்குகிறது என்பார் பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித் மற்றும் இன்றைய பொருளாதார நிபுணர்கள். ஆசைகள் அடங்கிவிட்டால் உலகில் ஓசைகளே இருக்காது என்கின்றனர்.
அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் ஒருவர். ஆசைகளிலிருந்து அறுபடு என்கிறார் மற்றொருவர். எது சரி? ஆசைகளை விட இயலுமா?
நியாயமான ஆசைகளை நேர் வழியில் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்... இதுவே சரி!