

ஒருவரிடம் நமக்கு ஏதேனும் தேவை இருக்கும் வரை அல்லது நாம் அவர்களுக்குப் பயனுள்ளவர்களாக இருக்கும் வரை அவர்கள் நம்முடைய பெரிய தவறுகளைக் கூடப் பொருட்படுத்தாமல் மன்னிக்கவோ அல்லது சகித்துக்கொள்ளவோ செய்வார்கள். நம் தேவை முடிவுக்கு வரும்பொழுது அல்லது வேறு ஒரு சிறந்த வழி கிடைக்கும் போது அதே தவறுகள் பெரிதுபடுத்தப்பட்டு பெரிய குற்றமாக பார்க்கப்படும்.
மனிதர்களின் அன்பு பல நேரங்களில் நிபந்தனைகளுடனும், தேவைகளுடனும் மட்டுமே பிணைக்கப்பட்டு இருக்கிறது என்பது வருத்தம் தரக்கூடிய செய்தி தான். இது நிபந்தனையற்ற அன்புக்கு எதிரானது. எப்பொழுதுமே உண்மையான பாசமும் மரியாதையும் தேவைக்காக இருக்காது.
சமூகவியலில் மனித உறவுகள் பெரும்பாலும் கொடுக்கல், வாங்கல் அடிப்படையிலேயே இயங்குகின்றன. நம்மிடம் இருக்கும் ஒரு விஷயம் அது பணமோ, அதிகாரமோ, உதவியோ அடுத்தவருக்குத் தேவைப்படும் வரை நம் தவறுகளைவிட நம் பயனே அவர்களுக்குப் பெரிதாகத் தெரிகின்றது.
ஒருவருடைய நோக்கம் அல்லது இலக்கை அடைவதற்கு நாம் தேவைப்படும்பொழுது, அவர்கள் தங்கள் கோபத்தை விட தங்களுடைய தேவையை முன்னிறுத்தி வைப்பதால் நம் தவறுகளைத் தற்காலிகமாக பொருட்படுத்தாதது போல நடிக்கிறார்கள்.
தேவை இருப்பவர் எப்போதும் சற்று பணிந்து போக நேரிடும். தன் தேவை முடிந்து தனக்கான பலன் கிடைத்தவுடன் அந்தப் பணிவு மறைந்து போய் நம் மீதான விமர்சனங்களும் குறைகளும் வெளியே வரத் தொடங்கும். இது அவர்களின் தேவைக்கான தற்காலிக சகிப்புத்தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.
அவர்களுக்கு நாம் தேவைப்படும் வரை நம்மை பகைத்துக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அத்துடன் நம் தவறுகளைக் கூட நியாயப்படுத்த விரும்புவார்கள்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களில் யார் உண்மையானவர்கள், யார் தேவைக்காக பழகுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த மனித இயல்பு நமக்கு பெரிதும் உதவும்.
நம்மை தேவைக்காக மட்டும் பயன்படுத்திவிட்டு பிறகு தூக்கி எறியும் மனிதர்களிடமிருந்து சற்று விலகி நம் சுயமரியாதையை காத்துக்கொள்வதே நல்லது. இப்படிப்பட்ட சுயநலமான மனிதர்களைக் கையாள்வது சிறிது கடினம்தான்.
ஆனால் சாத்தியம். இதற்கு நம் மன அமைதிக்காக அவர்களுடன் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு பழகுவது நல்லது. அவர்களின் எல்லா தேவைகளுக்கும் எப்போதும் தலையாட்டிக் கொண்டு இருக்காமல் நம்மால் முடிந்ததை மட்டும் செய்யலாம்.
நம் சக்திக்கு மீறி அவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கும் பொழுது இல்லை என்று சொல்லப் பழகுவதும், அவர்கள் நம்மிடம் அன்பாக இருப்பதற்குப் பின்னால் அவர்களுக்கு ஒரு தேவை இருக்கிறது என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து உண்மையான பாசத்தையோ அல்லது நன்றி உணர்வையோ எதிர்பார்க்காமல் இருப்பது நம்மை ஏமாற்றம் அடையாமல் இருக்கச் செய்யும்.
நம்முடைய உதவி கிடைக்காத பட்சத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் நம்மை விமர்சனம் செய்யத் தயங்க மாட்டார்கள். அவர்கள் நம் மீது வைக்கும் விமர்சனங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கப் பழகுவதுடன், அவர்களின் கோபத்திற்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினை ஆற்றுவதையும் தவிர்த்து அமைதியாக விலகிச்சென்று விடுவதும் நல்லது.
அவர்கள் நம்மிடம் தவறு கண்டுபிடிக்கும்போது நம் பக்கத்து நியாயத்தை எடுத்துக் கூறுவதோ வாதாடுவதோ தேவையற்றது. பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவதே சிறப்பு.
மனித உறவுகளில் இருக்கும் இந்த "தேவை சார்ந்த" போலித்தனத்தை, போலி உறவுகள் இருப்பதை உணர்ந்துகொண்டு, யாரையும் அளவுக்கு அதிகமாகச் சார்ந்திராமல் நம் சுயமதிப்பைப் பேணிக்கொள்வதே இதற்கு சிறந்த தீர்வாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே நம் நேரத்தை வீணடிக்காமல் நம் வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கும் முக்கியத்துவம் தரப் பார்க்கலாம். நம்மை நம் குணத்திற்காக மட்டுமே நேசிக்கும் நல்ல மனிதர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளலாம்.
உறவுகளில் உள்ள நிபந்தனை சார்ந்த சுயநலத்தை அடையாளம் கண்டு, தேவையற்ற மன உளைச்சலிலிருந்து விடுபடும் தெளிவைப் பெறுவீர்கள்.