
அண்ணல் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி ராம்ஜி சக்பால்- பீமாபாய் ஆகியோரின் மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு பீமாராவ் ராம்ஜி என்று பெயர் சூட்டினர். இவர் சிறுவனாக இருந்தபோது இவருடைய தந்தை கார்கோன் எனும் ஊரில் காசாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அம்பேத்கரும் அவருடைய அண்ணனும், அவருடைய அக்காவின் இரண்டு மகன்களும் விடுமுறைக்காக கார்கோனுக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றார்கள். ரெயில் மாசூர் என்கிற பகுதியை அடைந்ததும் இறங்கி மாட்டுவண்டியில் சென்றார்கள்.
மாட்டுவண்டி ஓட்டுநர் அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று கருதி வண்டியை ஓட்டாமல் வண்டிக்கு பின் நடந்து சென்றார். அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் வண்டியை ஓட்டினார்கள். அவர்கள் செல்லும்போது உணவு வைத்திருந்தார்கள். ஆனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்த ஒருவரிடம், ‘தண்ணீர் தாருங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். ‘நாங்கள் மஹர்’ என்று இருவரும் கூற, தண்ணீர் இல்லை என்றார் அந்த மனிதர்.
இந்த அனுபவங்களை எல்லாம் அம்பேத்கர் ‘விசாவுக்காக காத்திருக்கிறேன்' என்கிற புத்தகத்தில் எழுதி இருக்கிறார். இன்றைக்கு நமக்கு எளிதாக கிடைக்கும் அனைத்திற்கு பின்பும் அம்பேத்கர் போன்ற பல புரட்சியாளர்கள் அனுபவித்த அடக்குமுறைகளும், அதனை ஒழிக்க அவர்கள் எடுத்த முயற்சிகளும் காரணம் என்பதை நாம் மறந்து விட கூடாது.
எல்லா துன்பங்களையும் கடந்து கல்வியை ஆயுதம் ஆக்கி தொடர்ந்து படித்தார் அம்பேத்கர். அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றார். ‘ரூபாயின் சிக்கலும் தீர்வும்' என்கிற அவருடைய ஆய்வு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தான் இந்திய ரிசர்வ் வங்கி அதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா விடுதலை பெற்று நேரு தலைமையிலான அரசு அமைக்கப்பட்டபோது முதல் சட்ட மந்திரியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. தேசமே வியக்கும் விதத்தில் சட்ட வரைவு குழுவின் தலைவராக இருந்து அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதி முடித்தார். அரசியல் அமைப்பு சட்டம் இந்திய நாட்டின் பழமையான போக்கை உடைத்து புதுமையை விதைத்தது. உரிமையற்ற மக்களுக்கு உரிமை கொடுத்தது. தொழிலாளர்களுக்கான 14 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்றியது.
பெண்களுக்கான சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை, விவாகரத்து உரிமை, மறுமணம் செய்வதற்கான உரிமை என எல்லா உரிமைகளையும் அனைவரும் பெற அடிப்படையாக இருந்தவர் அம்பேத்கர்.
அம்பேத்கர் இறக்கும் தருவாயில், ‘‘நான் கஷ்டப்பட்டு இந்த தேரை இழுத்து கொண்டு வந்து இருக்கிறேன். இதை முன் நோக்கி நகர்த்தாவிட்டாலும் பின் கொண்டு சென்று விடாதீர்கள். இருக்கிற இடத்திலேயே நிறுத்தி விடுங்கள்’’ என்று கூறியுள்ளார்.
அம்பேத்கர் சொன்னது போல சமூகம் என்கிற தேரை முன் நகர்த்த முயற்சி எடுப்போம். எழுத படிக்க தெரியும் அளவுக்கு மட்டும் கல்வி கற்காமல் நாம் முழுமை அடையும் வரைக்கும் கற்போம். நாம் கற்ற கல்வியால் பிறருக்கு உதவிகள் செய்வோம். யாரையும் வேறுபடுத்தி பார்க்காமல் அனைவரையும் சமமாக பாவிப்போம். இதுவே அம்பேத்கருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக அமையும்.