தீக்குச்சித் தத்துவம் தெரியுமா மக்களே? ஒரே ஒரு வார்த்தை... அதோகதிதான்!

ஒரேயொரு மரத்தில் ஆயிரமாயிரம் தீக்குச்சிகளை உருவாக்க முடியும்; அதேசமயம், ஒரேயொரு தீக்குச்சி ஒரு காட்டையே அழித்துவிடும்.
forest and matchstick
matchstick theory
Updated on

பூப்போல் மனம் இருந்தால், அதனுள் இதமான வார்த்தைகள் பிறக்கும்; அன்பான நல்ல எண்ணங்கள் அருவி போல் கொட்டும்; தெளிவான புதிய சிந்தனைகள் உதிக்கும். அமைதியான மனப்பக்குவம் என்னும் பொறுமைக்குப் பெருமை சேர்க்கும் என்பதை நாம் உணர்ந்து, எப்போதும் மனதை மடல் விரிந்த மலரைப் போன்று வைத்திருப்பது நல்லது.

நாம் பேசிய ஆயிரம் வார்த்தைகளை அன்பில் விதைத்து, பண்பில் சிறந்து நம்மைப் பெருமைப்படுத்தினாலும், கோபத்தில் நம்மையும் மீறி வரும் ஒரே ஒரு வார்த்தை நம் சொந்தங்களின் உறவுகளை முறித்துவிடும். புயலாய் வீசும் கோபக் கணைகளைத் தவிர்த்து, பண்பட்ட நம் மனதில் மற்றவர்கள் புண்படும்படியான வார்த்தைகளைத் தவிர்ப்போம்.

ஒரேயொரு மரத்தில் ஆயிரமாயிரம் தீக்குச்சிகளை(matchstick theory) உருவாக்க முடியும்; அதேசமயம், ஒரேயொரு தீக்குச்சி ஒரு காட்டையே அழித்துவிடும். இது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல்தான் நாம் சொல்லும் தகுதியற்ற வார்த்தைகளும் என்பதை அறிந்து நடந்துகொள்ள வேண்டும்.

வார்த்தைகளின் வலிமை:

  • நாம் பேசும் வார்த்தைகள் மென்மையாக இருந்தால், அது இனிமையாக மாறும்.

  • அவையே வன்மையாக இருந்தால், எதிர்வினைத் தாக்குதலை நடத்தி கசப்பாக மாறும்.

எனவே, அதிரப் பேசும் வார்த்தைகளைத் தவிர்த்து, அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேசுவோம். மற்றவர்கள் நம்மோடு விவாதம் செய்தாலும், நம் வார்த்தைகள் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டுமே தவிர, அவர்களின் தன்மானத்தைச் சிதைப்பதாக இருக்கக் கூடாது.

தவிர்க்க வேண்டியவை: அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமுதமும் வைத்துப் பேசுபவர்களிடம் என்றும் சகவாசம் கொள்ள வேண்டாம். ஏனெனில், அவர்களோடு பழகப் பழக அந்தத் தீய எண்ணம் நமக்கும் தொற்றிக்கொள்ளும். அத்தகையோரை நம் வாழ்க்கையிலிருந்து அறவே தவிர்ப்பது உத்தமம்.

நகைச்சுவையும் தன்னம்பிக்கையும்: எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும் குணமிருந்தால் அதை மாற்றிக்கொள்ள முயலுங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நகைச்சுவை உணர்வு அவசியம்; அதுவே நம் கவலைகளைப் போக்கும் அருமருந்து.

இதையும் படியுங்கள்:
மொட்டை மாடியில் பள்ளி அமைத்த காய்கறி வியாபாரி... இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி!
forest and matchstick

யாரிடம் பேசினாலும் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை விதைப்போம். அது கேட்பவர்களுக்குப் பயன்படும் வகையில் மகத்துவம் நிறைந்ததாக இருக்கட்டும். மற்றவர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளை உதிர்த்து, அவர்கள் மனதிலிருந்து நாம் உதிர்ந்து போக வேண்டாம்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு"

என்ற வள்ளுவனின் வாக்கினை உள்வாங்கி, சுடும் சொற்களைத் தவிர்த்து வாழ்வோம்!

logo
Kalki Online
kalkionline.com