

நம்முடைய தேவைகள் என்னவென்று நமக்குத் தெரியாத வரை, உலகிலேயே மிகச் சிறந்த வாய்ப்போ அல்லது பொருளோ நம்மைத் தேடி வந்தாலும் அதனால் நமக்கு எந்தப் பயனும் இருக்காது. பசியில்லாத ஒருவருக்கு நீங்கள் தரும் அறுசுவை உணவும், தாகம் இல்லாதவருக்குத்தரும் அமிர்தமும் எப்படி வீணோ அப்படித்தான் தெளிவான இலக்கு இல்லாதபோது கிடைக்கும் நல்ல வாய்ப்புகளும். நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவு இல்லை என்றால் எவ்வளவு பெரிய வரங்கள் கிடைத்தாலும் அதை எங்கு, எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிப்போம்.
வெளி உலகில் இருந்து எவ்வளவு நன்மைகள் வந்தாலும் நம் மனதிற்கு என்ன தேவை என்பதை நாம் உணராதவரை நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வெளியில் இருந்து வரும் "வரங்களை" விட நமக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய சுய அறிவுதான் எல்லாவற்றையும்விட மிகப்பெரிய வரம்.
நமக்கு வாழ்க்கையில் உண்மையில் என்ன வேண்டும், எது மகிழ்ச்சியைத்தரும் என்று நாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நம் தேவைகளை நாம் உணராதவரை நமக்கான சரியான பாதையை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
இதனை ஒரு எளிய உதாரணத்துடன் பார்ப்போமா. ஒரு மனிதன் தாகத்தால் தவித்துக் கொண்டு கொளுத்தும் வெயிலில் ஒரு பெரிய பாலைவனத்தைக் கடக்க முயன்று கொண்டிருந்தான்.
அவன் தொண்டை வறண்டு உயிருக்கே ஆபத்தான நிலையில் தண்ணிக்காக தேடி அலைந்து கொண்டிருந்தான். அப்போது அவன் மீது பரிதாபப்பட்டு அவன் முன்னால் ஒரு தேவதைத் தோன்றி அவனுக்கு ஒரு வரம் கொடுக்க முன் வருகிறாள். ஆனால் அந்த மனிதனுக்கு தன் தற்போதைய அவசரத்தேவை தண்ணீர் என்பது கூட சரியாகத் தெரியவில்லை அல்லது புரியவில்லை.
தேவதையைக் கண்டதும் பேராசையாலோ அல்லது அறியாமையாலோ தேவதையிடம் தனக்கு அளப்பரிய பொன் பொருள் வேண்டும் என்று வரமாகக் கேட்கிறான். தேவதையும் அவன் வேண்டிய தங்கத்தைக் கொடுத்துவிட்டு மறைந்து விடுகிறது. இப்போது அவனிடம் கைநிறைய தங்கம் இருக்கிறது.
ஆனால் அந்தப் பாலைவனத்தில் அவனால் அந்த தங்கத்தைச் சாப்பிடவோ, அதைக் கொண்டு தன்னுடைய தாகத்தை தீர்த்துக் கொள்ளவோ முடியாது. தண்ணீரின் தேவை தெரியாமல் அவன் பெற்ற அந்தத் தங்க வரம் அவனது உயிரைக் காப்பாற்ற உதவாது. இறுதியில் கையில் தங்க கட்டிகளுடன் அவன் தாகத்தால் இறக்க நேரிடலாம்.
அந்தப் பயணிக்கு தங்கம் ஒரு 'வரம்' தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவனது தற்போதைய அவசியத்தேவை தண்ணீர்தான். தன் தேவை என்னவென்று அவனுக்குத் தெரியாததால் தேவதை கொடுத்த வரமும் அவனுக்குப் பயனற்றதாக, தேவையற்றதாக மாறிப்போனது.
ஒரு பொருளின் அல்லது உறவின் மதிப்பு அது நமக்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. தேவையில்லாதபோது தேவதை கூட வெறும் சுமையாகவேத் தோன்றும். வரங்களைவிட அந்த வரங்களைப் பயன்படுத்தும் தகுதியும் தெளிவும்தான் நம்மை வாழ வைக்கும். தேவையைப் பற்றிய புரிதலோ தெளிவான இலக்கோ இல்லாத போது நமக்கு கிடைக்கும் மிகச்சிறந்த வரங்கள் கூட வீணாகிவிடும். எனவே வாழ்க்கையில் தெளிவும் சுயபுரிதலும் மிகவும் முக்கியம்.
நம் வாழ்க்கையில் நமக்கு என்ன இலக்கு வேண்டும், நம் தற்போதைய அவசியத் தேவை என்ன என்று நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் நம்மைத்தேடி வரும் நல்ல வேலைகளோ, வாய்ப்புகளோ அல்லது உறவுகளோக் கூட நமக்குச் சுமையாகவும் அல்லது வீணாகவும்தான் தோன்றும்.
எனவே வெளிப்புறத்தில் தேடல்களைத் தொடங்குவதற்கு முன்பு நமக்கு உண்மையில் என்ன தேவை, எது நம் மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும் என்பதை நாம் முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மைத்தேடி வரும் நல்வாய்ப்புகளை (தேவதைகளை) நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
வாழ்க்கையில் வெளிப்புறத் தேடல்களைத் தாண்டி, நமக்கு என்ன தேவை என்ற சுய புரிதலே மிகப்பெரிய வரம் என்பதை உணர்ந்து தெளிவான பாதையை அமைத்துக் கொள்வது.