

ஒரு மனிதன் நகைச்சுவை உணர்வு இல்லாமல் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்றுதான் சொல்ல முடியும். சிறந்த நகைச்சுவை என்பது நாமே சொல்லிவிட்டு நாமே சிரித்துக் கொள்வது போல் இருக்கக் கூடாது. அதை கேட்கும் எதிர்தரப்பினர் பல மணி நேரங்களுக்குப் பிறகும் கூட நினைத்துப் பார்த்து சிரிப்பது போல் இருக்க வேண்டும்.
ஒரு சிலர் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள். குழந்தைத்தனமான மனதில் பழி உணர்ச்சியோ, தீய எண்ணங்களோ தோன்றாது. நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு மருந்தாக இருந்து மனக்காயங்களை ஆற்றுவது நகைச்சுவை உணர்வுதான்.
கடினமான சூழ்நிலைகளில் கூட இந்த நகைச்சுவை உணர்வு இருந்தால் மட்டும் போதும். அது நம்மைக் காப்பாற்றி விடும். சிலர் நகைச்சுவை என்ற பெயரில் பிற மனிதர்களின் உணர்வுகளை புண்படுத்துவார்கள். இது மிகவும் தவறு.
கீழே விழுபவரை பார்த்துச் சிரிப்பது, பிறருடைய துன்பத்தைக் கண்டு மகிழ்வது நகைச்சுவை உணர்வு இல்லை. நம்முடைய பேச்சு யார் மனதையும் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் சிரிப்பது என்பது வெகுவாகக் குறைந்து வருகிறது.
நகைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம். மனதில் மகிழ்ச்சியோடு, உதடுகளில் புன்னகை தவழ வாழ்க்கை குறித்த புரிதலோடு வாழ்வது என்பது மிகவும் சிறப்பு. நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் விசாலமான சிந்தனை, விட்டுக் கொடுக்கின்ற தன்மை, சக மனிதர்களை மதிக்கின்ற பண்பு, எதிலும் நேர்மை போன்ற பல நல்ல இயல்புகள் அவர்களுக்கு தானாகவே வந்து விடுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கையும் சந்தோஷமாக இருப்பதுடன், அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.
நகைச்சுவை உணர்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதுடன், மனித ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் அவசியமாகிறது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பதற்றம், கவலை மற்றும் மன அழுத்தத்தை இந்த நகைச்சுவை உணர்வு உடனடியாக குறைத்து விடுகிறது.
நாம் சிரிக்கும்போது உடலுக்குள் 'எண்டோர்பின்' போன்ற மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது நம் மனநிலையை லேசாக்குகிறது. மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படுகிறது. வாழ்க்கையில் தோல்விகளோ, சோதனைகளோ வரும்பொழுது, அதை நகைச்சுவை உணர்வோடு எதிர்கொள்பவர்கள் எளிதில் சோர்ந்து போவதில்லை. சிறிய புன்னகையுடன் கடந்து செல்லும் மனப்பக்குவத்தை இந்த நகைச்சுவை உணர்வு நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
உண்மையில் நகைச்சுவை உணர்வு என்பது எளிதான விஷயம் இல்லை. சரியான நேரத்தில் சரியான இடத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது உண்மையிலேயே ஒரு மாபெரும் கலை தான். இது சிலருக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும்.
பலர் இந்தக் கலையை முயற்சி செய்து தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை வளர்த்துக் கொள்ள எளிதான வழி உண்டு. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நகைச்சுவையான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் நம் மனநிலையை முதலில் தயார்படுத்திக் கொள்ளலாம்.
பேசும்பொழுது ஓரிரு வரி நகைச்சுவைகள் கலந்து பேசிப் பழகலாம். தேவைப்பட்டால் பழைய ஜோக்குகள் கூறி மற்றவர்களை சிரிக்க வைக்கலாம். முக்கியமாக பஞ்ச் லைன் கொடுக்கத் தவற வேண்டாம். அடுத்ததாக நம் நகைச்சுவைக்கு நாமே சிரித்துக் கொள்ள வேண்டாம்; மற்றவர்கள் சிரிக்கட்டும்.
நம்மைச் சுற்றியுள்ள சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் இந்தக் கலை நம் வாழ்வை என்றும் இனிமையாக்கும். புதுப்புது நண்பர்களை உருவாக்கிக் கொடுக்கும். உறவுகளுக்குள் சுமுகமான நிலையை ஏற்படுத்தும். பணியிடத்திலோ அல்லது குடும்பத்திலோ ஏற்படும் தர்ம சங்கடமான சூழ்நிலைகளை எளிதில் கடக்க உதவும். இப்படிப்பட்ட மனிதர்கள் எங்கு சென்றாலும் பிறரால் எளிதில் விரும்பப்படுவார்கள்.
வாழ்க்கையைப் புரிதலோடு எதிர்கொள்ளும் இந்த உன்னதமான கலையை வளர்த்துக் கொள்வது நல்லது. மனிதர்களுக்கு மட்டுமே உள்ள இந்த தனித்துவமான குணத்தை என்றும் கைவிடாது பழகிவர சந்தோஷமான வாழ்வைப் பெறலாம். நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம்.
வாழ்க்கையின் சவால்களையும் தோல்விகளையும் நகைச்சுவை உணர்வோடு எதிர்கொண்டு, மன அமைதியும் உடலாரோக்கியமும் பெறக்கூடிய உன்னதமான மனப்பக்குவத்தை வாசகர்கள் அடைவார்கள்.