

வைராக்கியம் என்ற சொல் விடாமுயற்சி, மனஉறுதி, மனக்கட்டுப்பாடு மற்றும் ஒரு குறிக்கோளை நோக்கிய தீவிரமான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிக்கும். தவறான வழியில் பிடிவாதம் பிடிப்பது வைராக்கியம் அல்ல; நேர்மையான பாதையில் தடைகளையும் தோல்விகளையும் தாண்டி முன்னேறும் மன உறுதியே உண்மையான வைராக்கியம். நல்ல வழியில் எடுக்கப்படும் வைராக்கியம் ஒரு மனிதனை வாழ்க்கையில் உயரச்செய்யும்.
வைராக்கியம் நிச்சயமாக ஒருவரை வாழவைக்கும். ஆனால் அது எந்த மாதிரியான வைராக்கியம் என்பதைப் பொறுத்து அதன் முடிவு அமைகிறது. வைராக்கியம் என்பது ஒரு குறிக்கோளை அடைவதற்காக மனதில் கொள்ளும் உறுதியான எண்ணமாகும்.
ஒருவர் தனது வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள எடுக்கும் நேர்மறையான வைராக்கியம் அவரை மிகச்சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும். அசராத உறுதியும், கடினமான உழைப்பும் பெரிய சாதனைகள் புரிய வழி வகுக்கும்.
வறுமையில் இருந்து மீண்டு வருவேன், நன்கு படித்து பெரிய ஆளாவேன் போன்ற வைராக்கியங்கள் ஒருவருக்கு உழைக்கும் ஆற்றலையும், விடாமுயற்சியையும் தரும். வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் வந்தாலும் தான் நினைத்ததை சாதிக்க நினைக்கும் வைராக்கியம் உள்ளவர்கள் எளிதில் எதற்கும் சோர்ந்து போவதில்லை. மீண்டும் மீண்டும் முயன்று இறுதியில்தான் எண்ணிய இலக்கை அடைகிறார்கள்.
தடைகள் வரும்போது தளர்ந்து போகாமல், இதை நம்மால் சாதித்துக் காட்ட முடியும் என்று உறுதியோடு போராடுவது வெற்றியைத் தேடித்தரும். அதேபோல் தீயபழக்கங்களை விட்டுவிட வேண்டும் என்று எடுக்கும் வைராக்கியம் உடலையும் வாழ்க்கையையும் நல்வழிப்படுத்தும். இப்படி பிறருக்கு தீங்கு நினைக்காமல், தன் சுயமுன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் நல்ல வைராக்கியம் ஒருவரை உன்னதமான முறையில் வாழவைக்கும்.
இன்றைய காலகட்டத்தில் நம் கவனத்தை திசை திருப்புவதற்குப் பல விஷயங்கள் உள்ளன. ஆனால் தன் லட்சியத்தின் மீது வைராக்கியம் கொண்ட ஒருவரால் தேவையற்ற ஆசைகளையும், தீய பழக்கங்களையும் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
யாரையும் எதிர்பார்த்து வாழாமல், தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வரவேண்டும் என்ற வைராக்கியம் ஒருவருக்கு சுயமரியாதையைத் தருகிறது. இது சமூகத்தில் அவருக்கான தனி அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.
தான் செல்லும் பாதை மற்றும் இலக்கு குறித்து தெளிவான வைராக்கியம் இருப்பவர்களுக்கு தேவையில்லாத குழப்பங்களோ அல்லது மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையோ இருக்காது. எனவே இது மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான வாழ்க்கையைத் தரும்.
ஆனால் அதுவே பழிவாங்கும் உணர்ச்சியுடனும், ஈகோ காரணமாகக் கொள்ளும் வைராக்கியமும் வாழ்க்கையை சீரழித்துவிடும். கோபத்தினாலும் வன்மத்தினாலும் உருவாகும் வைராக்கியம் நம் நிம்மதியைக் கெடுத்து தவறானப் பாதையில் கொண்டு போய் சேர்க்கும்.
தன்னை அவமானப்படுத்தியவரை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கோபத்திலும் வன்மத்திலும் எடுக்கும் முடிவு உறவுகளையும் வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கும். நியாயமே இல்லாத விஷயங்களில் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடிப்பது நம் நிம்மதியைத் தொலைத்துவிடும்.
வைராக்கியம் என்பது தவறான எண்ணங்களால் தூண்டப்படும் பொழுது மனிதனை அழித்துவிடும். தவறை உணர்ந்த பின்பும், நான் ஏன் இறங்கிப் போக வேண்டும்? என்று பிடிவாதம் பிடிப்பதும் உறவுகளை முறித்துவிடும்.
வைராக்கியம் என்பது கோபப்படுவது அல்ல; அமைதியாக சாதித்துக்காட்டுவதே. நல்ல விஷயங்களுக்கும், வளர்ச்சிக்கும் மட்டுமே வைராக்கியம் பயன்படும் பொழுது அது நம் வாழ்வை வளமாக்கும்.
அதுவே பழிவாங்கும் உணர்வாகவோ அல்லது தவறான பிடிவாதமாகவோ மாறினால் நமக்கு அழிவைத் தேடித் தரும். எனவே நல்வழியில் கொண்டு செல்லும் வைராக்கியம் தேவையா அல்லது அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் வைராக்கியம் தேவையா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
எது உண்மையான மனஉறுதி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, வீண் பிடிவாதங்களையும் ஈகோவையும் கைவிட்டு, சுயமரியாதையுடனும் நிம்மதியுடனும் உங்கள் இலக்குகளை அடையும் தெளிவைப் பெறுவீர்கள்.