
மாற்றி யோசிக்கும் திறன் கொண்டவரா நீங்கள்?
தர்க்கரீதியாக யோசிக்கும் திறமை உங்களிடம் இருக்கிறதா? இதோ சில கேள்விகள். இதற்குச் சரியான பதிலை நீங்கள் அளித்துவிட்டால் நீங்கள் தர்க்கரீதியில் சூப்பராக சிந்தித்து வெற்றி பெறுபவர் என்று சொல்லி விடலாம்.
கேள்வி 1: மூன்று பல்புகளும் மூன்று ஸ்விட்சுகளும்
மாடியில் உள்ள அறையில் மூன்று பல்புகள் உள்ளன. மாடிப்படியின் கீழே மூன்று ஸ்விட்சுகள் உள்ளன. ஒவ்வொரு பல்புக்கும் ஒரு ஸ்விட்ச். நீங்கள் ஸ்விட்சைப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
ஒரே ஒரு முறை நீங்கள் மாடிக்குச் செல்லலாம். எந்த ஸ்விட்ச் எந்த பல்புக்கு என்று எப்படி அறிந்து கொள்வீர்கள்? வழியைச் சொல்லுங்கள் பார்ப்போம்.
கேள்வி 2: பத்தாவது மாடிக்கு போக முடியாதது ஏன்?
பத்தாவது மாடியில் வசிக்கும் ஒருவர் தினமும் காலையில் வேலைக்குப் போகும்போது லிப்டை இயக்கி கீழே க்ரவுண்ட் ஃப்ளோருக்கு வந்து விடுவார். ஆனால் வேலை முடிந்து மாலையில் மேலே போகும் போதோ அவர் ஏழாவது மாடி வரைதான் போவார். அங்கிருந்து படி ஏறி பத்தாவது மாடியில் உள்ள தனது ஃப்ளாட்டுக்குப் போவார். மற்றவர்கள் இருந்தாலோ அல்லது மழை பெய்யும் நாட்களிலோ அவர் நேராக பத்தாவது மாடிக்குப் போவார். இது ஏன்? விளக்க முடியுமா?
கேள்வி 3 : இரட்டையரில் ஒருவரா இல்லையா?
ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பேரைப் பார்த்தபோது ஒருவர் அவர்களை நோக்கி, “நீங்கள் இரண்டு பேரும் இரட்டைப் பிறவிகளா?” என்று கேட்டார்.
அவர்கள் "இல்லை" என்றனர்.
"சரி உங்கள் பிறந்த தேதி என்ன?" என்று கேட்டார் அவர்.
இருவரும் ஒரே தேதியைச் சொன்னார்கள்.
"நேரம்?" என்று கேட்டார். அதே நேரம்தான்!
"உங்கள் இருவருக்கும் ஒரே அம்மாதானே?" என்று கேட்டார் அவர்.
"ஆமாம்" என்றனர் அவர்கள்.
குழம்பிப் போனார் கேள்வி கேட்டவர்.
பதில் என்ன சார், சொல்லுங்களேன்.
*****************************************
விடை 1:
ஒரே ஒரு பல்பின் ஸ்விட்சை முதலில் போடுங்கள். சில நிமிடங்கள் காத்திருங்கள். பின்னர் அதை அணைத்து விட்டு அடுத்த ஸ்விட்சைப் போடுங்கள்.
இப்போது மாடிக்குச் செல்லுங்கள். எரிந்து கொண்டிருக்கும் பல்புக்கான ஸ்விட்ச் எது என்று இப்போது தெளிவாக உங்களுக்குத் தெரியும்.
அடுத்த இரண்டு பல்புகளின் மீது கையை வைத்துப் பாருங்கள். எது சூடாக இருக்கிறதோ அதுதான் நீங்கள் முதலில் போட்ட ஸ்விட்சினால் எரிந்து கொண்டிருந்த பல்பாகும். மீதி இருப்பது மூன்றாவது பல்பும் அதற்கான ஸ்விட்சும்தான்!
என்ன சுலபம்தானே!
விடை 2 :
அவர் மிக மிகக் குள்ளமானவர். அவர் கை 7 என்ற லிப்டின் எண் வரைதான் தொடமுடியும். ஆகவே தனியாகத் தான் வரும்போது ஏழாம் மாடி வரை அவர் போவார். மற்றவர்கள் இருந்தால் அவர்கள் 10 என்ற எண்ணை அவருக்காக இயக்கி விடுவார்கள். மழை பெய்யும் நாட்களில் தன் குடையை வைத்து பத்து என்ற எண்ணை அமுக்கி விடுவார்.
விடை 3 :
நாங்கள் இரட்டைப் பிறவிகள் இல்லை. நாங்கள் மூன்று பேர் ஒரே நாளில் ஒரே சமயத்தில் எங்கள் அம்மாவுக்குப் பிறந்தோம் என்றார்கள் அவர்கள். இரட்டைப்பிறவி இல்லை என்று அவர்கள் கூறியது உண்மைதானே!
சற்று ஆழ்ந்து மாற்றி யோசித்தால் விடைதானே வரும், இல்லையா!