அச்சமில்லை... ஆயத்தமாய் இருக்கிறோம்! தனியாக வசிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு கையேடு!

தனியாக வசிக்கும் பெண்கள் ஒருசில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உதவும்.
பெண்கள் பாதுகாப்பு
women safety tips|பெண்கள் பாதுகாப்புAI Image
Updated on

மாறிவரும் நவீனகாலத்தில் படிப்பு, பணி நிமித்தமாகவோ அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ நகர் பகுதிகளில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப இன்றைய நவீன தொழில்நுட்பம் பாதுகாப்பு அரணாக அமைந்திருப்பதால் பலரும் தனிமை சூழலில் வாழ பழகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் பெண்களுக்கு எதிரான சம்பவங்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. தற்போது உள்ள பெண்களில் பலரும் தங்களுக்கு எதிரான நடக்கும் தாக்குதல் சம்பவங்களை எதிர்த்து போராட துணிந்து விட்டனர். ஒரு சிலர் மட்டுமே இன்னும் பயத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனினும் தைரியமான பெண்ணாக இருந்தாலும் ஒருசில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உதவும். அதற்கு வித்திடும் வழிமுறைகள் சில...

தனியாக வசிக்கும் பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட் தொழில்நுட்பம் (Smart Doorbell), பாதுகாப்பு செயலிகள் (Kavalan SOS), பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்பு கருவிகள், மற்றும் அக்கம் பக்கத்தினருடன் நல்லுறவு ஆகியவற்றை முதன்மையாகக் கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு உபகரணங்கள் :

பெண்கள் எப்போதும் உங்கள் கைப்பையில் பெப்பர் ஸ்பிரே (Pepper Spray) அல்லது சிறிய அலாரம் கருவி (Personal Alarm) போன்றவற்றை வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானது. பெப்பர் ஸ்பிரே என்பது ஒரு தற்காப்பு கருவியாகும். இது ஒரு நபரைத் தற்காலிகமாகச் செயல்படவிடாமல் தடுக்கப் பயன்படுகிறது, இதன் மூலம் ஆபத்தான சூழலில் இருப்பவர் தப்பிச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் தற்காப்புக்காக (Self-defense) பெப்பர் ஸ்பிரேவைப் பயன்படுத்துவது பொதுவாகச் சட்டப்பூர்வமானது. இது அமேசான், ஃபிளிப்கார்ட் அல்லது பிளிங்கிட் போன்ற ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.

வீட்டின் பாதுகாப்பு வசதிகள் :

தனியாக வசிக்கும் பெண்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, கதவு மற்றும் ஜன்னல்களை பலப்படுத்துதல், நவீன பாதுகாப்பு கேமராக்களைப் பொருத்துதல், முன்பின் தெரியாதவர்களை அனுமதிக்காமல் இருத்தல் போன்ற அத்தியாவசிய நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால் வீட்டு உரிமையாளர் நிறுவியுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை நம்ப வேண்டாம். கதவுகள் வலுவாக இல்லாவிட்டால் அவற்றை மாற்றிவிடுங்கள். கதவில் ‘லென்ஸ்’ பொருத்துங்கள். அது வீட்டுக்கு யார் வந்திருக்கிறார் என்பதை கதவை திறக்காமலே தெரிந்து கொள்ள உதவும்.

வீட்டின் பூட்டுகள் தரமானதாக இருக்க வேண்டும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால், முந்தைய குடியேறியவர்கள் சாவி வைத்திருக்க வாய்ப்புள்ளதால் பூட்டுகளை மாற்றுவது நல்லது.

அதேபோல் கதவுகளில் 'பீபோல்' (Peephole) அல்லது கதவைத் திறக்காமல் வெளியே யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வைஃபை வீடியோ டோர் பெல் (Video Doorbell) கருவியைப் பயன்படுத்தவும். கதவின் உட்பகுதியில் 'செயின் லாக்' (Chain Lock) அல்லது கூடுதல் போல்ட் பூட்டுகளைப் பயன்படுத்தவும்.

வீட்டின் வெளிப்புற நுழைவாயில்கள் மற்றும் இருட்டான பகுதிகளில் 'மோஷன் சென்சார்' (Motion sensor) விளக்குகளைப் பொருத்தலாம். இதனால் யாராவது அருகில் வந்தால் தானாக வெளிச்சம் வரும்.

இப்போது பாதுகாப்பை பலப்படுத்தும் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் பூட்டுகளை கொண்ட கதவுகள் வந்துவிட்டன.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு எதிரான வன்முறை பாதுகாப்பிற்கு 5 அவசர வழிமுறைகள்!
பெண்கள் பாதுகாப்பு

‘பாஸ்வேர்ட்’ அல்லது ‘பயோமெட்ரிக்’ மூலம் கைரேகை, கருவிழி மூலம் இயங்கும் டிஜிட்டல் சாதனங்களை பொருத்துவது, காலிங் பெல் மற்றும் வீட்டின் முகப்பு பகுதியில் பாதுகாப்பு கேமரா பொருத்துவது என பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டின் பிரதான கதவில் சிசிடிவி கேமரா அல்லது ஸ்மார்ட் டோர்பெல் (Smart Doorbell) பொருத்த வேண்டும். இதனால் யார் கதவைத் தட்டினாலும் உங்கள் மொபைல் மூலமாகவே சரிபார்க்கலாம்.

அறிமுகமில்லாதவர்களிடம் கவனம்:

வேலைக்காரர்கள், பிளம்பர்கள், டெலிவரி செய்பவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே வீட்டிற்குள் அனுமதிக்கவும். வேலை செய்பவர்களின் அடையாள அட்டையைச் சரிபார்த்து, உங்கள் அக்கம் பக்கத்தினர் அல்லது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள் மற்றும் அவர்களிடம் வேலை செய்பவர்களை பற்றி தெரியுமா என கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்ற தகவலையோ, உங்கள் இருப்பிடத்தையோ (Location) யாருடனும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

குறிப்பாக ஆள் நடமாட்டமில்லாத தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக நடப்பதையும், இரவு நேரத்தில் தனியாக பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பயணமாக இருந்தால் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு
pepper spray safety|பெண்கள் பாதுகாப்புAI Image

நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்பதை வெளியில் தெரியப்படுத்தக் கூடாது. டெலிவரி பாய் அல்லது பராமரிப்புப் பணியாளர்கள் (Maintenance Staff) என யாராக இருந்தாலும், கதவைத் திறக்கும் முன் முழுமையாகச் சரிபார்க்கவும்.

தற்காப்பு பயிற்சி பெறுங்கள் :

தனிமையில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பையும், துணிச்சலையும் பெற்றுத்தரும் தற்காப்புக் கலை பயிற்சி மிகவும் அவசியம். அடிப்படை பயிற்சிகளையாவது கற்றுக்கொள்ள தற்காப்பு பயிற்சி வகுப்புகளில் சேருவது நல்லது. இது ஆபத்தான நேரங்களில் துணிச்சலுடன் செயல்படவும், பாதுகாப்பாக வெளியே செல்லவும் உதவுகிறது.

ஆபத்து காலங்களில் அருகில் இருக்கும் சாவிகள் (Keys), பேனா, துப்பட்டா போன்ற சாதாரண பொருட்களைக் கொண்டு கூட உங்களைத் தற்காத்துக் கொள்ளலாம்.

‘பெப்பர் ஸ்பிரே’, ‘ஊக்கு’ உள்ளிட்ட சாதனங்களை எப்போதும் உடன் வைத்திருங்கள். எத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அணுகுங்கள்.

ஆபத்து ஏற்படும் போது கூச்சலிடுவது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும், மேலும் எதிரிகளைத் திணறடிக்கும்.

தவறான எண்ணத்தில் யாராவது உங்களை நெருங்கும் போது அவர்களின் கண்கள், மூக்கு, தொண்டை அல்லது வயிறு ஆகிய மென்மையான பகுதிகளைத் தாக்கி உங்களை விடுவித்துக் கொள்ள ஒரு வழி கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் பாதுகாப்பு திட்டம் தமிழ்நாடு காவல்துறை அசத்தல்!
பெண்கள் பாதுகாப்பு

தொடர்பில் இணைந்திருங்கள் :

நீங்கள் இரவு நேரங்களில் பயணிக்கும்போது அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும்போது, உங்கள் நேரடி இருப்பிடத்தை (Live Location) நம்பகமான குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ பகிரவும். அதேபோல் உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடத்தில் உங்கள் நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி, தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

காவல்துறை (100), பெண்களுக்கான உதவி எண் (1091), மற்றும் மருத்துவ அவசர உதவி (108) எண்களை உங்கள் மொபைலில் விரைவான அழைப்பு (Speed Dial) முறையில் சேமித்து வையுங்கள். அது அவசர தேவையின்போது பதற்றமில்லாமல் அணுகுவதற்கு வழிவகை செய்யும்.

அண்டை வீட்டார்கள் தொந்தரவாக இருப்பார்கள் என்று கருதாமல், அவர்களுடன் சமூகமான வலுவான பந்தத்தையும் ஏற்படுத்திக்கொண்டால், அவசர உதவி தேவைப்படும் சமயங்களில் பக்கபலமாக இருப்பார்கள் என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் தனியாக ட்ரிப் போக பிளானா.. பாதுகாப்பு கவலையின்றி தைரியமாக சுற்றக்கூடிய 5 சூப்பர் இடங்கள் இதோ!
பெண்கள் பாதுகாப்பு

சமூக ஊடகங்களில் கவனமாக இருங்கள் :

தனியாக வசிக்கும் பெண்கள் தங்கள் இருப்பிடத்தை, நேரடி வழக்கங்களை அல்லது தனியாக இருக்கும் தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிரும்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ‘நான் தனியாக இருக்கிறேன் / வீட்டில் போரடிக்கிறது’ போன்ற பதிவுகள் நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக மற்றவர்களுக்கு உணர்த்தும்.

எனவே சமூக ஊடகங்களில் ஆர்வம் காட்டினாலும் நீங்கள் பதிவிடும் பதிவுகள், புகைப்படங்கள் வாயிலாக தனியாக வாழ்கிறீர்கள் என்ற விஷயத்தை குறிப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். மேலும், நீங்கள் தனியாக வசிக்கும் வீட்டின் முகவரி அல்லது அடிக்கடி செல்லும் இடங்களை (உதாரணமாக: அருகில் உள்ள ஜிம், பார்க்) குறிச்சொல்லி (Tagging) பதிவிடுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் புகைப்படங்களை மார்பிங் (Morphing) செய்யவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ அதிக வாய்ப்புள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் பகிரும் புகைப்படங்கள் தெளிவாகவும், பாதுகாப்பான பின்னணியிலும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

காவலன் செயலி (Kavalan SOS):

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செயலியான 'காவலன்-SOS' ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆபத்தான காலங்களில் இதில் உள்ள 'SOS' பொத்தானை அழுத்தினால், உங்கள் இருப்பிடத்துடன் கூடிய தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகச் சென்று சேரும்.

பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்குத் தேவையான வழிமுறைகளை அறிந்துகொள்வதுடன், பொதுவெளியில் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தயங்காமல் தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் புகார் அளிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com